தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (05-02-2023)

தினமணி

கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம், இதே பகுதியில் "ஓவிய பாரதி' நூல் குறித்துப் பதிவு செய்திருந்தேன். இப்போது அது போன்ற இன்னொரு அரிய தேடலில் கிடைத்திருக்கிறது "தமிழ் ஹரிஜன்'. அண்ணல் காந்தியடிகள் "ஹரிஜன்' என்கிற பெயரில் இதழ் நடத்தியது எல்லோருக்கும் தெரியும். அந்த இதழ் தமிழிலும் வெளிக்கொணரப்பட்டது என்பது காலப்போக்கில் மறந்துவிட்டது. அதைத் தேடிப்பிடித்து வெளிச்சம் பாய்ச்சியிருக்கும் கிருங்கை சேதுபதிக்கும் அவரது இளவல் அருணன் கபிலனுக்கும் தமிழ் தேசம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

பதிப்புத்துறை நால்வர்களின் நூற்றாண்டு தொடர்பாகத் தகவல்களைத் திரட்டும்போது, சின்ன அண்ணாமலையின் வாழ்க்கைக் குறிப்புகளில் அவர் "தமிழ் ஹரிஜன்' என்கிற இதழ் நடத்தியது தெரிய வந்தது. அதில் தொடங்கிய தேடலின் விளைவுதான் "தமிழ் ஹரிஜன்' இதழின் முதலாவது ஆண்டு இதழ்களின் தொகுப்பு.

காந்தியடிகளின் அனுமதியுடன், 1946 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய "தமிழ் ஹரிஜன்', அண்ணலின் அமரத்துவம் வரை தொடர்ந்திருக்கிறது. ராஜாஜி தலைமையில், காந்திஜியே "தமிழ் ஹரிஜன்' இதழைத் தொடங்கி வைத்தது மட்டுமல்ல, "தமிழ் ஹரிஜன்' என்று தமிழில் எழுதி சின்ன அண்ணாமலையிடம் வழங்கியுமிருக்கிறார்.

எட்டே எட்டு பக்கங்கள் கொண்ட "தமிழ் ஹரிஜன்' இதழுக்கு நாமக்கல் கவிஞரும், திருகூடசுந்தரம் பிள்ளையும் ஆசிரியர்களாக இருந்தனர். சின்ன அண்ணாமலை நிர்வாக ஆசிரியர். அவரது "தமிழ்ப்பண்ணை' வெளியீடாக வந்த "தமிழ் ஹரிஜன்', அண்ணலின் "ஹரிஜன்' கட்டுரைகளையும், செய்திகளையும் தமிழ் வாசகர்களுக்கு வழங்கி வந்திருக்கிறது.

முதலாண்டு வெளிவந்த 52 இதழ்களின் தொகுப்பைப் புரட்டத் தொடங்கி, படிக்கத் தொடங்கி, அதற்குள் ஆழ்ந்து மூழ்கிக் குறிப்புகள் எடுத்து, கடைசிப் பக்கத்துக்கு வந்தபோது, ஒருபுறம் மகிழ்வு, இன்னொருபுறம் சிலிர்ப்பு. அடடா, ஒரு யுக புருஷன் பிறந்து, வாழ்ந்து, மறைந்த மண்ணில் நாமும் பிறந்திருக்கிறோம் என்று நினைக்கும்போது, சொல்லவொணாப் பெருமிதம் ஏற்படுகிறது.

அண்ணலின் தொலைநோக்குப் பார்வையும், மனித நேயமும், எந்தவொரு பிரச்னை குறித்தும் அவருக்கு இருந்த தெளிவான பார்வையும் உலகின் எல்லா பிரச்னைகளுக்கும் "காந்தியம்' மட்டும்தான் தீர்வாக இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. தீண்டாமை, மொழிக் கொள்கை, மத நல்லிணக்கம், பொருளாதாரம், தேசியமயமாக்கல், மதுவிலக்கு, இறைப்பற்று, அஹிம்சையின் தாத்பரியம் என்று காந்தியடிகளின் கருத்துகளை எல்லாம் முதலாம் ஆண்டு "தமிழ் ஹரிஜன்' பதிவு செய்திருக்கிறது.

"ராமராஜ்யம்' குறித்த கேள்விக்கு அண்ணல் காந்தியடிகளின் பதில் பொட்டில் அறைந்தாற்போல இருக்கிறது. ராமராஜ்யத்தை முஸ்லிம்கள் "குதாய் ராஜ்யம்' என்றும், கிறிஸ்துவர்கள் "கர்த்தருடைய ராஜ்யம்' என்றும் கொள்ள வேண்டும் என்று அனாயாசமான விளக்கம் அளிக்கிறார் காந்திஜி.

முல்லை பதிப்பகத்துக்கும், கிருங்கை சகோதரர்களுக்கும் நன்றி என்று சொல்லி நிறுத்திவிட நான் விரும்பவில்லை. "தமிழ் ஹரிஜன்' அனைத்து இதழ்களும் தேடிப்பிடித்து தொகுக்கப்பட்டால்தான் அவர்களது பணி முடிவடைந்ததாகக் கொள்ள முடியும்.

------------------------------------------------------------

சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தபோது ரஹ்மத் பதிப்பக அரங்கில், பெண்மணி ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார் "தமிழ்நேயன்' எம்.ஏ. முஸ்தபா. கவிஞரும், எழுத்தாளருமான அவர் பெயர் அல்லி பாத்திமா. குமுளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுவதாகக் கூறினார். கேரள தமிழ் எழுத்தாளர்களில் அவர் குறிப்பிடத்தக்க ஆளுமை. 

கேரள அரசின் பாடத்திட்ட உறுப்பினராக இருக்கும் அல்லி பாத்திமா, பல இலக்கிய விருதுகளைப் பெற்றவர். அவரது படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பாடத்திட்டங்களில் இடம் பெற்றிருக்கின்றன.

"விடியலுக்கு நகரும் விண்மீன்கள்' என்கிற அவரது கவிதைத் தொகுப்பை அனுப்பித் தருவதாகச் சொன்ன அல்லி பாத்திமா, என்னிடம் தந்த அவரது இரண்டு படைப்புகள் "பாண்டிச்சி', "செல்லக் கருப்பி'. இரண்டுமே நாவல்கள். கேரள மாநில மலைவாழ் மக்கள் சார்ந்த பகுதியைக் கதைக்களமாகக் கொண்ட புதினங்கள். "பாண்டிச்சி' நாவலை நான் இன்னும் படிக்கவில்லை. படிக்க நேரம் கிடைக்கவில்லை.

"செல்லக் கருப்பி' நாவலைப் படித்தேன் என்பதைவிட ரசித்துப் படித்தேன் என்று சொல்ல வேண்டும். தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களாக வாழும் விளிம்புநிலை மக்களின் உணர்வுகளையும், வாழ்க்கைச் சவால்களையும் பின்னிப் பிணைத்து எழுதப்பட்டிருக்கும் புதினம்தான் "செல்லக் கருப்பி.

தமிழகமும் கேரளமும் இணையும் மலைப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தமிழும், மலையாளமும் கலந்த பேச்சு வழக்கு மட்டுமல்ல, பண்டிகைகள், உணவுப் பழக்கங்கள் என எல்லாவற்றிலும் ஒருவித கலப்பு உண்டு. எல்லாமே எல்லோருக்கும் பொது. குறிப்பாக, பண்டிகைகள்.

""தேயிலைக் கொழுந்து எடுப்பதைப் பார்த்தால் ஏதோ சும்மா கிள்ளிக்கிள்ளி அள்ளிப்போட்டு கூடையை நிரப்புவதாகத் தோன்றும். ஆனால், நுணுக்கத்துடன் கையும் மனமும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்'' என்று தொடங்கி, தேயிலைக் கொழுந்தைக் கிள்ளுவதிலிருந்து, அள்ளிக்கொண்டு நிறுவைக்குப் போவது வரையிலான நுணுக்கத்தை அல்லி பாத்திமா விவரித்திருப்பது, நாமே தேயிலைத் தோட்டத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

""சொந்த ஊரின் பற்றும் சாதிப்பற்றும் அடிமனதில் இருந்தாலும், அடிக்கும் காற்றில் பறக்கும் சருகுகள் போல் அது நிலையற்ற வேற்றுமைகளாகக் கலைந்துபோய்விடும்'' - இது அல்லி பாத்திமாவின் எழுத்துக்கு எடுத்துக்காட்டு.
செல்லக் கருப்பி அநீதிக்கு எதிராகக் கொதித்தெழுந்த கதையின் மண்வாசனை சற்று வித்தியாசமானது. அதில் தமிழும், மலையாளமும் கலந்திருக்கிறது - சொல்லிலும் உணர்விலும்!

ச. மணியின் "வெயிலில் நனைந்த மழை' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதை இது -
ஒன்றுக்கொன்று எவ்வளவுதான்
முரண்பட்டு நின்றாலும்
நிலத்திற்கு மழையை
அழைத்து வருவதென்னவோ
வெயில்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT