தமிழ்மணி

திருப்புகழில் திருக்குறள்

25th Sep 2022 06:36 PM |  தமிழாகரர் தெ. முருகசாமி 

ADVERTISEMENT

 

தமிழ் கூறுலகின் மகுடமாகத் திகழும் உலகப்பொது மறையாம் திருக்குறளைக் கையாளாத நூல்களே இல்லை என்பர். எனினும் இக்கருத்தில் சில விதிவிலக்காக உணரச் சில நூல்களும் உண்டு. அவற்றுள் அருணகிரிநாதர் பாடிய நூல்களுள் பெருநூலாக உள்ள திருப்புகழ் ஒன்றாகும்.
பொதுவாகவே அருளாளர்கள் பாடிய நூல்களுள் திருக்குறளாட்சியை வெளிப்படையாகக் காண்பது அரிது. அவற்றைச் செயல்முறையாகப் பொருத்திப் பார்ப்பதாகவே அமையும்.
அந்நிலையில் பதினாறாயிரம் பாடல் தொகை கொண்ட திருப்புகழில் தற்போதுள்ள இரண்டாயிரத்திற்குக் குறைவான பாடலுள் திருக்குறள் பதிவு இல்லாததால் அருணகிரிநாதருக்குத் திருக்குறள் தெரியாதா என எண்ண வேண்டியுள்ளதால் அக்குறையைப் போக்கும் விதமாகவே பொருத்திப் பார்க்கும் கல்விமுறை உத்தியை இக்கட்டுரை முன்னியம்புகிறது.
இறைவனை மொழிவழிக்காணும் அகரமுதல என்ற குறளின்படி (1) அருணகிரிநாதர் முருகனை அகரமுமாகி அதிபனுமாகி எனப் பழமுதிர்சோலையில் பாடியுள்ளார். திருக்குறளில் இன்ன கடவுள் எனப் பெயர் சுட்டாததற்கு மாறுபட்டதாய் முருகன் எனத் திருப்புகழில் கூறப்பட்டாலும் பொதுநிலையில் தெய்வம் என்பதாகவே உணர்ந்து தெளிய வேண்டும்.
திருப்புகழைச் சந்த இன்பத்தின் வழியே நோக்குதல் பெருவழக்காகும். இச்சந்தத்தை வண்ணம் என்பர். ஓசை இன்பமும் தாளக் கட்டுமே இதற்கு இன்றியமையாததாகும். இதனைப் "பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல்'  என்ற குறளின் (573) பொருள்வழி உணரலாம்.
எந்தத் தெய்வத் தமிழிசை அரங்கிலும் திருப்புகழ் இசை ஒன்று பாடப்பெறும். இதுபற்றி யாழ் நூலாசான் விபுலானந்தர் மாணாக்கரின் வினாவிற்குத் தந்த விளக்கத்தால் தெளிவடையலாம். "சிற்றின்பத்தை மிகுத்தும்பாடும் பாடலில் தெய்வீகம் பாடுவது முரணாக உள்ளதே' என மாணாக்கர்கள் கேட்டபோது "களப்பிரர் காலத்தில் தொலைந்து மறைந்த பழந்தமிழ் இசையை ஞானசம்பந்தர் மீட்டெடுத்த பின்னர் தொய்வுபட்டதை அருணகிரியாரே மீட்டுருவாக்கினார். இதுபோன்ற வேறொரு தமிழிசை நூலைக் காட்டி விட்டால் சிருங்காரச்சுவை எனக்கூறும் திருப்புகழை வங்காள விரிகுடாக் கடலில் வீசிவிடலாம்' என்றாராம், விபுலானந்தர் என்றால் பண்ணிசையைப் பாதுகாத்தப் பெட்டகம். திருப்புகழை உணர்தற்குப் "பண் என்னாம் பாடற்கியைபின்றேல்' என்ற குறட்பொருளே ஆதாரம் எனலாம். 
திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் இறைத் திருவடியை மட்டுமே கூறுவார். அவ்வாறே அருணகிரியாரும் முருகன் திருவடிப்புகழ்ச்சியையே சிலாகிப்பார். இறை என்ற பொதுமை முருகன் என்பதாய்ச் சுட்டினாலும் இறைமை என்ற பொதுமையை ஒரோவழி உணர வேண்டும்.
இல்லற மாண்பில் "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை'யை அய்யன் திருவள்ளுவர் போற்றும் பாங்கைப் புராணக் கருத்தின் வழி அருணகிரியார், முருகன் தன் தந்தை சிவனுக்குக் காது குளிர உபதேசித்ததான வகையில் குழந்தையின் பேரறிவை மழலை இன்பமாய் அனுபவித்ததைப் பல இடங்களில் கூறியுள்ளார்.
மானுடச் சமூகத்தின் வாழ்வியலில் "நிலையாமை' என்னும் ஒன்றையே நிலைத்ததாக வள்ளுவர் கூறுவார். அதனைப் பற்பல திருப்புகழில் பதிவு செய்துள்ளார் அருணகிரிநாதர். ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதமாகத் திரு
விடைமருதூர்த் திருப்புகழான 
"அறுகுநுனி பனியனைய சிறிய துளி' என்ற பாடலைக் கூறலாம். இதில் வாழ்க்கை, செல்வம், இளமை, தேகம், மூப்பு போன்ற எல்லாம் நிலையாமைக்குரியன என்பதால் வாழுங் காலத்திலேயே "பற்றுக பற்றற்றான் பற்றினை' என்ற குறள்படியும் (350 ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தால் வானுறையும் தெய்வமாகி விடலாம் (50) என்றபடியும் வள்ளுவக் கோட்பாட்டை வரையறுத்துக் கூறுகிறார் அருணகிரிநாதர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT