தமிழ்மணி

எது கைவிடினும் எதுகை விடாது

பிலோமினா சந்தியநாதன்

யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். பாடல் இன்பத்திற்கும் சிறப்பிற்கும் தொடை உறுப்பான மோனை எதுகை மிக வேண்டுவதாகும்.  "தொடையற்ற பாட்டு நடையற்றுப்போகும்' என்பது பழமொழி.  வெவ்வேறு அடிகளின் அல்லது  பாடல் அல்லது சீர்களின் இரண்டாம் எழுத்துக்கள் ஒத்து வரின் எதுகை எனப்படும்.  ஒரு பாடலின் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை .  

கீழ்வரும் குறட்பா அதற்குச்சான்று 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

சீர்தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை
துப்பார்க்குத்  துப்பாய  துப்பாக்கித்  துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

இந்தக் குறட்பாவின் ஒவ்வொரு சீரிலும் முதல் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை ஆகும். 

அதனற்றான் தொல்காப்பியர் "அடி  எழுதொன்றின் எதுகை'  என்று சொல்லிப்போந்தார். நமது இனிய தமிழ்மொழியில் வெளிவந்த பாடல்கள் எதுகையால் மேலும் சிறப்புப்பெற்று பொலிவுடன் திகழ்வதும் கண்கூடு. அறம் உரைத்து உலகுக்கு வழிகாட்ட வந்த வள்ளுவர், எதுகையின் திறம் அறிந்து திருக்குறள் முழுமையிலும் எதுகையினைப் பயன்படுத்திப் பாடல்களுக்கு மேலும் சிறப்புச் சேர்த்திருப்பார்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் எனமொழிந்து அக்குறட்பாவில் சொல்லிய பொருளுக்கும் எதுகையால் சிறப்புச் சேர்த்திருப்பபபார். கம்பர்  எதுகையின் சிறப்பையும் அது ஏற்படுத்தும் இன்பத்தையும் நன்கு அறிந்தவர். அவர் எதுகையின் பொருளறிந்து அதனைப் பாடல்களில் கொண்டுபோய்ச் சேர்த்திருப்பார்.

இடையில் கட்டிய மரவுரியுடையினனாய், நிரம்பிய மகிழ்வு கொண்டவனாய் கானகம் சென்றான் இராமன் என்று கூறிமிடதத்து, "சுற்றிய' என்னும் தொடருக்கு இணையாக "முற்றிய' என்னும்  தொடரைப் போட்டிருப்பார். 

சுற்றிய சீரையன் 
முற்றிய உவகையன் 
எத்தகைய இன்பம் நமக்கு?

இன்றும் ஊர்ப்புறங்களில் அதிகம் படிக்காதவர்களும் "எண்ணங்களில் வண்ணங்களைக்குழைத்து' எனவும்

"சிட்டுக்குருவி தன் பட்டுச்சிறகை விரித்து' என்றெல்லாம் பேசுவதைக் கேட்கலாம். மேலும் பாடலை மனனம் செய்து  நினைவில் வைத்துக்கொள்வதற்கு எதுகை உற்ற தோழனாய் உதவி செய்யும் என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அதனாற்றான் "எது கைவிட்டாலும் எதுகை விடாது' என்றார் வாரியார் சுவாமிகள். 

மேலும் பாடலுக்கு எழில் சேர்ப்பதும் எதுகையே ஆகும். இது போன்று  பாடல் உறுப்புகளில்  எதுகை என்பது வேறு எம்மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை.  பாடலுக்கு எழில்  சேர்ப்பதிலும் அப்பாடல் நின்று நிலைப்பதற்கும் இவ்வெதுகையே உற்ற துணை ஆகும். 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT