தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (25-09-2022)

25th Sep 2022 06:39 PM

ADVERTISEMENT

 

"பவளவிழா காணும் தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு வாழ்த்துகள்' என்று சொல்லி நிறுத்திவிட முடியவில்லை. பவளவிழா மலருக்குக் கட்டுரை அனுப்பாவிடிலும், குறைந்தபட்சம் வாழ்த்துச் செய்திகூட அனுப்பாமல் விட்டதற்கு என்னை மன்னிக்கவும் என்பதையும் நான் சேர்த்துக் கொள்ள வேண்டும். "பணிச்சுமை', "இயலாமைக்கு வருந்துகிறேன்' என்று நான் தட்டிக்கழிக்க விரும்பவில்லை. எனது கையறு நிலையைச் சொல்லி நழுவவும் விரும்பவில்லை.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இப்போதைய பொதுச்செயலர் நண்பர் என். கண்ணனும், முன்னாள் பொதுச்செயலர் இரா. முகுந்தனும் பலமுறை என்னைத் தொடர்பு கொண்டு நினைவுபடுத்தியும், குறித்த நேரத்தில் வாழ்த்துச் செய்திகூட அனுப்பாமல் இருந்தது எனது தவறுதான். தலைநகர் தில்லியில் தமிழ் பரப்பும் அரும்பணியை ஆற்றிவரும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சேவையைப் பாராட்டக் கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட்ட குற்ற உணர்ச்சியுடன்தான் இதை எழுதுகிறேன். 

"தினமணி' தில்லி பதிப்பு தொடங்கப்பட்டபோது, நமக்குக் கிடைத்த முதல் ஆதரவு தில்லித் தமிழ்ச் சங்கத்திடமிருந்துதான். அதற்குப் பிறகு தொடர்ந்து பல நிகழ்வுகளை தினமணியும், தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தியபோது, தலைநகர் தில்லியில் மட்டுமல்ல, தமிழகம்வரை அவற்றின் தாக்கம் பரந்து விரிந்தது. இந்தியாவில் உள்ள தமிழ் இலக்கிய அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து நாங்கள் நடத்திய தமிழ் இலக்கிய மாநாட்டை, "தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல்' என்று மேதகு அப்துல் கலாம் குறிப்பிட்டது சம்பிரதாய வார்த்தையல்ல, உண்மையிலும் உண்மை.

ADVERTISEMENT

தலைநகர் தில்லியில் தமிழ் குறித்தும், தமிழகம் குறித்தும் பரவலான புரிதல் ஏற்படுவதற்கு தில்லித் தமிழ்ச் சங்கம்தான் முதன்மையான காரணம். 1946ஆம் ஆண்டு தமிழ் வருடப் பிறப்பன்று ராவ் பகதூர் சி. குப்புசாமி முதலியார் தலைமையில், அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி முன்னிலையில் தில்லி தல்கத்தோரா கிளப் கட்டடத்தில் தொடங்கப்பட்ட தில்லித் தமிழ்ச் சங்கம் இப்போது தனது சொந்தக் கட்டடத்தில் செயல்படுகிறது என்பது மட்டுமல்ல, தலைநகர் தில்லியின் அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
"தில்லியில் உள்ள தமிழன்பர்களை ஒன்றுகூட்டித் தமிழ்ச் சுவையை அவர்கள் அனுபவித்துப் பயன்பெறும் பொருட்டு இயல் இசை நாடகம் என்று முத்துறைகளிலும் தமிழ் மொழியை விருத்தி செய்வதும், தமிழ் இலக்கியம் பற்றியும், தமிழ்ப் பெரியோர்களைப் பற்றியும், தமிழரல்லாத மற்றையோரிடையே மற்ற மொழிகளில் தமிழ் குறித்து பிரசாரம் செய்வதும் சங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்' என்கிறது 1947இல் வெளியிடப்பட்ட "சங்க விதிகள்'.

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் உரையாற்றாத தமிழ் ஆளுமையே இல்லை எனலாம். தமிழக அரசியல் தலைவர்கள், தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு அழைக்கப்படுவதையும், அங்கு பாராட்டப்படுவதையும் தங்களுக்குக் கிடைத்த பெருமையாகக் கருதினர். கடந்த 75 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான இலக்கியக் கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் என்று தலைநகரில் தமிழோசை கேட்க வழிகோலும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பங்களிப்பு மலைப்பை ஏற்படுத்துகிறது.

பவளவிழா மலரில் பங்களிக்காத எனது குறையை, பவளவிழா மலர் குறித்தும், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பு குறித்தும் எழுதி சற்று தணித்துக் கொள்கிறேன். அற்புதமான இலக்கியப் பெட்டகமாக தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பவளவிழா மலரை உருவாக்கி இருக்கும் பதிப்பாசிரியரும், பொதுச் செயலாளருமான என். கண்ணனுக்கும், தொகுப்பாசிரியர் இரா. இராஜ்குமார் பாலாவுக்கும், பி. குருமூர்த்தி, ஜோதி பெருமாள், ஜோதி ராமநாதன், தேன்மொழி முத்துக்குமார் உள்ளிட்ட மலர்க் குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

"வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு' என்று முழங்கிய மகாகவி பாரதியார் வழியில் பயணிக்கும் தில்லித் தமிழ்ச் சங்கம், தமிழ் வாழும் காலம் வரை தனது தமிழ்ச் சேவையைத் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்!

-------------------------------------------


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கான தலைவர் தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. முன்னாள் தலைவர் ராகுல் காந்தி "பாரதத்தை இணைப்போம்' என்று பாதயாத்திரை சென்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ்காரர்கள் எத்தனை பேருக்கு நூற்றாண்டு கடந்து செயல்படும் காங்கிரஸ் பேரியக்கம் குறித்துத் தெரியும் என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

விமர்சனத்துக்கு வந்திருந்தது மறைந்த தமிழறிஞர் பெ.சு. மணி எழுதிய "இந்திய தேசிய காங்கிரஸின் தந்தை ஏ.ஓ. ஹ்யூம்' என்கிற சிறுநூல். பாரதியார், அரவிந்தர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் குறித்தெல்லாம் சாமானியர்களுக்குப் புரியும் விதத்திலும், பலருக்கும் தெரியாத தகவல்களைத் திரட்டியும் தமிழில் தந்திருக்கிறார் ஆராய்ச்சி அறிஞர் பெ.சு. மணி. இவர், "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யின் சீடர் என்பது கூடுதல் சிறப்பு.

அவரது ஏ.ஓ. ஹ்யூம் குறித்த புத்தகத்தைப் படித்தபோது புதிய செய்தி ஒன்று தெரிந்தது. பல மாநில அமைப்புகள் தோன்றி, அவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்திய தேசிய காங்கிரஸ் என்பதுதான் அந்த செய்தி. அந்த ஒருங்கிணைப்பைச் செய்தவர் ஏ.ஓ. ஹ்யூம். அவர் பிரிட்டிஷ்காரராக இருந்தார் என்பதும், அன்றைய காலனி ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பதும் விமர்சிக்கப்படுகிறது. அந்த விமர்சனங்களைத் தாண்டி, இந்திய தேசிய காங்கிரûஸ ஒருங்கிணைத்தவர் அவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அன்றைய கல்கத்தாவில் தொடங்கப்பட்ட "பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேஷன்', "இந்தியன் அசோசியேஷன்', சென்னையில் செயல்பட்ட "மெட்ராஸ் நேடிவ் அசோசியேஷன்', "சென்னை மகாஜன சபை', பம்பாயின் "பம்பாய் அசோசியேஷன் சபை', புணேயில் உருவான "பூனா சர்வ ஜனிக் சபை' ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவற்றை ஒருங்கிணைத்தவர் ஏ.ஓ. ஹ்யூம். அந்த அமைப்புகள் குறித்தும் அவற்றின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் அவற்றின் தலைவர்கள் குறித்தும் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்கிறார் பெ.சு. மணி. 

புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் அந்த இயக்கம் குறித்தும் சற்று தெரிந்து கொள்வது நல்லது. அதற்கு, பெ.சு. மணியின் புத்தகங்கள் உதவும்.

-------------------------------------------


புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்த நாடன் சூர்யாவின் "தட்டாதே திறந்திருக்கிறேன்' கவிதைத் தொகுப்பில் காணப்படும் கவிதை இது.
கூண்டுப் பறவைக்கு
சிறகும் பாரம்தான்.

ADVERTISEMENT
ADVERTISEMENT