தமிழ்மணி

கைம்முதல் இல்லை மாநிதி உண்டு 

18th Sep 2022 04:47 PM | முனைவர் ம.பெ. சீனிவாசன் 

ADVERTISEMENT

 

உடல் நலிந்து முதுகு வளைந்து எய்த்து இளைக்கும் முதுமைப் பருவத்தில், தனக்கு உதவுமென்று ஒருவன் சேர்த்து வைக்கும் செல்வமே, "எய்ப்பினில் வைப்பு' எனப் பெறுகிறது. எய்ப்பு என்பது தளர்ச்சி; வைப்பு என்பது செல்வம். இக்காலத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்குப் பணிக்கொடை, ஓய்வூதியம் போன்றவை கிடைப்பதால் முதியவர்களின் வாழ்க்கை கவலையின்றிக் கழிகின்றது. ஆனால் இதுபோன்ற ஓய்வூதியப் பயன்களும் பணமும் வங்கி நடைமுறைகளும் நாணயச் செலாவணிகளும் இல்லாத முற்காலத்தில் எதிர்காலத்துக்கான பொருளை மக்கள் எப்படிச் சேமித்திருக்கக்ககூடும்?

தாங்கள் ஈட்டியதில் ஒரு பகுதியைப் பொன்னாகவோ பொருளாகவோ பிறர்க்குத் தெரியாமல் மறைத்து வைத்திருக்கலாம். வேறு சிலரோ வயிறார உண்ணாமல் பசித்துக் கிடந்து, பொருள் சேர்த்து வைப்பதிலேயே குறியாக இருந்திருக்கலாம். இத்தகைய மனிதர்களைப் பார்த்துப் பிற்காலத்து ஒளவையார் இப்படிக் கேள்வி எழுப்புகிறார்:
பாடுபட்டுத் தேடிப் பணத்தைத் புதைத்துவைக்கும்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டிங்கு
ஆவிதான் போனபின் யாரே அனுபவிப்பர்
பாவிகாள் அந்தப் பணம்? (நல்வழி: 22)

இத்தகைய மனிதர்களைப் பற்றிய செய்தி பெரியாழ்வார் திருமொழியிலும் சிறிது வேறுபாட்டுடன் சித்திரிக்கப்படுகிறது. முதியவர் ஒருவர் மரணப் படுக்கையில் கிடக்கிறார். அவருடைய சுற்றத்தார் சுற்றிலும் நின்று அவரிடம் மாறி மாறிக் கேட்கிற கேள்வி ஒன்றுதான். "நீ சேர்த்து வைத்திருக்கிற பொருள் இருக்குமாகில் அதை எந்த இடத்தில் மறைத்து வைத்திருக்கிறாய் என்பதை எங்களுக்குச் சொல்லு' என்பதுதான் அது. அவர் உயிர் பிழைத்து எழவேண்டும் என்ற கவலை அவர் மனைவி உட்பட அங்கிருந்த எவருக்குமே இல்லை.

ADVERTISEMENT

அவர் உயிர் பிரிவதற்குள் பொருளை மறைத்து வைத்திருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிய வேண்டுமே என்ற ஒரே கவலைதான் அவர்களுக்கு.

இந்த அவலத்தை,
சோர்வினால் பொருள்வைத்த துண்டாகில்
சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர்வினவிலும் வாய்திற வாதே
அந்தகாலம் அடைவதன் முன்னம்... (373)
என்று காட்சிப்படுத்துகிறார் பெரியாழ்வார்.

இங்கு நாம் பார்த்த இவ்விருவரின் பாடல்களாலும், இது தொடர்பாக வழங்கி வரும் நாட்டார் கதைகளாலும் பொருளை "மறைத்து' வைக்கும் பழக்கம் முன்னாளில் இருந்தது என்பதை அறியலாம். பூமியில் புதைத்து வைக்கப்படுவதாலேயே பொருளுக்கு "வைப்பு' என்னும் பெயர் அமைந்தது என்னும் கருத்தும் இங்கும் நோக்கத்தக்கது.

இனி, இவ்வாறு செய்வதைப் பழித்து அறச்சிந்தனையை ஊட்டும் முறையில் அமைந்த தமிழ்ச் சான்றோர்களின் பாடல்கள் சில உண்டு. அவர்களுள் தலையாயவராய் விளங்கும் திருவள்ளுவர்,

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி- (226)

என்னும் குறளில், பொருளற்ற ஏழைகளின் பெரும்பசியைப் போக்குக; அது தான் செல்வனுக்குச் சேமிப்பிடம் என்கிறார். வைப்புழி என்பது வைக்கும் இடம். இல்லாதவனுக்குத் தானம் செய்த பொருளே ஒருவனுக்கு, "வைத்த மா நிதி' யாகும் என்பது கருத்து. தேடிப் புதைப்பதையும், பிறர் அறியாமல் மறைத்து வைப்பதையும் குறிப்பால் விலக்குகின்ற வள்ளுவர், "வறியவன் வயிறே ஒருவனுக்குச் சேமிப்பிடமாகும்' என்பதையும் வலியுறுத்துகிறார்.

இவ்வழியையே பின்வந்தோரும் சுட்டிக் காட்டுவதைக் காண்கிறோம்.

"பழமொழி நானூறு' நூலின் ஆசிரியர் முன்றுறையரையனார்,
வைத்ததனை வைப்பென்று உணரற்க; தாமதனைத்
துய்த்து வழங்கி இருபாலும் அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ
எய்ப்பினில் வைப்பென் பது
என்று பாடுகிறார்.

"தாம் தேடிச் சேமித்து வைத்த பொருளைத் தமக்கு உதவும் வைப்பு என்று கருதற்க. தாம் அப்பொருளை அனுபவித்து, இருமைக்கும் அழகிதாகத் தகுதியுள்ள இடம் பார்த்து அறத்தைச் செய்க. அவ்வாறு செய்கையன்றோ தாம் தளர்ந்த காலத்துத் தமக்குதவும் வைப்பு என்று சொல்லப்படுவது' என்பதுவே இதன் பொருளாகும்.

இப்பாடலில் இல்லாதவர்களுக்காக இம்மையில் செய்த நல்லறமே மறுமைக்கு ஆகும் என்னும் குறிப்பு "இருபாலும்' என்பதால் உணர்த்தப்பட்டுள்ளது. இங்ஙனம் மறுமைக்கு உதவும் என்று உணர்த்தப்பட்டதையே தூண்டா விளக்கினைப்போல் மேலும் ஒளிபெறச் செய்கிறது "அறநெறிசாரம்' என்ற நூலும்.

செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்து செல்வியராய்ப்
பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு - நல்லவாம்
தான மறவாத தன்மையரேல் அஃதென்பார்
வானகத்து வைப்பதோர் வைப்பு
தானம் மறவாத தன்மை வானக வாழ்க்கைக்குச் சேர்த்து வைத்த செல்வமாகும் என்பது கருத்து.
இதுவே பக்தி இலக்கியங்களில் மேலும் விரிவு பெறுவதைப் பார்க்கிறோம். திருக்கண்ணமங்கை என்னும் திருத்தலத்து இறைவனை,
ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை
எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை
காசினை மணியைச் சென்று நாடிக்
கண்ணமங்கையுள் கண்டுகொண் டேனே!
என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்

இங்கு இறைவனை அவர், "எய்ப்பினில் வைப்பு' என்றே சுட்டுதல் காண்க. "எனக்குக் கைம்முதல் இல்லாத போது அழித்துக் கெடுத்து உயிர்வாழும்படியான நிதியானவனை' என்று இதற்கு உரை விரிக்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. "கைம்முதல் இல்லையே' என்ற கவலை வேண்டா. எனக்கு மாநிதியமாக அவனிருக்கிறான் என்பது கருத்து. இதனடியாகவே திருக்கோளூர் இறைவனுக்கு "வைத்தமாநிதி' என்னும் பெயரும் வழங்குகிறது.

சைவத் திருமுறைகளிலும் இறைவனை "எய்ப்பினில் வைப்பாக'க்கண்டு போற்றுவதைக் காணலாம்.

"எய்ப்பானார்க்கு இன்புறு தேனளித்து' (1636)
என்பது திருஞானசம்பந்தரின் திருமணஞ்சேரி தேவாரம்.
வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே (5831)
என்பது திருநாவுக்கரசரின் திருக்குறுந்தொகை.
நல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை (7902)
என்பது சுந்தரரின் வலிவலம் தேவாரம்.

காலந்தோறும் தமிழ்நூல்கள் அறவழித்தடத்தில் நடந்து காட்டி "எய்ப்பினில் வைப்பு' இன்னது என்பதை நமக்கு உணர்த்தியுள்ளன. நீதிநூல் காலம், சமயநெறி காலம், பக்தி இலக்கிய காலம் எனக் காலம் மாறிய போதும் அறத்துக்கான அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை என்பதே இங்கு உணரத்தக்கஉண்மையாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT