தமிழ்மணி

அக்கினிக் குஞ்சு

அரங்க. இராமலிங்கம்


தெய்வத்தமிழ் எனச் செந்தமிழைப் போற்றுதல் மரபு. காரணம், ஈராயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்தும், இடையீடுபட்டுப் போகாமலும் நம் தமிழ்மொழியில் மட்டுமே இறைவனைப் போற்றித் துதிக்கும் பாடல்கள் மிகப்பல தோற்றம் பெற்றுள்ளன.

தெய்வத்தமிழ்ப் பாடல்கள் பலவற்றிற்கு மூன்று நிலைகளில் பொருள் கூறமுடியும். பொதுப்படையில் எல்லோருக்கும் தெரிந்த சொற்பொருள் விளக்கம். பொதுவெளியில் சொல் குறிக்கும் அகராதிப் பொருளை மட்டுமே கூற முடியும். ஆசிரியர் - மாணவர் என்ற உறவு நிலையில் வகுப்பு நடத்தும்போது பாடலின் உட்பொருளை விரித்து விளக்க முடியும்.

பாடலின் மெய்ப்பொருளை மூன்றாவது நிலையில் சீடன் உறவு முறையில் புலப்படுத்த முடியும். குரு மெய்ஞ்ஞானப் பாடல்களுக்கு மூன்று நிலைகளில் பொருள் கூறமுடியும். மெய்ஞ்ஞான குரு பரம்பரையில் குரு - சீடனுக்கு இடையே மட்டுமே நிகழும் ஒரு ஞானநிகழ்வு இது.

மகாகவி பாரதியாரின் ஒரு பாடலுள் இந்த மூன்று நிலைகளில் பொருள் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். 
அக்கினிக் குஞ்சு என்ற தலைப்பில் மகாகவி பாரதியார் ஒரு சிறு பாடலைப் பாடியுள்ளார். பெரும்பொருளை அடக்கிய இந்தப் பாடல் மூர்த்தி (வடிவம்) சிறிதாயினும் கீர்த்தி (உள்ளார்ந்த பொருள்) மிகப் பல உடையது.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை 
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; 
வெந்து தணிந்தது காடு; - தழல் 
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? 
தத்தரிகிட  தத்தரிகிட  தித்தோம்.

என ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார் மகாகவி பாரதியார். அக்கினிக்குஞ்சு என்ற சொல்லை நெருப்பின் துளி என்றும் நெருப்பின் தளிர் என்றும் குறிப்பிடலாம். ஆனால் அக்கினிக் குஞ்சு என்ற சொல் வீரியம் கொண்டதாகத் திகழ்கின்றது. 

பொது நிலையில்: ஒரு பெரிய காடு. அதை அழித்து நிலமாக்கிப் பயிரிட வேண்டும். பெருங்காட்டை எப்படி அழிப்பது? சிறுகாடாக இருந்தால் ஒரு சிறுவண்டி நெருப்பையும் பெருங்காடாக இருந்தால் ஒரு சுமையுந்து (லாரி) அளவிற்கு நெருப்பையுமா கொண்டு எரிப்பார்கள்? எவ்வளவு பெரிய காடாக இருந்தாலும் ஒரு தீப்பொறி அல்லது ஒரு நெருப்புப் பொறி போதும் பெருங்காடே எரிந்துவிடும்.

"ஒரு மிகச்சிறிய நெருப்புப் பொறி மிக, மிகப் பெரிய காட்டையே அழித்து விடுகிறதே" வியந்து வியந்து ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார் மகாகவி பாரதியார்.

ஆசிரியர் மாணவர் நிலையில்: இந்தப் பாடலை மேற்சொன்ன விளக்கங்கள் பல அளித்துவிட்டு அடுத்த நிலைச் சிந்தனைக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

நம் பாரத தேசத்தில் மக்களிடம் அடிமைத்தனம், அறியாமை, சோம்பல், பொறுப்பின்மை, சுயநலம் என்ற பண்புகள் மிகுதியாகப் பெருங்காடுபோலப் பற்றிப் படர்ந்துள்ளன. இவற்றை எப்படிப் போக்குவது அல்லது அடிமைத்தனப்போக்கை அழிப்பது எப்படி என நினைத்த மகாகவி பாரதிக்கு ஓர் எண்ணம் பளிச்சிட்டு மறைகிறது. ஆம் அவருக்கு விடை கிடைத்துவிட்டது. அறிவு எனும் நெருப்புப் பொறியால் அடிமை, அறியாமை ஆகிய பெருங்காட்டை எரித்துவிடலாம் என நினைக்கிறார்.

விடுதலை உணர்வு எனும் நெருப்புப் பொறி பற்றினால் போதும்; அடிமை விலங்கு அறுந்து விழும்.
நாமிருக்கும் நாடுநமது என்ப தறிந்தோம் - இது 
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப் 
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி 
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம் என விடுதலை வேட்கை கொழுந்துவிட்டு எரிவதற்காக இப்பாடலைப்  பாடியுள்ளார் என விளக்கம் தரலாம்.
மெய்ப்பொருள்: மூன்றாவதாக குரு - சீடன் என்ற உறவு முறையில் இப்பாடலுக்கு மெய்ப்பொருள் விளக்கம் தரலாம். தகுதியுடைய சீடனுக்கு மட்டுமே மெய்ப்பொருள் விளங்கும். ஏனையோர் கேட்பர்; உள்வாங்கினாரிலர்.
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தார் 
அல்லார்முன் கோட்டி கொளல். - 720

என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சத்திய வாக்கு.

மெய்ஞ்ஞானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் இல்லாதவரின் முன் மெய்ஞ்ஞானப் பொருள் பற்றி விரித்துப் பேசுவது தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது என்கிறார் திருவள்ளுவர். மற்றொன்றையும் திருவள்ளுவர் சொல்லுகிறார். மெய்ப்பொருளை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வத்தோடு உன்னை நாடிவரும் தகுதியுள்ள, உணர்வுள்ள சீடனுக்கு மெய்ப் பொருளை விரித்துக் கூறு எனவும் கட்டளையிடுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. - 718
என்கிறார்.

தகுதியுடைய, நல்ல பண்புடைய அறிவை அறிய வேட்கையுடன் மெய்ஞ்ஞானத் தாகத்துடன் இருக்கும் சீடனுக்கு மெய்ப்பொருளின் மெய்நிலையை விளக்கிச் சொல்லலாம். அவ்வாறு விளக்கிச் சொல்லுதல் தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தது போன்றது என்பது தெய்வப்புலவரின் திருவாக்கு. இப்பாடலுக்குப் பின்வருமாறு மெய்ப்பொருள் விளக்கம் அளிக்கலாம்.

1.அக்னி - பேரறிவுப் பெரும்பிழம்பு
2.குஞ்சு குருவின் உபதேசம் 
3.கண்டேன் - குருபிரான் மெய்ப்பொருளைக் காட்டச் சீடன் கண்டு கொண்டு கொள்வது.
4.காடு - பலநூறு பிறவிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அறியாமையாகிய பெருங்காடு. 
5.வெந்து தணிந்தது காடு - குருபரனின் உபதேசத்தால் பிறவிக்காடு வேரோடு வெந்து அழிந்தது. 
தணிந்தது மெய்ஞ்ஞான நெருப்பால் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும். இவற்றின் உருவமான அறியாமையும் சுட்டு எரிக்கப்பட்டால் இனி பிறவியில்லை. பிறவிச் சுழற்சியில் அமைதி பேரமைதி - உயிர்வேட்கை தணிந்தது. ஐம்புலவேடர் வெந்து மாய்ந்தனர்.
6.குஞ்சு, மூப்பு - நெருப்பில் சிறியது பெரியது உண்டோ? ஞான நெருப்பும் அப்படியே. நாம் காணும் புறநெருப்பு தான் பற்றிய காட்டை மட்டுமே சுட்டு எரிக்கும். அகநெருப்பாகிய ஞான நெருப்பு, பற்றியவனின் முன்னேழ் பின்னேழ் பிறவிகளையும், உடன்பிறந்தார். சுற்றாத்தார் பிறவிப் பிணியையும் சுட்டு எரிக்கும் வல்லமை உடையது.

இதற்கு மேலும் விரித்துரைக்க இடமுள்ளது. உணர்வுடையோர் உணர்ந்து உணர்ந்து மெய்ப்பொருளைக் காண்க! உணர்க! உய்தி பெறுக!

இன்று (செப்.11) மகாகவி பாரதியார் 101-ஆம் நினைவு நாள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT