தமிழ்மணி

கம்பர் காட்டும் அந்த ஆள்!

பாரதிமணியன்


கம்பராமாயணம், யுத்த காண்டம், முதற் போர்புரிபடலம். அதில் அமைந்த இறுதிச் செய்யுளில் அந்த "ஆள்' நிற்கிறார்.

ஆளை யாவுனக் கமைந்தன மாருதம் அறைந்த
பூளை யாயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாவென நல்கினன் நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்

இராமபிரான் இராவணனை நோக்கி, "உனக்குத் துணையாய் அமைந்த சேனைகள், பெருங்காற்றினால் சிதறப்பட்ட பூளைப் பூக்கள் போல் ஆயின என்பதை நீ நேரில் பார்த்தாய். இன்று நின் இருப்பிடம் சென்று, என்னோடு மீண்டும் போர்புரிய விரும்பினால் நாளை வருவாயாக' என்று கூறியவராய் அவனை விடுத்தார்.

பாடலின் இறுதி ஏழு சீர்களில் இராமனுடைய பெருமை பேசப்படுகிறது. "மிகவும் இளைய கமுக மரத்தின் மீது வாளை மீன்கள் துள்ளிப் பாயும் நீர்வளம், நிலவளம் அமைந்த கோசல நாட்டிற்குத் தலைவனும் வள்ளலும் ஆகிய இராமன் என்பது பொருள்.

இனி அந்த "ஆளை'க் காண்போம்.  

"ஆள் ஐயா'- அரக்கரை ஆட்சிபுரின்ற ஐயா (நம்முடைய உரையாசிரியர்கள் பதவுரைப் பகுதியில் இப்படித்தான் எழுதுகிறார்கள்). "ஐயா! உமக்கமைந்த ஆள், மாருதம் அறைந்த பூளையாயின கண்டனை' என ஆளை இடம் மாற்றி நிற்க வைத்து உரை கூறுவதும் உண்டு. உனக்கு அமைந்தன காலாட்படைகள் பூளை ஆயின என்பது கருத்து. ஆள் என்பது காலாள்.

"முந்துற்றுப் பொரும்படை' (முதலில் சென்று போரிடும் படை) ஆதலால் காலாளை சிறப்பித்துக் கூறினார். ஏனை படைகளும் உபலட்சணத்தால் கொள்க' என்பது இதற்குரிய விளக்கம்.

"ஆள, யா உனக்கு அமைந்தன' என்ற பாடமும் உண்டு. "இனி ஆள்வதற்கு உனக்கு அமைந்தன யாவை' என்று பொருள் சொல்வார்கள். "ஐயா, நீ இப்போது உயிரோடு நிற்கும் ஓர் ஆள், அவ்வளவுதான். வேறு எந்தச் சிறப்பும் உனக்கு இல்லை' எனவும் உரை காண்பது உண்டு. "ஆளை ஆள்நிலை அறிவது அல்லது மற்று அறிபவர் யார்' எனவரும் வில்லிபாரதத் தொடர் இந்த உரைக்கு அரண்.

"ஆள் ஐயா- நீ இப்போது அடிமை ஐயா - இதுவும் ஓர் உரை. இச்சொல் இப்பொருளில் சமய இலக்கியங்களில் வருவதைக் காணலாம். "ஆள் ஆகார், ஆள் ஆனாரை அடைந்து உய்யார்' என்னும் அப்பரடிகள் வாக்கு ஒரு சான்று.

டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூலகப் பதிப்பில், "ஆள் ஐயா: பிறகுறிப்பு' என ஒரு குறிப்பு காணப்படுகிறது. "ஆள் ஐயா என்பது இகழ்ச்சிக் குறிப்பு' என்கிறார் வை.மு.கோ. இக்குறிப்புகள் உணர்த்துவது யாது?

"ஆள்' என்னும் சொல்லுக்கு "வீரன்' என்னும் பொருள் உண்டு. "எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்து உதவும் நல்லாள் உடையது அரண்' என்பது திருக்குறள். "அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி "நல் ஆள்' என்பது பரிமேலழகர் விளக்கம்.

இசையும் செல்வமும் உயர்குலத்து இயற்கையும் எஞ்ச, வசையும் கீழ்மையும் மீக்கொளக் கிளையொடும் முடிய முடிவெடுத்த இராவணன், "ஆள்' எனத் தகுவானா? "வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு' நின்ற இராவணன் "ஆள்' எனத் தகுவானா?

பீடுநடையிட்டுச் செல்ல வேண்டிய இராவணன் பூதலம் என்னும் நங்கை தன்னையே நோக்கிப்புக்கான் எனக் கம்பர் பின்னர் கூறுவார்.  அவனுடைய மறமும் மானமும் தொலைந்துவிட்டன ஆதலின் இங்ஙனம் இராவணனை அனுப்புகிறார் கவிச்சக்கரவர்த்தி.

எனவேதான் இராமபிரான் இகழ்ச்சிக் குறிப்புப் புலப்படும்படியாக "ஆள் ஐயா' என்கிறார். "நீ ஒரு வீரனா' என்பது கருத்து. "ஆள் ஐயா?' என்பது ஒலிக் குறிப்பினால் வினாப் பொருள் தருகிறது. வினா அல்லாத ஒன்று வினாவாகப் பயன்படுதல் "காகுஸ்வரம்' எனப்படும்.

ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடு வில்லாளோ
தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு 
                                                                                       சொல்லன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ
என்பது குகனது வீர உரை. ஏழைமை வேடன் இறந்திலன்? (எளிமையையுடைய இவ்வேடன் இங்ஙனம் மானகெட வாழ்தலினும் இறந்திருக்கலாகாதா?) என முன்னரும் கம்பர் இந்த உத்தியை பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு இது ஒரு சான்று.
"ஆள் ஐயா: பின்குறிப்பு' என டாக்டர் உ.வே.சாமிநாதையர் குறிப்பது இதுவாக இருக்குமோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT