தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (02-10-2022)

DIN

ஆண்டுதோறும் எழுத்தாளர் சிவசங்கரி தனது பிறந்தநாளையொட்டி  ஒரு ஞாயிற்றுக்கிழமை உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைத்து விருந்தளித்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அகவை எண்பது நிறைவடைந்ததைக் கொண்டாட சென்னை சவேரா ஹோட்டலில் கர்நாடக இசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீயின் நிகழ்ச்சியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை விருந்தளித்தார். 

செய்தி ஆசிரியர் பாவைசந்திரன், துணை செய்தி ஆசிரியர் ராஜ்கண்ணனுடன் நானும் அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தென்சென்னையின் "யார் எவர்' பட்டியலில் உள்ளவர்களில் பெரும்பாலோர் அங்கே குழுமியிருந்தனர். திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், வானதி பதிப்பகம் ராமநாதன், பிரபல வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள் என்று பலரையும் அங்கே பார்க்க முடிந்தது. 

எழுத்தாளர் மாலன், அவரது சகோதரர் ரமணன், திருப்பூர் கிருஷ்ணன், உதயம் ராம், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், ரங்கராஜ் பாண்டே, "ராணி' வார இதழ் ஆசிரியர் ஜி. மீனாட்சி, "லேடீஸ் ஸ்பெஷல்' ஆசிரியர் கிரிஜா ராகவன் என்று பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒருசேர சந்திக்க அந்த நிகழ்ச்சி வாய்ப்பாக அமைந்தது. தாமதமாகச் சென்றதால், பலரை சந்திக்க முடியாமல் போனதில் எனக்கு சற்று வருத்தம்தான்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், தனது அகவை 75-ஐ ஒட்டி, ஆண்டுதோறும் சிறந்த சிறுகதைக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று சிவசங்கரி விரும்பினார்.  மூன்று ஆண்டுகள் "தினமணி கதி'ருடன் இணைந்து அந்தப் போட்டி நடந்தது. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக அது தடைபட்டு விட்டது.

உற்றார், உறவினர்கள் மட்டுமல்ல, நண்பர்கள், எழுத்தாளர்கள் என்று மிகப் பெரிய குடும்பத்துக்கு சொந்தக்காரர் எழுத்தாளர் சிவசங்கரி என்பதை அந்த நிகழ்வில் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் அனைவரையும் அழைத்துத் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கும் "சதாபிஷேக' சிவசங்கரியைப் பற்றி ஒற்றை வரியில் சொல்வதாக இருந்தால் - "குழந்தை மனசு'!

----------------------------------------------------------------------

தமிழகத்தில் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஒரு தலைமுறைக்கு ஏற்படுத்திய பெருமை எழுத்தாளர் கல்கிக்கு உண்டு. கதை மூலம் தமிழக வரலாற்றின் மீதும், வரலாற்றின் பின்புலத்தில் புதிய இலக்கியத்தின் மீதும் பற்றை ஏற்படுத்தியவர் அவர். அவரின் "பொன்னியின் செல்வன்' ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் கொஞ்சநஞ்சமல்ல. 

இப்போது எதற்கு அதெல்லாம் என்றால், நான் முதல் நாளன்று மணிரத்தினத்தின் "பொன்னியின் செல்வன்' திரைப்படம் பார்த்துவிட்டேன் என்கிற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான். ஆனால், அந்தத் திரைப்படம் குறித்து நான் பேச வரவில்லை.

எழுத்தாளர் கல்கியின் வாசகர்கள் சார்பில் இயக்குநர் மணிரத்தினத்துக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் "பொன்னியின் செல்வன்' நாவலைப் படமாக்க முற்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாவலுக்குக் கிடைத்திருக்கும் விளம்பரம் அமோகமானது. இன்றைய தலைமுறையினர் எல்லோரும் தேடிப்பிடித்துப் படிக்கத் தொடங்குகிறார்கள். அதற்காகவே பலர் தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்கிறார்கள்.

வரலாறு காணாத அளவில் "பொன்னியின் செல்வன்' புத்தகம் வெளியிட்ட எல்லா பதிப்பாளர்களும் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்திருக்கிறார்கள். பலர், நீண்ட காலமாகத் தாங்கள் மறந்து விட்டிருந்த தமிழ் படிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்கிறார்கள். அதற்காக மணிரத்தினத்துக்கு நன்றி.

----------------------------------------------------------------------

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கத்தை, பேராசிரியர் ய. மணிகண்டனுடன் தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் மார்ச் மாதம் சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு அன்பளிப்பாகத் தந்த புத்தகம், "பாரதியும் காந்தியும்'. எழுதியவர் வேறுயாருமல்ல, பேராசிரியர் ய. மணிகண்டன்தான்.

மகாத்மா காந்திக்கும் மகாகவி பாரதியாருக்கும் ஒருவர் மீது மற்றவருக்கு அபரிமிதமான அன்பும் மரியாதையும் இருந்தன என்பதுதான் உண்மை. காந்திஜி சென்னை வந்தபோது பாரதியாரை மதிக்கவில்லை என்பது போன்ற தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. அவற்றில் உண்மையில்லை.

மகாத்மாவும், மகாகவியும் 1919-இல்தான் முதன்முதலில் நேரில் சந்திக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பே ஒருவர் குறித்து மற்றவர் அறிந்தே இருந்தனர். காந்திஜியின் செயல்பாடுகளைத் தனது கட்டுரை, கவிதை, கருத்துப்படம் என பாரதியார் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார். 

காந்திஜியும், பாரதியார் குறித்துத் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே அறிந்திருந்தார். பாரதியாரின் மறைவிற்குப் பின்னர், தனது "யங் இந்தியா', "நவஜீவன்' இதழ்களில் பாரதியார் குறித்து எழுதியிருக்கிறார். அவரது பாடல்களை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். பாரதியின் பெயரைத் தம் கைப்படத் தமிழில் எழுதிப் போற்றியிருக்கிறார்.

காந்திஜிக்கும், பாரதியாருக்கும் இடையேயான எழுத்துத் தொடர்புகளை எல்லாம் முற்றிலுமாக ஆவணப்படுத்துகிறது பேராசிரியர் ய. மணிகண்டனின் "பாரதியும் காந்தியும்' நூல். பாரதியாரின் படைப்புகளைக் காலவரிசைப்படுத்திய பாரதியியல் முன்னோடி சீனி. விசுவநாதனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், "பாரதி பார்வையில் காந்தி' என்று மகாத்மா குறித்த பாரதியாரின் பதிவுகள்; "காந்தி பார்வையில் பாரதி' என்று பாரதியார் குறித்த மகாத்மாவின் குறிப்புகள்; காந்திஜியும் பாரதியாரும் நேரில் சந்தித்தது குறித்த உடனிருந்தோர் பதிவுகள் என்று மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் புத்தகத்தைப் படிக்காமல் மேற்கொள்ளும் பாரதி குறித்த எந்த ஆய்வும் முழுமை பெறாது. இந்தப் புத்தகத்தைப் படிக்காமல் காந்திஜிக்கும், பாரதியாருக்கும் இடையே இருந்த பரஸ்பர அபிமானத்தைப் புரிந்து கொள்ள முடியாது. பேராசிரியர் ய. மணிகண்டன் முன்னெடுத்திருக்கும் முயற்சிக்காக அவருக்குத் தமிழகம் கடமைப்பட்டிருக்கிறது!

----------------------------------------------------------------------

விமர்சனத்துக்கு வந்திருந்தது அகிலா எழுதிய "மழையிடம் மௌனங்கள் இல்லை...' கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து ஒரு கவிதை
வட்டமிட்டுத் 
தேய்கிறது
மழையற்ற விடியலில்
நிலவு மட்டுமாய்
இரவைத் தேடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT