தமிழ்மணி

கவிதைக்குள் ஓர் கதை

சிவ. சதீஸ்குமார்


"கவிதை' என்னும் சொல்லின் நடு எழுத்தை நீக்கினால் "கதை' என்றும் முதலெழுத்தை நீக்கினால் "விதை' என்றும் மாறும். கவிதையானது இப்படி எழுத்தில் மட்டுமில்லாமல்  உணர்த்தும் பொருளிலும் கவின்மிகு கதையையும் சிந்தனை விதையையும் தாங்கி நிற்கும். அவ்வாறு கதை மற்றும் விதையைக் கொண்டு ஒரு கவிதை அமைந்துள்ளது.

புத்திமான் பலவான் ஆவான் பலம்உளான் புத்திஅற்றால்
எத்தனை விதத்தினாலும் இடர்அது வந்தே தீரும்
மற்றொரு சிங்கம் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே
உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே!

அறிவுள்ளவன் பலசாலியாக இருத்தல் வேண்டும். வெறும் உடல் வலிமை மட்டுமே அமைந்து, அறிவில்லாமல் போனால் எப்படியேனும் துன்பம் விளையும் என்பது இக்கவியில் அமைந்துள்ள "விதை'யான சிந்தனை. இது முதல் இரு அடிகளில் எடுத்தாளப்பட்டுள்ளது. அடுத்த ஈரடிகளில் இச்சிந்தனையை விளக்கும் சிறுகதை ஒன்றும் ஒளிந்துள்ளது.

காட்டுக்கு அரசனாக விளங்கும் சிங்கம், தன் பசியைப் போக்கிக் கொள்ள கண்ணில் படுகின்ற எல்லா விலங்குகளையும் வேட்டையாடித் தின்று தீர்த்தது. இதைத் தடுக்க வேண்டும் என்று எல்லா விலங்குகளும் ஒன்றாய்க் கூடி, முடிவெடுத்து சிங்கத்திடம் சென்று, "அரசே! நாங்களே எங்களுக்குள் ஒருவர் என தினமும் உங்களுக்கு உணவாக, உங்கள் இடத்துக்கே வந்துவிடுகிறோம்' என்று கூறின.

அதன்படியே தினமும் ஒவ்வொரு விலங்காக சிங்கத்திடம் சென்று உயிரை விட்டன. ஒருநாள் முயலுக்கான முறை வந்தது. சிங்கத்தை வென்று அதைக் கொல்ல வேண்டும் என முடிவெடுத்த புத்திசாலி முயல், குறித்த நேரத்துக்குச் செல்லாமல் காலதாமதமாக, பெருமூச்சு விட்டபடி, சோர்வுடன் சென்றது.

பசியாலும், கோபத்தாலும் வேட்டையாடக் காத்திருந்த சிங்கம், "ஏன் தாமதம்' என வினவ ""அரசே! நான் சரியான நேரத்துக்கு வந்திருப்பேன். ஆனால் வரும் வழியில் உங்களைப் போன்ற மற்றொரு சிங்கம் "நான்தான் காட்டுக்கு அரசன்; எனக்குத்தான் நீ உணவாக வேண்டும்' என்று கேட்டது. அதனிடமிருந்து தப்பித்து ஓடி வர தாமதம் ஆகிவிட்டது'' என்று கூறியது. அதைக்கேட்டு கோபமுற்ற சிங்கம் "காட்டுக்கு அரசனா? யார் அது' என்று கேட்டது. முயல் "என்னுடன் வாருங்கள்அரசே, காட்டுகிறேன்' என்று கூறி, சிங்கத்தை நீருள்ள ஒரு கிணற்றுக்கு அருகில் அழைத்து சென்று, "அரசே! நான் சொன்ன,  சிங்கம் இந்தக் கிணற்றுக்குள் இருக்கிறது' என்றது.

அறிவில்லாத அச்சிங்கம் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது. நீரில் தெரிகின்ற தன் உருவத்தைத் தனது எதிரியாக கருதி கர்ஜித்தது. எதிரொலியை எதிரியின் குரலென்று கருதி அதை வேட்டையாட கிணற்றுக்குள் குதித்து தன் உயிரையும் விட்டது.

சிங்கம் பலத்தால் பன்மடங்கு சிறந்திருந்தாலும், அறிவின்மையால் முயலிடம் தோற்று இறந்துபட்டது. இக்கதையை இருவரிகளிலும், பலத்தைக் காட்டிலும் அறிவுமிக இன்றியமையாததது என்பதை இரு வரிகளிலும் எடுத்துரைக்கும் இப்பாடல் அமைந்த நூல் விவேக சிந்தாமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT