தமிழ்மணி

ராஜேந்திர சோழனின் செப்பு நாணயம் 

சென்னை மணிகண்டன்

தமிழ் மாமன்னன் ராஜராஜசோழனின் புதல்வரான ராஜேந்திர சோழன் எனும் மதுராந்தகனின் அபூர்வ செப்பு நாணயம் அண்மையில் கிடைத்துள்ளது.
இதற்கு முன்பாக 3.8 கிராம் எடை கொண்ட (ஒரு கழஞ்சு) தங்க நாணயம், தமிழ்- கிரந்தம் எழுத்துகளோடு மதுராந்தகன் பெயரோடு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜேந்திர சோழன், கி.பி. 1012 தொடங்கி 1044 வரை ஆட்சி நடத்தினார். கங்கை வரை சென்று வெற்றி பெற்றதால் கங்கை கொண்டான் என்றும், கடாரப் போர் வெற்றியால் கடாரம் கொண்டான் என்றும், பல்வேறு அரசர்களை வென்றதால் முடிகொண்ட சோழன் என்றும், அறிவில் சிறந்தவன் என்பதால் பண்டித சோழன் என்றும் அழைக்கப்பட்டான் ராஜேந்திர சோழன்.
வீரசோழன், மனுகுல சோழன், விக்கிரம சோழன், வீர ராஜேந்திரன், உத்தம சோழன், பண்டித சோழன், முடிகொண்ட சோழன், மலைநாடு கொண்டான், கங்கை கொண்ட சோழன், கடாரம் கொண்ட சோழன், இரட்டைபாடி கொண்ட சோழன் என பல்வேறு பட்டப்பெயர்கள் மதுராந்தகனுக்கு உண்டு.
விஜயாலயச் சோழன் ஆட்சியில் தொடங்கிய சோழப் பேரரசு, மாமன்னன் இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் தான் பொற்காலத்தை அடைந்தது எனலாம். இவர் கங்கை வரை சென்று மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்துத்ள்ளார். அதன் வெற்றியை கொண்டாடும் விதமாக கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரை உருவாக்கி, தன் ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார்.
செப்பு, வெள்ளி, தங்கத்தில் "கங்கைகொண்டசோழன்' என்னும் பெயரில் நாணயத்தை வெளியிட்டார். அதில் சோழருக்கு உரித்தான புலியையும் சேர, பாண்டியர்களை வென்றதன் அடையாளமாக மீன், வில் அம்பையும் பொறித்தார்.
நாணயத்தில் இரண்டு மங்கள விளக்குகள், வெண்சாமரம், வெண்கொற்றக் குடை போன்ற அரசருக்கு உரித்தான குறியீடுகளையும் இணைத்துள்ளார். நாணயத்தின் முன் பக்கத்தில் நின்ற நிலையில் ராஜேந்திர சோழ மாமன்னரின் உருவம்; உருவத்தின் வலதுபுறம் தேவநாகரி எழுத்துகளில் "ஸ்ரீ ராஜேந்திர" என பொறிக்கப்பட்டுள்ளது. மன்னரின் இடதுபுறம் குத்து விளக்கு ஒன்று நின்ற நிலையில் உள்ளது.
நாணயத்தின் பின் பகுதியில், அமர்ந்த நிலையில் ராஜேந்திரனின் உருவம் உள்ளது. அதன் அருகில் வலதுபுறம் அமர்ந்த நிலையில் புலியும் அதன் மேல் பகுதியில் வெண்கொற்றக் குடையும் உள்ளன. புலியின் பக்கவாட்டில் இருபுறங்களிலும் மங்கள விளக்கு நின்ற நிலையில் உள்ளது.
நாணயத்தின் பின் பக்கத்தில் அமர்ந்த மன்னருக்கு கீழ்ப்பகுதியில், ஆறு கட்டங்கள் உள்ளன. அதற்கு முன்னர் வெளிவந்த ராஜேந்திர தங்க காசுகளிலும் இதைக் காணலாம். இதே போன்ற வடிவமைப்பில் உள்ள கட்டங்களை, இலங்கையில் கிடைக்கும் "ஸ்ரீலங்கவீரா' எனும் தங்க நாணயத்திலும் பார்க்கலாம்.
ராஜேந்திர மன்னரின் ஆட்சியில், சோழநாடு, இந்தியா, இலங்கை, மாலத்தீவு, கடாரம், மலேசியா, சிங்கப்பூர், சுமத்ரா, கம்போடியா, இந்தோனேஷியா, மியான்மார், வங்கதேசம் உள்ளிட்ட நிலப்பரப்பைக் கொண்ட மாபெரும் சாம்ராஜ்யமாகும்.
இந்திய மன்னர்களிலேயே முதன் முதலில் கடல் கடந்து தன் ஆட்சியை, வணிகத் தொடர்பை, பண்டமாற்று முறையை நிகழ்த்திக் காட்டிய பேரரசன் ராஜேந்திர சோழனாவார்.
இதற்கு வலுவான சாட்சியாக மட்டுமல்லாது, அறிவியல் சான்றாகவும் உள்ளவை செப்பு நாணயங்களே.
கி.பி. 985 ஆம் ஆண்டு ஸ்ரீ ராஜராஜன் ஆட்சிக் கட்டிலில் ஏறி இருக்க வேண்டுமென சோழர்களின் வரலாற்றை எழுதிய நீலகண்ட சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT