தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (20-11-2022)

DIN

கவனக்குறைவா அல்லது நினைவாற்றல் குறைவா என்று திட்டமாகக் கூறமுடியவில்லை. ஆனால், சென்ற வாரம் "இளசை' அருணா குறித்த பதிவில் ஒரு தவறு நேர்ந்திருக்கிறது என்பதை மன்னிப்புக் கோரி பதிவு செய்கிறேன். "இளசை' என்பது "குற்றாலக் குறவஞ்சி' போல "எட்டயபுரக் குறவஞ்சி'யில் குறிப்பிடப்பட்டிருப்பதாக வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக நான் குறிப்பிட்டிருந்தேன். அது தவறு. "முக்கூடற்பள்ளு' போல, "எட்டயப்புரம் பள்ளு' என்கிற பாடல் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது என்பதுதான் சரி. கே.எஸ். இராதாகிருஷ்ணன் சரியாகத்தான் சொன்னார். நான்தான் தவறுதலாக மாற்றி எழுதிவிட்டேன்.

"இளசை' தொடர்பாக பெரியவர் சீனி. விசுவநாதன் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் எட்டயபுரத்துக்கு "இளசை' என்கிற பெயர் இருப்பது குறித்த சுவாரஸ்யமான தகவலைத் தெரிவித்திருக்கிறார். இனி நான் எழுதுவதை நிறுத்திவிட்டு, பெரியவர் சீனி. விசுவநாதனின் வார்த்தைகளை அப்படியே பதிவு செய்து விடுகிறேன் -

""பாரதியின் முதல் பாடலாகச் சொல்லப்பட்ட பாடல் "எட்டயபுரம் மன்னருக்கு விண்ணப்பம்' என்பதாகும். பாடல் எழுதப்பட்ட காலம் 24.01.1897. காலத்தால் முற்பட்ட அந்தப் பாடலை முதன்முதலாகக் கண்டறிந்து, 1974 ஆகஸ்ட் மாத "கலைமகள்' மாத இதழில் வெளியிட்டவர் பாரதியின் இளவலான சி. விசுவநாத ஐயர்.

பாரதியார் திருநெல்வேலி இந்துக் கல்லூரியைச் சார்ந்த உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்தபோது, தம்முடைய 15-ஆம் வயதளவில், தன் படிப்புச் செலவுக்கு உதவி செய்யக்கோரி எட்டயபுர மன்னருக்கு எழுதிய செய்யுள் வடிவிலான கடிதம் அது.

கடிதத்தின் ஆரம்பத்திலேயே, "தென்னிளசை நன்னகரிற் சிங்கம் வெங்கடேசுரெட்ட கன்னன் சுமூகசமூகம்' என்றுதான் பாரதி குறிப்பிடுகிறார். பாரதியின் அந்தப் பாடலை வெளியிட்ட சி. விசுவநாத ஐயர் எழுதிய குறிப்பு கருதத்தக்கது. இதில் "இளசை சுப்பிரமணியன், எட்டயபுரம்' என்றே கையொப்பமிட்டுப் பாடலை முடித்திருக்கிறார்'' என்று பாரதியின் இளவல் எழுதியுள்ள குறிப்பால், ஆரம்பகால நிலையில், "இளசை சுப்பிரமணியன்' என்றே பாரதியார் கையொப்பம் இட்டுவந்தார் என்பது தெரிய வருகிறது.''

கலைமாமணி டாக்டர் எஸ். அமுதகுமார் தினமணியின் கொண்டாட்டம் ஞாயிறு இணைப்பில் வெளிவந்த தனது தொடருக்கு "ரத்தத்தின் ரத்தமே' என்று பெயர் வைத்தபோது, அது இந்த அளவுக்கு வாசகர்களை ஈர்க்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. "உடலுக்குள் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நமது ரத்தத்தின் கதை' என்று தனது "ரத்தம்' தொடரை அவர் எழுதத் தொடங்கியபோது, "கொண்டாட்டம்' இணைப்புக்கே புதுரத்தம் பாய்ச்சியது போல, ஒரு புது மெருகு ஏறியது. அது "ரத்தம்' என்கிற பெயரில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.

ரத்தம் குறித்து மட்டுமே தொடர்ந்து 66 வாரங்களுக்கு எழுத முடிகிறதென்றால், ரத்தத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். சாமானிய வாசகனுக்கும் புரியும் விதத்தில், ரத்தத்தின் அடிப்படைக் கூறுகளில் தொடங்கி, அதன் அத்தியாவசியத் தேவையை விளக்கி, இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை ரத்தத்தை எப்படிக் கையாள்கின்றன என்பதை உணர்த்தி, டாக்டர் அமுதகுமார் ஏற்படுத்தும் புரிதலுக்காகவே அவருக்கு "முனைவர்' பட்டம் வழங்கலாம்.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கி இருக்கும் கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளை நான் வழிமொழிகிறேன். ""ரத்தம் குறித்த இந்த அரிய அறிவியல் நூல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய உயிர்காப்புக் களஞ்சியம். இந்த நூலை என் சமகாலத் தலைமுறைக்குப் பரிந்துரைக்கிறேன்.''

-------------------------------------

உலகத் திருக்குறள் பேரவையுடன் ஒன்றிவிட்ட பெருந்தகை நயம்பு. அறிவுடைநம்பி. ஒரு நாள் நான் இல்லாத நேரத்தில் தானே நேரில் வந்து அலுவலகத்தில் சில புத்தகங்களை என்னிடம் சேர்ப்பிக்குமாறு கூறிச் சென்றிருக்கிறார். அந்தப் புத்தகங்களில் ஒன்று அவர் சாகித்திய அகாதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசைக்காக எழுதிய "சோழவந்தான் அரசஞ்சண்முகனார்' என்கிற நூல். 

கடந்த நூற்றாண்டின் தமிழறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் அரசஞ்சண்முகனார். பாலவனத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை தேவர் மதுரையில் 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவியபோது, அவருக்குத் துணை நின்றவர்களில் ஒருவர். தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர், "பரிதிமாற்கலைஞர்' வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், மறைமலையடிகள், ரா. இராகவையங்கார் ஆகியோருடன் சோழவந்தான் அரசஞ்சண்முகனாரும் தொடக்க விழாவில் முன்னிலை வகித்த தமிழர்களில் ஒருவர். 

மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியார் சிறிது காலம் பணியாற்றியதற்கு அரசஞ்சண்முகனாரும் ஒரு காரணம். அவர் குறித்த ஆவணப் பதிவுக்கு நயம்பு. அறிவுடைநம்பியைப் பாராட்ட வேண்டும். இத்தனை காலம் அரசஞ்சண்முகனார் குறித்து எழுதாமல் தாமதித்தது அவமானம். 

-------------------------------------


கார்ட்டூனிஸ்ட் மதனை ஆசிரியராகவும், ராவ் இணையாசிரியராகவும் கொண்டு வெளிவரும் "விகடகவி' இணைய இதழின் தலைமைப் பொறுப்பாசிரியராக இருக்கும் "ஜாசன்', எனக்குத் தொடர்ந்து அந்த இதழைக் கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பித் தருகிறார். அதில் வெளிவந்திருக்
கிறது கவிஞர் மகா என்பவர் எழுதியிருக்கும் "இளையராஜாவின் ரசிகன்' என்கிற இந்தக் கவிதை -

விளங்கிக் கொள்ள
இயலவில்லை
பிறவியிலேயே
பேசும், கேட்கும் திறன்
இல்லாது பிறந்த
ஓவியனின்
சாலை ஓவியங்களில்
இளையராஜா மட்டுமே
இடம் பிடிக்கும்
விந்தையை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT