தமிழ்மணி

தனித்தொளிரும் தமிழறிஞர்

20th Nov 2022 04:57 PM | பேராசிரியர் ய. மணிகண்டன்

ADVERTISEMENT

 

சைவத்தமிழ் இயக்க, இலக்கிய, சித்தாந்தக் களத்தில் அருஞ்சாதனைகள் பலவற்றை நிகழ்த்தியவர் ஜே.எம். நல்லசாமிபிள்ளை. அவர் பதினான்கு சைவசித்தாந்த நூல்கட்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் விரிவுரையும் ஆக்கியவர். திருமந்திரம், பெரியபுராணம், தாயுமானவர் பாடல்கள் முதலியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு, அறிமுகம், நுட்பங்களை வெளிப்படுத்தல் என்றெல்லாம் நீள்கிறது அவரின் நிகரற்ற சைவப் பெரும்பணி. அவரால் சைவ சமயப் புலம் பெற்ற வளம் பெரிது. அதனைத் தாண்டி ஒட்டுமொத்தத் தமிழியல் உலகம் பெற்ற பெருவளம் பெரிதினும் பெரிது.

தமிழ் யாப்பியல் களத்தில் தொடர்ந்து முக்கியமான பணிகளில் முனைந்து வருகின்ற நான் ஏறத்தாழக் கால்நூற்றாண்டாக மீண்டும் மீண்டும் பார்வையிட்டுப் பயன்கொள்ளும் ஓர் இதழ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் (1897) தோன்றியதாகும்.

அந்த இதழ்தான் எனக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்மலர்ந்த தமிழின், தமிழரின் எழுச்சி வரலாறு, தொல்லியல் முயற்சிகள், செவ்வியல்தமிழ் முயற்சிகள், யாப்பியல் முயற்சிகள், திராவிடமொழிகள் - இலக்கியங்கள் குறித்த முயற்சிகள் தொடங்கிப் பாரதியியல் வரை அருஞ்செய்திகளை அறியவும் உணரவும் பயன்பட்டிருக்கின்றது.

ADVERTISEMENT

அந்த இதழின் பெயர் "தி சித்தாந்த தீபிகா ஆர் தி லைட் ஆஃப் ட்ரூத்' என்னும் ஆங்கில இதழாகும். இது அறிஞர் ஜே.எம். நல்லசாமிபிள்ளையால் தோற்றுவிக்கப்பட்டது. நெடுங்காலம்வரை இதழின் ஆசிரியராகவும் அவரே விளங்கினார். இந்த இதழுக்கு ஒருகட்டத்தில் "நல்லசாமிபிள்ளை விரும்பினால் ஆசிரியப் பொறுப்பேற்பேன்' எனத் தாம் மடல் எழுதியதாக மறைமலை அடிகள் தம் நாட்குறிப்பில் குறித்துள்ளார்.

தமிழ் வரலாற்றில் உலகளாவிய நிலையில் தமிழாய்வுகளை வெளிப்படுத்தத் தனிநாயக அடிகள் தொடங்கி நடத்திய "தமிழ் கல்ச்சர்' இதழைத் தமிழுலகம் அறியும். ஆனால் தனிநாயக அடிகளின் முயற்சிக்கும் முன்னரே போப் முதலிய அயலவர்களும் எழுதும் உலகளாவிய இதழினை நடத்திய பெருமை ஜே.எம். நல்ல சாமிபிள்ளைக்கு உண்டு. தமிழின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் ஆராய்ச்சி இதழை முன்னோடியாக நடத்தியவர் என்ற வரலாற்றுப் பேரிடம் நல்லசாமிபிள்ளைக்கு உரியதாகும்.

சென்னையில் 1903-இல் 'தமிழர் தொல்லியல் கழகம்' (தி டமிலியன் ஆர்கியாலஜிகல் சொஸைட்டி) என்னும் அமைப்பு ஜே.எம். நல்லசாமிபிள்ளையின் முதன்மையான பங்களிப்பில் உருப்பெற்றது. ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் பொதுக்குழுக் கூட்டத்திற்கும் அவர்தான் தலைமையேற்று உரையையும் நிகழ்த்தினார்.

அந்த அமைப்பின் நிருவாக இயக்குநர்களில் அவரும் ஒருவராகப் பொறுப்பேற்றார். அவரோடு இடம்பெற்ற பிற இயக்குநர்கள் லாசரஸ், "சுதேசமித்திரன்' ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர், மறைமலை அடிகள், சூரியநாராயண சாத்திரியார், எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, அனவரத விநாயகம் பிள்ளை முதலியோர் ஆவர். இந்த அறிஞர்களின் நிரல்கொண்டே இந்த அமைப்பு எத்தகைய வரலாற்றுப் பெருமைகொண்டது என்பதையும் நல்லசாமிபிள்ளையின் முன்னோடிநிலை எத்தகையது என்பதையும் நாம் நன்குணரலாம்.

19-ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டில் (1900) சென்னையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எல்லீஸ், கால்டுவெல் முதலியோரால் ஆய்வுநிலைகளில் முக்கியத்துவம் பெற்ற திராவிடமொழிகள், திராவிடமொழிக் குடும்பம் என்னும் கருத்தியல் தளத்தின் தொடர்ச்சியாகச் செயல்நிலை அமைப்பு ஒன்று அப்போது உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் பெயர் "தென்னிந்திய திராவிடர் சங்கம்', "திராவிட பாஷா சங்கம்' என்னும் பொருள்பட (சௌத் இன்டியன் திரவிடியன் சங்கம், தி திராவிட பாஷா சங்கம்) அமைந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் அறிஞர்களும் பங்கேற்ற அமைப்பாக அது வடிவம் பெற்றது. நான்கு மொழிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் கையொப்பமிட்ட பிரகடனமும் வெளியிடப்பட்டது. மலையாளத்துக்கு அப்பு நெடுங்காடி, தெலுங்கிற்கு நாராயண ராவ், வீரேசலிங்கம் பந்துலு, தமிழுக்குப் பாலசுந்தர முதலியார், "சுதேசமித்திரன்' ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் இடம்பெற்றனர் என்பது கருத்தில்கொள்ளத்தக்கது.

தென்னிந்திய அளவில் உருப்பெற்ற இந்த மகத்தான அமைப்பின் அறிஞர் அவையில் தமிழுக்கு இடம்பெற்ற நான்கு அறிஞர்களுள் ஒருவர் ஜே.எம். நல்லசாமிபிள்ளை என்பதேஅவருடைய வரலாற்றுப் பேரிடத்தை வலியுறுத்தும். நால்வரில் இடம்பெற்ற பிற மூவர் உ.வே.சா., சி.வை.தா., வி. கனகசபைபிள்ளை என்பதும் நல்லசாமிபிள்ளையின் உயர்பேரிடத்தை உணர்த்தும். அந்த அமைப்பின் முதற்கூட்டத்திற்குத் தலைமைதாங்கியவர் பிற்காலத்தில் பாரதியின் கூட்டத்திற்கும் தலைமைதாங்கிய நீதிபதி சுப்பிரமணிய ஐயர் என்பது எண்ணத்தக்கது.

"கலித்தொகை', "புறநானூறு' முதலியவற்றை மையமிட்ட ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள் அவரால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

உலகளாவிய நிலையில் தமிழிலக்கிய வரலாற்றை வரைந்த செக்கோஸ்லோவாக்கிய அறிஞர் கமில் சுவலபில், முதன்மையானதமிழறிஞர்களைக் குறித்துப் பேசும் இடத்தில் தமிழின் செவ்வியல் தகைமையை உறுதிப்படுத்தும் சங்க இலக்கியங்களை மீள்கண்டுபிடிப்புச் செய்த சி.வை.தா., உ.வே.சா. ஆகிய இருபெரும் அறிஞர்களை முதலில் குறிப்பிட்டிருக்கின்றார். அடுத்து ஒருபோதும் மறந்துவிடக்கூடாத முன்னோடி அறிஞர்களின் பெயர்களாகச் சில பெயர்களைச் சுட்டியிருக்கின்றார். அப்பெயர்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று ஜே.எம். நல்லசாமிபிள்ளை என்பதாகும்.

ஆனந்த குமாரசாமி, விவேகானந்தர், தி. வீரபத்திர முதலியார், மறைமலை அடிகள், உ.வே.சா., "சுதேசமித்திரன்' ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர் என அறிஞருலக முதன்மையாளர்களோடெல்லாம் நெருங்கிப் பழகியவர் ஜே.எம். நல்லசாமிபிள்ளை. இந்தப் பெருமக்கள் பலரோடும் இணைந்தும் ஒருங்கிணைத்தும் தலைமைதாங்கியும் தமிழின் உயர்வுக்கும் தமிழ்நாட்டின் உயர்வுக்கும் அருஞ்செயல்களைப் புரிந்த தலைமகன்களில் தனித்தொளிர்பவர் ஜே.எம். நல்லசாமிபிள்ளை.

நவ. 28 ஜே.எம். நல்லசாமிபிள்ளை பிறந்தநாள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT