தமிழ்மணி

விதைநெல் உறங்கும் கோட்டை

20th Nov 2022 05:02 PM | முனைவர் சே. கரும்பாயிரம்

ADVERTISEMENT


நெல்லறிவோர் ஒரு கையின் வளைந்த அளவுடைய மூன்று அல்லது நான்கு அரிகளின் தொகுதியைக் கோட்டு என்று கூறுவர். அரியானது அறுத்த ஒரு கைப்பிடி நெற்கதிரினைக் குறிக்கும். 

கோட்டினைத் தலைப்பு மாற்றி அடுக்கிக் கட்டிய பின் கட்டுகளைக் நெற்களம் கொண்டு சேர்ப்பர். களத்தில் கட்டுகளிலுள்ள கோட்டினை வைக்கோலால் முறுக்கிய பழுதாக்கையில் ஒவ்வொன்றாக எடுத்துத் தலைக்கு மேல் சுழற்றி மரத்துண்டு அல்லது கருங்கல்லில் அடித்துத் நெல்மணிகளைப் பிரித்தெடுத்து ஒன்றாகக் குவிப்பதை, "தலையுதிரி நெல்லடித்து மலைபோல வேகுவித்து' (வையாபுரிப் பள்ளு, 189:8) என்னும் பாடலடி குறிப்பிட்டுள்ளது. 

அந்நெல் குவியலைப் பொலி என்று அழைப்பர். பொலியில் நெல்லளத்தலுக்கு முன் தெய்வத்திற்கு வழிபாடு செய்வர். இதனைக், "கோட்டைங் கரனை முனம்வைத்தே' (158) என்று பிள்ளையாரை வழிபட்டதைத் திருமலை முருகன் பள்ளு எடுத்து இயம்புகிறது.

கோட்டை என்பது இருபத்தொரு மரக்கால் அளவு கொண்டதாகும்.

ADVERTISEMENT

அளந்த நெல்லைப் பாதுகாத்தல் என்பது அவசியமாகும். இல்லையெனில் அந்து, எலி, மாடு  போன்ற உயிரினங்களால் அழிவு ஏற்படும். இதனை, "எலியருந்தியது தொண்ணூறு கோட்டை',  "மாடு தின்ற தெழுநூறு கோட்டை', "அந்து தின்றதோ ரைஞ்ஞூறு கோட்டை' என்று கூறுவதுடன் அது திருட்டுப் போகும் என்பதை, "களவு போனது நானூறு கோட்டை' (38) எனத் திருவாரூர் பள்ளு குறிப்பிட்டுள்ளது.

கோட்டையில் விதை நெல்லை வைப்பதற்கு முன்னர் சில தினங்கள் வெயிலில் காய வைப்பர். காய்ந்த விதை நெல்லைப் பிரியின் மேல் வைக்கோல் பரப்பியவற்றுள் கொட்டுவர். பின்னர் நேருக்கு நேர் இருக்கும் பிரிகளை எடுத்து ஒன்றோடு ஒன்று கட்டிய உடன் சாணியை இட்டு மெழுகுவர். இதற்குக் கோட்டை கட்டுதல் என்று பெயர். இதனை, "வாரியதை விரைகளெல்லாங் கோட்டைகட்டி' (59) என்று கண்ணுடையம்மன் பள்ளு குறிப்பிட்டுள்ளது. 

உழவர்கள், இக்கோட்டையை உருவாக்க, நிலத்தில் விளைந்த வைக்கோல், வைக்கோலால் செய்யப்பட்ட பிரி, வைக்கோலைத் தின்ற மாட்டின் கழிவாகிய சாணம் ஆகியவற்றையே பயன்படுத்துகின்றனர். இக்கோட்டை பார்ப்பதற்கு வட்ட வடிவில் பந்து போல இருக்கும் காரணத்தால் இப்பெயர் பெற்றது. இது போன்று வடிவங் கொண்ட அகழி சூழ்ந்த இருப்பிடம், சூரியன் அல்லது சந்திரனைச் சுற்றிய ஒளி வட்டம் போன்றவற்றிற்கும் இப்பெயரே வழங்குவதைக் காணமுடியும்.

கோட்டையில் குறுவை, தாளடி, சம்பா ஆகிய மூன்று பருவங்களில் விளையும் விதை நெல்லைக் கட்டி வைப்பதுண்டு. அவற்றுள் அதிக மாதங்களைக் கொண்டது சம்பா பருவத்துக் கோட்டையாகும். அக்கோட்டை தை மாதம் தொடங்கி ஆடி மாதமான விதை விதைக்கும் காலம் வரை இருக்கும். இந்த ஆறு மாதங்கள் முழுவதும் கோட்டையில் சாணம் மெழுகி இருப்பதால் அந்துப் பூச்சி முதலான உயிரினங்கள் அதனை நெருங்குவதில்லை. அவற்றோடு அக்கோட்டைக்குள் இருக்கும் வைக்கோலானது விதையின் தட்பவெட்ப நிலையினைச் சமச்சீராக வைத்துக் கொள்ளும். இதனால் கோட்டையில் உறங்கும் விதை நெல் விதைக்கும்பொழுது பழுது இல்லாமல் முளைப்பதுடன் அது வளர்ந்து பன்மடங்கு விளைச்சல் தரும் எனலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT