தமிழ்மணி

வள்ளுவர் அளித்த கூழ்

13th Nov 2022 06:19 PM | கோ. தமிழரசன்

ADVERTISEMENT

 

திருக்குறள் நுட்பச் சொற்களின் குவியலில் "கூழ்'  என்பதுமொன்று. 

கூழின் முதல் குறள் மழலைச் செல்வத்தின் மேன்மை அன்பில் வெளிப்படுகிறது.

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ் (64)

ADVERTISEMENT

குழந்தை உணவைத் தன் பிஞ்சு விரல்களால் அப்படி இப்படிக் கிளறி அளாவும். அப்படிப் பிசைந்த உணவாம் கூழ் அமிழ்தத்தின் இனிமையை வென்று மேலோங்கும் சுவையுணர்வைப் பெற்றோர்களுக்குத் தருமென்பது வள்ளுவர் வழி வாய்மை.கூழ் இறைமாண்பின் அடையாளம். அரசனுக்குப் பெருமை.

படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான அரசருள் ஏறு ( 381)

அரசின் மாட்சி படை, குடி முதலான ஆறில் சிறக்கும். ஆனாலும் உலகியலில் பொருளியலை முறைப்படுத்தி இயங்கும் அரசு சிறப்பானதாகும்.  

கூழும்குடியும் ஒருங்கு இழக்கும் கோல்கோடிச் 
சூழாது செய்யும் அரசு  (554)

என்பது வள்ளுவம்.

அறநெறியும், நீதித் தன்மையும் இல்லா அரசு கொடுங்கோன்மையானது. இத்தகைய கொடுங்கோல், நாட்டின் வளத்தை (கூழ்) இழக்கச் செய்யும் எனத் திருவள்ளுவர் எச்சரிக்கிறார்.

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர். அதனோடு நாட்டைக் காக்கும் அரணும் விரித்துரைக்கிறார்.

கொளற்கரியதாய்க் கொண்ட கூழ்த் தாகி அகத்தார்
நிலக்கெளிதாம் நீர தரண்  (745)

பகைவரால் எளிதில் கைப்பற்ற முடியாததாய் இருப்பதோடு, மக்களுக்குத் தேவையான உணவுப் பண்டங்களைக் (கூழ்) கொண்டதாக அமைவது பெருஞ்சிறப்பென்பது வள்ளுவக் கருத்து. 

பசிக்கு உணவு தேவை. அதற்காகப் பிச்சையெடுத்தாவது உண்ணலாம் என்பது இழிவான செயலாகும்.

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல்
  (1065)

தெளிந்த நீர் போன்ற கூழ் உணவைக் குடித்தாலும் நம் உழைப்பில், முயற்சியில் விளைந்ததாக இருப்பதே இனிமை என்பது வள்ளுவர் நமக்கு வகுத்த நல்வழியாகும். எனவே இரந்துண்ண நாணப்பட வேண்டும். 

குறள் வழி வாழ்வமைப்போம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT