தமிழ்மணி

குறள் கூறும் சொல்!

22nd May 2022 04:25 PM

ADVERTISEMENT

 

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்ற தொல்காப்பிய கருத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சொல்லும் ஒரு பொருளைக் குறித்தே உருவாகிறது. ஒரு மொழியில் உள்ள சொல்லுக்கு ஏற்ற கருத்தாழமும், சொற்செறிவும்மிக்க எளிமையான சொல்லைத்தான் நாம் "கலைச்சொல்' என்கிறோம். புதிய கண்டுபிடிப்பின் விளைவாகத்தான் இவை தோன்றுகின்றன. துறைசார்ந்த வல்லுநர்கள் தங்களிடையே அத்துறைசார் செய்திகளைச் சுருக்கமாகவும் துல்லியமாகவும் பரிமாறிக்கொள்வதற்குக் கலைச்சொற்கள் பயனுள்ளவையாக அமைகின்றன.

இன்றைய கலைச்சொற்கள் பெரும்பான்மைக்கு அடிப்படையாக இருப்பவை சங்க இலக்கியச் சொற்கள் ஆகும். சங்க இலக்கிய காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்பட வேண்டியது திருக்குறள் ஆகும். குறளில் உள்ள கலைச்சொற்கள் இன்றும் நடைமுறையில் உள்ளன. திருக்குறள் கருத்துகள் மக்கள் வாழும் திசைக்கெல்லாம் பொருந்தி நிற்கிறது. குறளில் உள்ள சொற்கள் சொல்நயமும், பொருள்நயமும், அணிநயமும் இயல்பாகவே கொண்டு விளங்குகின்றன. குறள் கூறும் கலைச்சொற்களுள் சிலவற்றை இங்கு நோக்குவோம்.

எழிலி (Nimbostratus)

ADVERTISEMENT

உயரத்தின் அடிப்படையில் மேகக் கூட்டத்தைப் பத்து அடுக்குகளாக வகுத்துள்ளனர். அவற்றுள் தாழ்நிலையில் உள்ளவை முகில், எழிலி ஆகும். இச்சொல் சங்க இலக்கியப் பாக்களில் 33 இடங்களில் இடம்பெறுகிறது. புறநானூற்றில் 

"பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி' (173.5-7) எனவும், அகநானூற்றில் கார்ப்பருவம் என்ற பொருளில், "தளி மயங்கின்றே தண்குரல் எழிலி' (43. 1-8) எனவும்,  நற்றிணையில் 153ஆவது பாடலில் "தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி' எனவும் இச்சொல் ஆளப்பட்டுள்ளது.

"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான் நல்காதாகி விடின்' (குறள்-17)

"ஒலி முழங்குகின்ற குளிர்ச்சியை உடைய கடலைக் குடித்து வலமாக எழுந்து மலைகளை இருப்பிடமாகக் கொண்டு பெய்யுங்காலத்தே உலகத்தை வளைத்தெழுந்த கடிய செலவினை உடைய மேகம்' என முல்லைப்பாட்டு உரையில் நச்சினார்க்கினியர் கூறுகிறார். எனவே, கடல் மட்டத்தில் உருவாகக்கூடிய முகிலே எழிலி என்பதாகும். கடல் மட்டத்தில் உருவாகி மேலே செல்லும் முகிலுக்கு நிம்போசிட்ராட்டஸ் என 20 ஆம் நூற்றாண்டில் தான் மேலைநாட்டு அறிஞர்கள் வகைப்படுத்திப் பெயரிட்டுள்ளனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்படியொரு சொல்லை உருவாக்கி வரைவிலக்கணம் செய்துள்ளார் வள்ளுவப் பெருந்தகை.

வாரி  (Source of Income)

வருவாய் தொடர்பான பல சொற்கள் குறளில் இடம்பெற்றுள்ளன. நாம் இன்று வருவாய், வருமானம், ஈட்டம் எனப் பல சொற்களை தங்ஸ்ங்ய்ன்ங், ஐய்ஸ்ரீர்ம்ங், டழ்ர்ஸ்ரீங்ங்க்ள்   என வரையறையின்றிப் பயன்படுத்துகிறோம். திருவள்ளுவர் வாரி (குறள். 14, 512), ஈட்டல் (குறள். 385),  ஈட்டம் (குறள். 1003), ஆகாறு (குறள்.478), போகாறு (குறள். 478) ஆகிய சொற்களை வரவு, செலவு தொடர்பாகப் பயன்படுத்தியுள்ளார்.

"வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
 ஆராய்வான் செய்க வினை'  (குறள்-512)

"வாரி' என்றால் "பொருள் வரும் வாயில்கள்' என்று பரிமேலழகரும், "பொருள் வருவதற்கு இடமானவை' என்று மணக்குடவரும், "பொருள் வருவாய்' என்று பாவாணரும் கூறியுள்ளனர்.

ஈட்டம் (Fund)

ஈட்டல் - வந்தவற்றை ஒருவழித் தொகுத்தல், காத்தல் 
என்கிறார் பரிமேலழகர். வருவாய் வரும்வழி வந்த பொருள்களை ஓரிடத்துத் தொகுத்தல் என்கிறார் பாவாணர்.

"இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த 
 வகுத்தலும் வல்ல தரசு'  (குறள்-385)
"ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை'   (குறள்-1003)

மேற்குறித்த மூவரும் "ஈட்டம்' என்பதற்குப் பொருள் ஈட்டலையே குறிக்கின்றனர். பொருளை ஈட்டாமல் எங்ஙனம் பிறர்க்கு வழங்க இயலும்? ஈட்டிய பொருளைத் தாமே குவித்து வைத்துக்கொண்டு பிறருக்கு ஈயாமல் இருப்பதைத்தான் தமிழ் நெறிகள் தவறென்கின்றன. எனவே "ஈட்டுதல்' என்பது திரட்டுதலே.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT