தமிழ்மணி

"காக்காய்' பிடிக்காத புலவர்!

22nd May 2022 04:35 PM | -முதுமுனைவர் அரங்க. பாரி

ADVERTISEMENT


"காக்காய்ப் பிடித்தல்' என்று வழக்கிலே நீண்டகாலமாக ஒரு மொழி வழங்குகிறது. காக்கை பிடித்தல் என்றால் அவ்வளவு எளிதா? கிளி, குருவி பிடிக்கலாம், கூண்டில் அடைத்து வளர்க்கவும் செய்யலாம். காக்கையைப் பிடிப்பாரும் இல்லை அதை வளர்ப்பாரும் இல்லை. 

காக்கையைப் பிடித்தல் எளிதல்ல. அதுவும் இருட்டில் பிடிக்கவே முடியாது. இவ்வளவு இருக்கும்போது "காக்காய் பிடித்தல்' என்பது எப்படி வந்தது? இது உண்மையில் "கால்கை பிடித்தல்' என்பது மருவி வந்து வழங்குவதாகும்.  இதற்கும் காக்காய்க்கும் சம்பந்தமே இல்லை. காக்கை ஓர் உறவின் சின்னம். அது தனியே உணவு உண்ணுவதில்லை. "காகம் போல் கலந்துண்ண வாரீர்' என்பர் சான்றோர். 

காக்கையைப் பற்றிப் பாடியவர்களில் தலைசிறந்தவர் காக்கைப் பாடினியார். இவருடைய இயற்பெயர் நச்செள்ளையார். "விருந்து வரக் காக்கை கரைந்தற்றே' என்று இவர் குறுந்தொகையில் பாடியதால் காக்கைப் பாடினியார் ஆகிவிட்டார். இந்தப் பெண்பாற்புலவர் துணிவுமிக்கவர். அரசர்களின் அதிகாரத்திற்கு அஞ்சாதவர். எந்த அரசனையும் அண்டிப்பிழைக்காமல், அவர் தவறு செய்யும் போது இடித்துரைக்கத் தயங்காதவர். இவரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியைக் காண்போம் !

சேரநாட்டில் "சேரலாதன்' என்றோர் அரசன் இருந்தான். அவன் நாட்டில் பகைவர் புகுந்து மலையாடுகள் பலவற்றைக் கவர்ந்து கொண்டு போய்த் தண்டகாரணியத்தில் ஒளிந்தனர். சேரலாதன் படையுடன் சென்று பகைவருடன் போர் புரிந்து மலையாடுகளை மீட்டு வந்தான். அதனால் அவ்வரசன் "ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்' எனப் பெயர் பெற்றான். சேர நாட்டின் நாட்டுடைத் தலைவனும் இவனே; பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவனும் இவனே.

ADVERTISEMENT

வெற்றிக் களிப்பில் மிதப்பது என்பது எல்லோருக்கும் இயல்புதானே! சேரன் ஆடல் மகளிரை அழைத்து ஆடல் நிகழ்த்தக் கூறி, அந்நிகழ்ச்சியில் கண்ணும் சிந்தையும் கலக்க மயங்கி இருந்தான். அப்போது அவன் அரசவையில் அவைப் புலவராக விளங்கிய காக்கைப்பாடினி, ""அரசே! நீ பெற்ற வெற்றி மிகப் பெரிது! பெரு மகிழ்வு எய்துக! மகளிர் ஆட்டத்தில் மனம் போக்கிக் களிப்பெய்துக'' என்று கூறியிருக்கலாம். அவர் அப்படிப் பாராட்டவில்லை. அவர்தான் காக்காய்ப் பிடிக்காத புலவராயிற்றே. பின் என்ன கூறினார்?

""அரசே! இங்கே ஆடும் மகளிர் நெற்றி ஒளிமிக்கது! அவர்களின் பார்வை அழகுடையது! அவர்களின் புன்னகை இனியது! அவர்களின் முத்துப்பல் கவர்ச்சி மிக்கது. அவர்களின் இதழில் அமிழ்தம் சிந்துவதும் சிறப்பே! அவர்கள் மயிலென அசைவதும் பெரு வனப்பே! இவை யாரையும் மயக்கவே செய்யும். ஆனால் நீ இவற்றில் மயங்குவாய் ஆயின், உன் பகைவர் "இவன் இவ்வளவுதானா! இவன் இப்படி மயங்கிக் கிடக்கும்போது இவனை வெற்றிகொள்வது மிக எளிதாகும்' என்று நினைப்பார்களே!  இது உனக்குச் சரியாகுமா?'' என்று கேட்டார் காக்கைப் பாடினியார். அவரது பாடல் இதுதான்:

"சுடர்நுதல், மடநோக்கின்,
வாள்நகை, இலங்குஎயிற்று
அமிழ்துபொதிதுவர்வாய், அசைநடைவிறலியர்
பாடல்சான்றுநீடினைஉறைதலின்
வெள்வேல்அண்ணல்மெல்லியன்போன்ம்!என,
உள்ளுவர்கொல்லோ, நின்உணராதோரே? 

(பதிற். 6: வரி: 19-24)

ADVERTISEMENT
ADVERTISEMENT