தமிழ்மணி

ஏற்புடைத்தன்று

மரு. டி. ஆர். சுரேஷ்

கால்டுவெல் பற்றி முனைவர் ஒளவை அருள் எழுதியுள்ள கட்டுரையைப் படித்து மகிழ்தேன். "கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி' என்னும் ஒளவை பாடலில் "வான்கோழி' என்னும் சொல் பயில்வதால் அப்பாடல் ஐரோப்பியர் இந்நாட்டுக்கு வணிகர்களாக வந்ததன் பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று கால்டுவெல் ஆராய்ந்து கூறினார்' என்று அதிற் குறிப்பிடப்பட்டிருந்தது. 

"வான்கோழி' என்பதை ஐரோப்பியர் இந்நாட்டுக்குக் கொணர்ந்த "turkey bird" என்பதைக் குறிக்கவே இன்று பயன்படுத்துகின்றோம். அப்பொருளில்  இக்கூற்று சரியாகவே தோன்றக்கூடியது. ஆனால் "வான்' என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி தரும் பதின்மூன்று பொருள்களுள் "Greatness, largeness பெருமை' என்பதும் ஒன்று. அளவிலோ சிறப்பிலோ மிக்கு விளங்குவதைக் குறிக்கும் அடைமொழியாக "வான்' பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்னும் பாரதி கூற்றில் வான் என்னும் சொல் இப்பொருளில் வந்துள்ளது. 

காட்டுக்கோழி வீட்டுக்கோழியைவிட அளவிற் பெரிதாக இருக்கக்கூடியது மட்டுமல்ல, வண்ணங்களும் கூடுதலாக உள்ளவை ஆகும். எனவே, காட்டுக்கோழி பெரிதாகவும் வண்ணங்கள் கொண்டதாகவும் இருப்பினும் வண்ணமயிலுக்கு இது ஈடாக முடியாது என்னும் பாடற்பொருள் எளிதில் விளங்குகின்றது. 

"தமிழ்நூற்கடல்' தி.வே. கோபாலய்யர் பாடலின் முதல் அடி "கான மயிலாடக் கண்டிருந்த கான் கோழி' என்றிருக்க வேண்டுமென்று கருத்துக் கூறியுள்ளார். இது நான் குறிப்பிட்ட பொருள் மாறாமல் இருப்பதோடு மோனையழகையும் கொண்டு அமைந்துள்ளது. எப்படியும், "வான்' கோழியோ "கான்' கோழியோ, ஒளவை அருள் குறிப்பிடுவது இக்காலத்திய வான்கோழி என்னும் கால்டுவெல் கூற்று ஏற்புடைத்தன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 6

ஜவான் பாடலுக்கு நடனமாடிய மோகன்லால்.. ஷாருக்கான் நெகிழ்ச்சி!

மே மாத எண்கணித பலன்கள் – 5

மே மாத எண்கணித பலன்கள் – 4

பிரதமர் மோடி பேச்சுக்கு இபிஎஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT