தமிழ்மணி

புறநானூற்றில் பெண்ணுரிமை!

15th May 2022 05:15 PM | முனைவர் அ.சிவபெருமான்

ADVERTISEMENT

 

சங்ககாலப் பெண்டிர் எக்குடியில் பிறந்தவராயினும் தன் துணையைத் தாமே தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர். அதன்வழி மனம் ஒன்றி வாழ அறிந்திருந்தனர். மனித உரிமைகளில் தலையாய உரிமை இதுதான்.

இவ்வுரிமை மட்டும் இருந்துவிட்டால் பிற உரிமைகள் தாமாகவே ஏற்பட்டுவிடும்.
தனக்குரிய தலைவனைப் பிறர் அறியாமலே ஏன் அவனேகூட அறியாமல் தேர்ந்தெடுத்த அந்த உரிமையைப் பட்டயமாக்கிப் புறநானூறு காட்டுகின்றது. அக்கருத்து வருமாறு:

ஊர், பெயர் தெரியாத யாரோ இளைஞன் தெருவிலே மற்போர் செய்கின்றான். அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்களோடு மோதுகின்றான். மக்கள் ஆரவாரம் செய்கின்றனர். "இதோ இவன் வென்றுவிட்டான்' என்கின்றனர் சிலர். "இல்லை... இல்லை அவனால் வெல்ல முடியாது' என்கின்றனர் சிலர்.

ADVERTISEMENT

இந்த ஆரவார ஒலி வீட்டுக்குள் இருந்த இளம் பெண்ணை என்னவென்று அறிந்து
கொள்ளத் தூண்டுகின்றது. அப்பெண் நாணம் மிக்கவள், தெருவில் இறங்கி ஓடிவந்து பார்க்க நாணம் தடைபோடுகின்றது. வாசலுக்கு வந்து, வாசலில் உள்ள பனைமரத்தின் அடியில் மறைந்து கொண்டு தலையை மட்டும் நீட்டிப் பார்க்கின்றாள். ஊர், பெயர் தெரியாத அவன் போராடுவதைக் காண்கின்றாள். கண்ட நொடியிலேயே "இவனே என் துணைவன்' என்று உறுதி செய்கின்றாள்;  பெற்றோரை, உற்றாரை, உறவைக் கேட்காமல் தானே முடிவு செய்துவிட்டாள் தன் வாழ்க்கைத் துணையை.  இப்பாடலின் வழி பெண்ணுரிமை பேசப்பட்டுள்ளது. 

என் ஐக்கு ஊர் இஃது அன்மை யானும்,
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்,
ஆடு ஆடு என்ப, ஒரு சாரோரே,
ஆடன்று என்ப ஒரு சாரோரே,
நல்ல பல்லோர் இருநன் மொழியே,
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
யான் கண்டனன் அவன் ஆடாகுதலே!  (புறம், 85)

ADVERTISEMENT
ADVERTISEMENT