தமிழ்மணி

ஒப்பியல் இலக்கணம் தந்த  ஒளிவிளக்கு !

8th May 2022 07:17 PM | முனைவர் ஒளவை அருள்

ADVERTISEMENT

 

திராவிட மொழிகளுக்கும், பிற இந்திய மொழிகளுக்கும் தாய் சம்ஸ்கிருதமே எனப் பலரும் நம்பியிருந்த காலத்தில், அதனை மறுத்து, திராவிட மொழிகளின் தொன்மையையும், தனித்தன்மையையும், வளமையையும் சான்றுகளுடன் நிறுவி, தமிழ் மொழியின் தனிப் பெருமையை உலகுக்கு உணர்த்திய தனிப்புகழ் கால்டுவெல்லையே சாரும்.

சம்ஸ்கிருதத்துக்குப் புறம்பான தனியான ஒரு மொழிக் குடும்பம் உண்டு என்றதோடு, தமிழில் சம்ஸ்கிருதமும், இந்திய-ஆரிய மொழிகள் பலவும்கூடச் சொற்களைக் கடன் வாங்கியுள்ளன என்று அவர் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல்' எடுத்துக் காட்டியது.

தென்னிந்திய மொழிகள் "திராவிட மொழிக் குடும்பம்' என அழைக்கப்பட்டது. திராவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திருந்திய மொழிகள், திருந்தா மொழிகள் எனப் பாகுபாடு செய்து தமிழ்மொழி தான் தலைமை தாங்கும் தனித்தன்மையும், எந்த வகையிலும் வடசொற்களை ஏற்காத வளமையையும் உடையதென ஆய்ந்து முடிவு காட்டினார் கால்டுவெல்.

ADVERTISEMENT

அவர் தனது ஒப்பாராய்ச்சியின் நோக்கம் பற்றிக் கூறும்போது, ""திராவிட மொழிகளின் மிகப் பழைய அமைப்பு முறை, தனிச் சிறப்பு ஆகியவை பற்றி முழு விளக்கங்களையும் பெறும் நிலையில் இலக்கண விதிகளையும், அமைப்பு முறைகளையும் ஆராய்வதும், ஒன்றோடொன்று ஒப்பு நோக்குவதுமே எனது ஆய்வாகும்'' என்றார்.

அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்து நாட்டில் கல்வி பயின்று, இங்கிலாந்து நாட்டில் பயிற்சி பெற்று, தமிழகத்தில் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் இருந்து அளவில்லாத அரும்பணிகளை ஆற்றினார்.

"தோகை' என்னும் சொல், தமிழிலும் மற்றைய திராவிட மொழிகளிலும் மயிலின் இறகைக் குறிப்பதாகும். திருக்குறளிலும் மயில்களின் பீலிகளை ஏற்றிக்கொண்டு வண்டிகள் சென்றதைக் குறிப்பிடுவது உண்டு. ஈபுரு மொழியிலுள்ள விவிலியத்தில் காணப்படும் "துகி' என்னும் சொல் தோகையின் சிதைவே என்றும் விளக்கிக் காட்டினார். மத்திய ஆசியாவில் வழங்கும் சிந்திய மொழிகளில் கோழியைக் "கோரி' என்ற சொல்லால் குறிக்கின்றார்கள். "கோரி' என்பது "கோழி' என்ற தமிழ்ச் சொல்லின் சிதைவே என்று கால்டுவெல் காட்டினார். ஆசிய மொழிகளிலும் "கோழி' என்பது "கோரியா'யிற்று.

தமிழ்நாட்டில் "வான்கோழி' என்னும் ஒரு வகைக் கோழி உண்டு. "கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி' என்ற பாடல் அனைவரும் அறிந்ததாகும். கால்டுவெல் அதைப்பற்றிக் கூறும்போது, ""வான்கோழி ஐரோப்பிய நாடுகளிலிருந்து பதினாறாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. வான்கோழியைப் பற்றிய குறிப்பு மூதுரை நூலில் காணப்படுவதால் அந்நூல் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னே எழுதப்பட்டிருக்க முடியாது'' என்கிறார்.

தமிழில் சிறப்பெழுத்தாக வழங்கும் "ழ'கரம் பிற நாட்டார் நாவில் எளிதாக நுழைவதில்லை. சோழ மண்டலக் கரையைக் "கோரமண்டலக் கரை'யாகச் சிதைத்தனர் மேலை நாட்டார். தமிழகத்தைத் "தமரிக்கா' என்று குறித்தனர் கிரேக்க ஆசிரியர்கள்.

கால்டுவெல் இளமையிலேயே மேலை நாட்டுச் செம்மொழிகளாகிய கிரேக்கமும், லத்தீனும் கற்றிருந்தார்; கிறித்தவ சமய நுண் பொருளை அறிய ஈபுரு மொழியைப் படித்தார்; தமிழ் நாட்டுக்கு வந்த பின்னர் வடமொழியையும், தமிழையும் ஆர்வத்தோடு பயின்றார்; ஜெர்மானிய அறிஞர்கள் இந்திய மொழிகள் குறித்து எழுதிய ஆராய்ச்சி நூல்களைப் பயில ஜெர்மானிய மொழியைக் கற்றார். இவ்வாறு பதினெண் மொழிகள் அறிந்த பல்கலைச் சிறப்புப் பெற்றார்.

கால்டுவெல் இளமையிலேயே மொழி நூல் ஆராய்ச்சியில் ஆர்வமுடையவராயிருந்தார். அவர் ஸ்காத்லாந்தில் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்றபோது மொழியாராய்ச்சி தீராத பற்றாக உருவாயிற்று. இந்த ஆராய்ச்சி படர்ந்ததன் விளைவாகத் தமிழகம் வந்ததும், பழந்தமிழ்ச் சொற்களைப் பழங் கன்னடச் சொற்களோடும் ஆதி ஆந்திரச் சொற்களோடும் ஒப்புநோக்கி நூற்றுக்கணக்கான சொற்களின் வேர்கள் மும்மொழிகளிலும் ஒன்றுபட்டிருக்கக் கண்டார்; மேலை நாட்டு மொழி நூல்களில் கண்ட ஆராய்ச்சி முறையைக்கொண்டு தென்னிந்திய மொழிகளை ஒப்பிட்டார். அவ்வாராய்ச்சியின் பயனாகத் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும், சொல்லாக்க முறைகளும் அடிப்படையான ஒற்றுமையுடையன எனக் கண்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம், குடகு ஆகிய ஆறு மொழிகளும் திருந்திய மொழிகளாம். நீலகிரியில் வாழும் தோடர் மொழியும், கொண்ட வனத்தில் வாழும் கொண்டர் மொழியும், ஒடிஸா நாட்டில் வாழும் கூவர் மொழியும், நாகபுரியில் வாழும் ஒரியர் மொழியும், ராசமால் கிரியில் வாழும் மேலர் மொழியும் திருந்தாத திராவிட மொழிகளாகும்.

""தென்னிந்திய மொழிகளுள் மலையாளம், தமிழொடு நெருங்கிய தொடர்புடையது. பிற்காலத்தில் வட சொற்களையும் போக்குகளையும் தழுவிய தன்மையால் தற்கால மலையாளம், முற்கால மலையாளத்தினின்று வேறுபட்டு வழங்குகிறது. வட சொற்களை அளவின்றிச் சேர்த்துக் கொண்டதால் தற்காலத் தெலுங்கும், கன்னடமும், வட மொழியின் உதவியின்றித் தனித்தியங்கும் ஆற்றலிழந்துவிட்டன' என்றும் குறித்துள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்திய மொழிகள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் எழுதிய பல கட்டுரைகளை ஆய்வு செய்தார். அவ்வகையில் அறிவுப் பணியோடு கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார். ஆறடிக்குக் கீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும், கடற் சங்கும், சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இன்றுள்ள கொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று ஆய்வு செய்தார். இவ்வூரும் பண்டைய கடற்கரைத் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என எழுதினார். இந்த நிலையில் சிங்கள வரலாற்று இலக்கிய நூலான "மகாவம்சம்' நூலின் துணைகொண்டு ஈழ, தமிழக உறவுகளையும் கால்டுவெல் ஆய்வு செய்தார்.

இவரது ஒப்பிலக்கண நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அதனை முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்தவர் புலவர் கா. கோவிந்தன். அதற்குத் தூண்டுகோலாக, உரைவேந்தர் ஒளவை துரைசாமியார் தம்மிடமிருந்த ஒப்பிலக்கண முதற்பதிப்பை தந்து மொழிபெயர்க்கச் சொல்லி வழிநடத்தினார். இது தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.

""நான் தமிழர்களுக்காகவே இருந்தேன். உயிர் உள்ள வரையிலும் தமிழர்களுக்காகவே உழைப்பேன். தமிழ் மண்ணின் மடியிலேயே மடிவேன்'' என்று உருக்கமாகப் பேசிய கால்டுவெல், நாடு முழுவதும் நடைப் பயணமாக நடந்ததால் வெப்பம் தணியக் கொடைக்கானலில் தங்கியிருந்தபோது உயிர் நீத்தார். மறைந்த அவர் உடலைத் தாயகமாக அவர் கருதிய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடையன்குடிக்கு எடுத்துச் சென்று அவர் கட்டிய கோயிலில் அடக்கம் செய்தார்கள்.

இடையன்குடியில் கால்டுவெல் கண்ணீரும் செந்நீரும் கொட்டி வளர்த்த திருக்கோயிலின் மேலே வைக்கப்பட்டுள்ள நான்கு மணிகளின் மற்றொரு தொகுதி லண்டன் மாநகரில் மட்டுமே உள்ளதாம். இடையன்குடியில் மீளா உறக்கத்தில் இருக்கும் ஒப்பிலக்கணத் தந்தை, பேராயப் பெருந்தகை கால்டுவெலின் புகழொளியும் மணியோசையும் என்றும் இசைத்துக் கொண்டிருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT