தமிழ்மணி

அகிலன் பெறாத சன்மானம்!

நல்லி குப்புசாமி செட்டி

புதுக்கோட்டை ஒரு காலத்தில் சமஸ்தானமாக இருந்தது. அதை ஆண்ட ராஜாக்களின் காலத்தில் அங்கே கலை, இலக்கிய ஆர்வலர்கள் பெரும் ஆதரவைப் பெற்றார்கள். பி.யு. சின்னப்பா, ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களும், அகிலன் என்று அழைக்கப்பட்ட பி.வி. அகிலாண்டம் போன்றவர்களும் புதுக்கோட்டைக்கும், தமிழ் கலை இலக்கிய உலகுக்கும் பெருமை சேர்த்தவர்கள். இவர்களில் அகிலனுக்கு இது நூற்றாண்டு. ஜீவியந்தராக இருந்தால் இன்று அவரை மேடையில் வைத்து பிறந்தநாள் கொண்டாடி இருப்போம். நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லை.

பிற எழுத்தாளர்கள் முழுநேர இலக்கியப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அகிலன் உத்தியோகம் பார்த்துக்கொண்டு எழுத்துத் துறையிலும் இருந்தார். முதலில் "ரயில்வே மெயில் சர்வீஸ்' என்று அழைக்கப்பட்ட ஆர்.எம்.எஸ். இல் வேலை பார்த்தார். பின்னர் சென்னை வானொலி நிலையத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினார். கதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுத அவருக்குப் போதிய அவகாசம் கிடைத்தது. நல்ல நண்பர்களும் கிடைத்தார்கள். பொதுவாக தானுண்டு தன் வேலை உண்டு என்றே வாழ்ந்தவர்.
அகிலனின் சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. சில தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வெளிவந்தன. அவருடைய நாவல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அவரது நடை மிகவும் எளிமையானது. கதாபாத்திரங்கள் எதார்த்தத்திற்கு உட்பட்டவர்கள். அதே நேரம், அந்தக் கதாபாத்திரங்கள் மூலமாக வாழ்க்கை எப்படி லட்சியத்துடன் அமைய வேண்டும், ஏன் அமையவில்லை என்ற எண்ணங்களை வாசகர்களிடையே ஏற்படுத்தியவர்.
இவர் எழுதிய நாவலை ஆதாரமாகக் கொண்டுதான் "பாவை விளக்கு' திரைப்படம் வெளிவந்தது. அதன் கதாநாயகன் சிவாஜி கணேசன். "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்ற திரைப்படமும் இவரது கயல்விழி கதையை ஒட்டியதே. இதன் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.
அகிலனுக்கு இலக்கிய உலகில் பரந்து விரிந்த நட்பு இருந்தது. "வேங்கையின் மைந்தன்' என்ற நாவலுக்கு சாகித்திய அகாதெமி பரிசைப் பெற்றார். "சித்திரப்பாவை' என்ற நாவலுக்காக "ஞான பீடம்' பரிசைப் பெற்றார். ஞானபீட பரிசைப் பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன்தான். இவருடைய சில கதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பெரிதும் புகழப்பட்ட தமிழ் இலக்கிய மும்மூர்த்திகள் அகிலன், ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி. இவர்களில் ஜெயகாந்தனும், நா. பார்த்தசாரதியும் பத்திரிகை உலகில் இருந்ததனால் நினைத்ததை எழுதுவதற்கு சுதந்திரம் இருந்தது. அகிலனுக்கும் சுதந்திரம் இல்லாமல் இல்லை. ஆனால், மத்திய அரசு சார்ந்த அகில இந்திய வானொலியில் பணியாற்றியதால், எழுத்து சுதந்திரம் சற்றே மட்டுப்பட்டிருந்தது என்றே சொல்லலாம். இருந்தாலும்கூட, அகிலன் சமூகம் பற்றிய தன் விமர்சனங்களை எதார்த்தமான கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.
இந்த மூவரில் ஜெயகாந்தனும், அகிலனும் ஞானபீட பரிசு பெற்றவர்கள். நா. பார்த்தசாரதி அதை நூலிழையில் தவறவிட்டவர். ஞானபீட பரிசைத் தொடங்கியபோது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மொழி என்று படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். முதலில் தேர்வு செய்யப்பட்டவர் வங்காளத்தைச் சேர்ந்த மஹா ஸ்வேதா தேவி. தமிழில் முதலில் ஞானபீட பரிசைப் பெற்றவர் அகிலன். ஜெயகாந்தனுக்கு சற்றே தாமதமாகத்தான் கொடுக்கப்பட்டது என்று கருதப்பட்டாலும், தமிழுக்கு இரண்டாம் சுற்றாக பரிசு வந்தபோது அவர் அதைப் பெற்றார்.
தீபம் நா. பார்த்தசாரதி 1987}ஆம் ஆண்டு தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டார். 08.12.87 அவர் பற்றிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன. ஆனால், அவர் 13.12.87}இல் காலமானார். வாழ்பவர்களுக்கே அந்த விருது என்பதனால் நா.பா. அந்த வாய்ப்பை இழந்தார். அகிலனின் "எரிமலை' என்ற சிறுகதைத் தொகுப்பு சமூகத்தை பல கோணங்களில் கற்பனை கதாபாத்திரங்கள் மூலம் அணுகுகிறது. ஒவ்வொரு கதையும் அருமை என்றே சொல்ல வேண்டும். தான் பார்த்ததை, தன் மனத்தில் பதிந்ததை, தன் வாசகர்களுக்குச் சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாகவே சொன்னார் அகிலன்.
பொதுவாக எதிலும் அவர் வரம்புக்கு அப்பாற்பட்ட விஷயங்களைத் தொட்டதில்லை. தொட்டதையெல்லாம் துலங்க வைத்தார். இவரது "எரிமலை' தொகுதியை என் நண்பர் ஒருவர் 1977}ஆம் ஆண்டிலேயே மொழிபெயர்த்தார். "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் தன் "வீக் எண்டு' என்ற இலக்கிய இணைப்பிதழிலில் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்ற படைப்புகளை வாரம்தோறும் வெளியிட்டு வந்தது. அதன் பொறுப்பாசிரியராக இருந்தவர் விஸ்வநாதன் என்பவர்.

அவர் அகிலன் எழுதிய ஒரு சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். மறுவாரம் அதற்குரிய சன்மானத்தை மொழிபெயர்ப்பாளருக்கும், மூல கதாசிரியருக்கும் கொடுக்க இருந்தபோது, மூல கதாசிரியர் அகிலன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கே சென்றார். இவர் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அகிலன் காலமானார். "தான் கொண்டு வந்த காசோலையைக் கொடுக்க முடியாமல் போயிற்றே' என்ற வருத்தம் விஸ்வநாதனுக்கு இருந்தது.

அன்று இரவே தன்னுடன் "தினமணி கதிரி'ல் பணியாற்றி வந்த திருப்பூர் கிருஷ்ணனை அழைத்து, ""மொழிபெயர்ப்பாளர் உங்கள் வீட்டுக்கு அருகேதான் இருக்கிறார். அவரை இன்றிரவே சந்தித்து, நாளை காலை அகிலன் பற்றி ஆங்கிலத்தில் ஓர் அஞ்சலி கட்டுரை எழுதச் சொல்லி அதை வாங்கித் வாருங்கள்'' என்று சொன்னார். அதன்படியே திருப்பூர் கிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளரை சந்திக்க, அவர் மறுநாள் காலை, முதல் வேலையாக அகிலன் பற்றிய ஆங்கில அஞ்சலி கட்டுரையைக் கொடுத்துவிட்டார்.

அன்று வெள்ளிக்கிழமை மறுநாள் காலை வெளிவந்த சனிக்கிழமை "வீக் எண்டு' காலத்தில் அந்தக் கட்டுரை வெளிவந்தது. இந்த நிகழ்வு நடந்து வெகுநாள்களுக்குப் பிறகும் அகிலனிடம் நேரில் சன்மானத்தை சேர்ப்பிக்க முடியாமல் போயிற்றே என்று வருந்தினார் பொறுப்பாசிரியர் விஸ்வநாதன்.

அகிலன் சன்மானங்களையோ, விருதுகளையோ நாடிச் சென்றதில்லை. அவை அவரைத் தேடி வந்தன. அதுவே அவரது சிறப்பு. எளிமைக்கும் இனிமைக்கும் பேர் பெற்ற அகிலன் இன்றும் வாசகர்கள் மனத்தில் வாழ்கிறார்.

(எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு நிறைவு: 27.6.2022)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT