தமிழ்மணி

நட்பில்  பூத்த "வந்தே மாதரம்' பாடல்!

முனைவர் யாழ்.சந்திரா


வந்தே மாதரம் என்னும் மந்திரத்தால்
எய்தாத வரமும் இல்லை
நந்தேய மக்களுக்கு நலம் தருவது
இதுபோல எந்நாட்டும் இல்லை
முந்தேயும் மந்திரம் போல் ஒருசிலர்க்கே
ஆவதென்று முற்றுமாகும்
வந்தேற்றுக் கொண்மின் எல்லா வாழ்வுக்கும்
வித்திதுதான் மறக்கொணாதே!

இந்த "வந்தே மாதரம்' கவிதையை எழுதியவர் யார்? மகாகவி பாரதியின் "வந்தே மாதரம்' பாடல்கள் பலவற்றிலும், மேற்குறித்த கவிதைப் பத்தி இல்லை. ஆக, இக்கவிதை பாரதியால் எழுதப்பட்டதன்று.

மேலே குறிப்பிட்ட பாடல் "விவேகபாநு' இதழில், (நவம்பர் 1906, பக்.340}341) "சோழவந்தான் வித்துவான் ஸ்ரீமத் அ. முகம் பிள்ளை இயற்றியன' என்ற தலைப்பில் அமைந்த கவிதையின் கடைசி பகுதியே ஆகும். யார் இந்த முகம்பிள்ளை?

கொழுத்துன்னூசி விளக்கமும் மறுதலைக் கடாமாற்றமும், ஆகுபெயர், அன்மொழித்தொகை ஆராய்ச்சி, நுணங்குமொழிப் புலவர்க்கு வணங்கு மொழி விண்ணப்பம், மதுக்கூரார் புலம்பலுக்கு வாயாப்பு வச்சிரம் } என்றெல்லாம் மறுப்புக் கட்டுரைகள் எழுதியும், மாலைமாற்று மாலை, திருவடிப்பத்து, சிதம்பர விநாயகர் மாலை, மீனாட்சியம்மை சந்தத் திருவடி மாலை, ஏகபாத நூற்றந்தாதி என்றெல்லாம் மரபுக்கவி நூல்கள் எழுதியும், தொல்காப்பியப் பாயிர விருத்தி, திருக்குறள் சண்முகவிருத்தி, தொல்காப்பிய நுண்பொருட் கோவை என்று உரையும் மறுப்பும் எழுதியும் புகழ்பெற்ற நான்காம் தமிழ்ச்சங்கப் புலவரான சோழவந்தான் அரசஞ்சண்முகனார்தான் அந்த "வந்தே மாதரம்' கவிதைக்குக் சொந்தக்காரர்!

பாரதியார், தமது "சுதேசமித்திரன்' இதழில் (13.2.1906, பக்.1) ""எமது தாய் நாடாகிய பாரதத் தாயின் பெருமையை வருணித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல்வேறு காலத்து பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள் மணிகளை ஒரு மாலையாகப் புனைந்து புதுப்பிக்க கருதி இருக்கிறேனாதலின், பண்டைத் தமிழ் நூல்களில் பாரதநாடு முழுதினையும் ஒருங்கே புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பாடல்களை அறிஞர்கள் தெரிந்தனுப்புவார்களாயின், அவர் மாட்டுக் கடப்பாடுடையனாவேன்'' என்று விண்ணப்பித்தும், ""தற்காலத்தே தமிழ்ப் புலமையிற் சான்று விளங்கும் பெருமக்கள் புதியவையாகத் தேசபக்திப் பாக்கள் புனைந்தனுப்புவராயின் அவையும் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்படும்'' எனவும் அறிவிக்கிறார்.

இவ்வறிப்புக்கு உடனடியாக எவ்விதப் பலனுமில்லை. கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழித்து நவம்பர் மாத "விவேக பாநு'வில், பாரதியின் விண்ணப்பத்திற்குக் கிடைத்த பதிலைப் போல அரசஞ் சண்முகனாரின் "வந்தே மாதரம்' பாடல் அமைகிறது. தமிழ்ச் சங்க ஆசிரியர்களுள் ஒருவரான மு.ரா.கந்தசாமிக் கவிராயரை ஆசியராகக் கொண்டு மதுரையில் இருந்து வெளியான மாத இதழ்தான் "விவேகபாநு'. மதுரையில் வசித்த இவர், தமிழ்ச் சங்கப் புலவராக இருந்த அரசஞ்சண்முகனாரின் நண்பர். வ.உ.சி.யோடும், பாரதியாரோடும் நட்புப் பூண்டவர். தமது பத்திரிகைப் பணியை 1907}ஆம் ஆண்டில் உதறிவிட்டு, வ.உ.சி.யின் சுதேசக் கப்பல் நிறுவனத்திற்கு நிதி திரட்ட தமிழகம் முழுவதும் வலம் வந்தவர்.

மதுரை சேதுபதி பள்ளியில் ஒருசில மாதங்களே (1904 ஆகஸ்டு } நவம்பர்) பணியாற்றிய பாரதிக்கு கந்தசாமிக் கவிராயர், அரசஞ்சண்முகனார் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்பழக்கத்தில் பாரதியார் சண்முகனாரை அணுகி, "வந்தே மாதரம்' என்பதற்குப் பொருள் கேட்டாராம். நாளுக்கு ஓர் உரையாக பதின்மூன்று நாள்களில் வெவ்வேறு பொருள் உரைத்தார் அரசஞ்சண்முகனார்என்பனர்.

அரசஞ்சண்முகனாரின் "வந்தே மாதரம்' பாடல் வெளியான "விவேகபாநு'வைப் பார்த்த பாரதி மகிழ்ச்சி அடைகிறார். தமது "இந்தியா' இதழில் (24.11.1906) "ஒரு முக்கியமான அறிகுறி' என்ற தலைப்பில் ""இலக்கண விளக்கங்களிலே தனது நாளெல்லாம் கழித்த பின்பு சிரோமணிகள் இப்போது ராஜாங்கத்தாரின் செலவுக் கணக்குகளிலே சிரத்தை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள்'' என்று அதிசயிக்கிறார். மேலும், ""இந்த எழுத்துரையின் தொடக்கத்தில் சுட்டப்பட்ட பாடலின் முதற் பகுதியைச் சுட்டி, இது ஆகுபெயரா? அன்மொழித் தொகையா? தொல்காப்பியத்திற்கு இவ்விடத்தில் நச்சினார்க்கினியர் கூறிய உரை பொருந்துமா? பொருந்தாதா? என்பதுபோன்ற இலக்கண விவகாரங்களைச் சிறிது அகற்றிவைத்துவிட்டு, இந்த வித்துவான் வந்தே மாதரம் என்று பாட்டியற்றத் தொடங்கிவிட்டார்'' என்று பாராட்டுகிறார்.

மகாகவி பாரதி, அரசஞ் சண்முகனாரின் தமிழாய்வுப் பற்றினை, ""ஸ்ரீ.அ. சண்முகம்பிள்ளை மலைபுரண்ட போதிலும் தமது கல்வியின்றும் கருத்தை அகலவிடாத தன்மை உடையவர். இலக்கிய ஆராய்ச்சியே இவருக்கு முக்கியத் தொழில், அதுவே இவருக்கு உயிர். இதைத் தவிர வேறொன்றையும் இவர் கவனிப்பது வழக்கம் கிடையாது'' என்று விவரிக்கிறார்.

"விவேகபாநு'வில் பிரசுரமான அரசஞ்சண்முகனாரின் "வந்தே மாதரம்' பாடலை முழுமையாக தமது "இந்தியா'வில் மறுபிரசுரமாக வெளியிட்டார் பாரதி. அரஞ்சண்முகனாரின் பண்பை, அவரது இலக்கணப் பற்றை சிலாகிக்கும் பாரதி, ""இப்போது பாரததேவி இவருடைய சிந்தையையும் மாற்றிவிட்டார். பாரத தேவியின் தெய்வீக விழிகளினின்றும் உதிரும் கண்ணீர் இவரது நெஞ்சை உருக்கி இவரை எமது தாய்க்கு அடிமையாக்கிவிட்டது. கல்வித் தாய்க்கு மட்டுமே, இதுவரை வழிபாடற்றி வந்த இவர் இப்போது பூமித்தாய்க்குத் தொண்டு புரிவது அதைக் காட்டிலும் உயர்வாகும் என்பதை அறிந்து கொண்டார்'' எனவும் எழுதுகிறார்.

விடுதலைப் போராட்ட வீரர்களான பாரதியும், வ.உ.சி.யும் மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர்களான மு.ரா.கந்தசாமிக் கவிராயர், அரசஞ்சண்முகனார் முதலியவர்களோடு நட்பு கொண்டிருந்தனர். இந்நட்பு, புலமைப் பொருளில் வித்தூன்றி, விவேக பாநுவாக முளைத்து, சுதந்திர உணர்வில் கிளைத்து, வந்தே மாதரம் பாடலால் செழித்தது. இதனை அரசஞ்சண்முகனாரே, ""நண்பால் ஓதுவோம் வந்தே மாதர மந்திரமே'' என்று உரைப்பது கருதத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT