தமிழ்மணி

ஏழைக்கு எழுத்தறிவித்தல்

19th Jun 2022 05:27 PM | - முனைவர் சீனிவாசகண்ணன்

ADVERTISEMENT


பள்ளி மாணாக்கருக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், புத்தகப் பை, கையடக்கக் கணிப்பொறி, அறிதிறன் பேசி, சைக்கிள், காலணி, சீருடை, உணவு ஆகியவற்றை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இலவச உறைவிடப் பள்ளிகளும் ஆங்காங்கே செயல்பாட்டில் உள்ளன. 

மேற்குறித்த கல்வி வசதிகள் எல்லாம் இக்காலத்தில்தான் உருவாக்கம் பெற்றுள்ளன என்று கருதுவது  தவறு. ஏனெனில், தமிழகத்தைப் பொறுத்தவரை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவை அனைத்தும் நம் முன்னோரால் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ஏலாதி. இதை எழுதிய ஆசிரியர் கணிமேதாவியார் ஒரு சமணர். (சமணர்கள் தமிழுக்கு அளித்த கொடை பள்ளிக்கூடம். "பள்ளி' என்றால் சமணத் துறவியர் தங்குமிடம். அங்கு மாணாக்கருக்குக் கல்வி போதனை நடைபெற்றது. அதன் காரணமாக வழக்கில் வந்ததுதான் "பள்ளிக்கூடம்' எனும் சொல்). இவர் மாக்கயனாரிடம் தமிழ் பயின்றவர்.

ஏலம், இலவங்கப் பட்டை, நாககேசரம் அல்லது சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு சரக்குகளால் ஆன மருந்து ஏலாதி எனப்படும். இம்மருந்து மாந்தரின் பிணி நீக்கி, உடல் நலம் தருவது போன்று இதிலுள்ள ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஆறு கருத்துகள் மக்களின் உளநோய் தீர்க்கவல்லதாகலின் இது ஏலாதி எனப்பட்டது.

ADVERTISEMENT

ஒரு பிறப்பில் கல்விக் கொடையாளர்களாக விளங்குபவர், அடுத்த பிறவியிலும் பெயரும் புகழும் பெற்று வாழ்வார்கள் என்பதைக் கீழ்க்காணும் பாடல்  எடுத்துரைக்கிறது.

"ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடும் எண்ணும் எழுத்திவை
மாணொடு கேட்டெழுதி ஓதிவாழ் வார்க்கீந்தார்
இம்மையான் வேட்டெழுத வாழ்வார் விரிந்து'

முற்பிறவியில் மாணாக்கருக்கு உணவு, உடை, எழுத்தாணி, புத்தகம் (ஏடுகள்) முதலியவற்றை தானமாகக் கொடுத்து உதவியவர்கள் இப்பிறவியில் பெரும் புலவர்கள் விருப்பத்துடன் புகழ்ந்து பாடுமாறு பெருவாழ்வு பெற்றவராய் வாழ்வது உறுதி எனும் பொருள்பட   இப்பாடல் அமைந்துள்ளது.

இதை நன்குணர்ந்ததால்தான் மகாகவி பாரதி, பலவிதமான தான}தருமங்கள் புரிவதால் ஏற்படும் புண்ணியம், புகழ் ஆகியன குறித்துப் பாடும்போது, 

"அன்னயாவினும் புண்ணியம் கோடி /  
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்று அறுதியிட்டு கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT