தமிழ்மணி

மலை சாய பாடிய கவிராயர்

மீனாட்சி பாலகணேஷ்


தமிழ்ப் பாடல்களும் அவற்றைப் பாடும் தமிழ்ப் புலவர்களின் வாக்கும் தெய்வத்தன்மை உடையவையாகும். இதனை நிரூபிப்பதே இந்த நிகழ்ச்சியும் அது தொடர்பாக எழுந்த பாடல்களும்.

தென்பாண்டி நாட்டிலுள்ள சேற்றூர் எனும் ஊரில் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு குறுநில மன்னர் வாழ்ந்திருந்தார். அவர் அடுத்த ஊரான தேவதானம் எனும் ஊரில் கோயில் கொண்டிருந்த "பெற்ற நாயகியார்- நச்சடை லிங்கர்' எனும் அம்மையப்பர் மீது கொண்ட பேரன்பினால் அத்திருக்கோயிலின் முன்பு அழகான மண்டபம் ஒன்று கட்ட எண்ணினார்.    அதற்குத் தோதாக அவ்வூரின் அருகிலிருந்த ஒரு மலையில் ஒரு தட்டைப்பாறை அமைந்திருந்தது. ஆனால், அதுவோ மலையின் முடியில் இருந்தது. அதனால் அதனை ஏதும் செய்ய முடியவில்லை. அப்பாறை கீழே நழுவிவிட்டால் மன்னர் எண்ணிய திருப்பணி செய்ய வாகாக இருக்கும். மன்னர் இதைப் பற்றி சிந்தித்தபோது அவருக்கு ஒருவழி புலப்பட்டது.

அவ்வூருக்கு பக்கத்து ஊரான எட்டிச்சேரி எனும் ஊரில் சங்குப் புலவர் எனும் பெயர்கொண்ட தமிழறிஞர் ஒருவர் வாழ்ந்திருந்தார். அவர் வழக்கம்போல ஒருநாள் குறுநில மன்னரின் அவைக்கு  வருகை புரிந்தார்.

மன்னரும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று, "புலவரே! தங்கள் தெய்வத்தமிழ் வாக்கு பலிதமுள்ளது என்று பலரும் கூறுகின்றனர்.  தாங்கள் இம்மலையின் முடியில் உள்ள தட்டைப்பாறை சரிந்து கீழே விழும்படி ஒரு பாடல் பாடவேண்டும்; அது நிகழ்ந்தால் நாம் எண்ணியுள்ள கோயில் மண்டப வேலை எளிதாகும்' என வேண்டினார்.

சங்குப் புலவர் திடுக்கிட்டார். இது நம்மால் முடிகின்ற காரியமா என எண்ணினார். முடியாது என மன்னரிடம் கூறவும் தயக்கம். "அவ்வாறே செய்கிறேன்' என மன்னரிடம் கூறிவிட்டு பெற்றநாயகி அம்மன் சந்நிதிக்குச் சென்று அவள் முன் அமர்ந்து பாடலானார்.

நிலைசாயொ ணாத தவசே புரிந்து நிறையமுத
கலைசார் தவம்பெற்ற தென்சேறை நாதனைக் கண்டவளே
உலைசார் உளிவைத்துக் கற்பணி செய்ய உனதருளால்
மலைசாய வேண்டும் தவம்பெற்ற நாயகி மாதங்கியே!

என்று தொடங்கி அம்மையின் மீதுமூன்று பாடல்களைப் பாடி, பின் அவற்றை ஓர்ஓலையிலெழுதி அன்னையின் திருவடிகளில் வைத்துவிட்டுக் கோயிலிலேயே படுத்துக் கொண்டார்.

அன்றிரவு கடுங்காற்றுடன் கூடிய பெருத்த மழை பெய்து அதனால் மலை மேலிருந்த தட்டைப்பாறை நழுவிப் பொடிபடாமல் தரையில் வந்து நின்றது. மறுநாள் காலையில் மன்னர் இச்செய்தியை அறிந்தார். சங்குப் புலவர்பால் அவருக்குப் பேரன்பும் பெருமதிப்பும் உண்டாயிற்று. அவரைப் பலவாறு பாராட்டி மகிழ்ந்தார். 

சங்குப் புலவருக்குப் பரிசில் அளிக்க எண்ணி, "புலவரே! உமக்கு என்ன வேண்டும்?' எனக்கேட்க, அவரோ, "இது தெய்வத் திருவருளாலும் தமிழின் வலிமையினாலும் நிகழ்ந்தது. இதற்காக எனக்கு எதுவுமே கொடுக்க வேண்டாம்' எனக் கூறிவிட்டார். "வேண்டாமையே ஒரு பெரும் செயல்' என்று அவர் செயலால் காட்டிவிட்டார். சங்குப்புலவரின் இச்செயல் குறித்து மற்றொரு புலவர்,

பெற்றநா யகிபொற் கோயில் பெருந்திருப் பணியின் வேலை
முற்றவே வேண்டி யாறு முகக்கவி ராயன் செம்பொற்
சிற்றடி மனத்துள் வைக்கும் திறற்சங்குக் கவிஞன் சேறை
நற்றளி மலையைத் தன்னால் நகரவே பாடி னானே

என்று பாடி வைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT