தமிழ்மணி

பெயர்தான் சின்ன அண்ணாமலை...!

நல்லி குப்புசாமி செட்டி


தேசபக்தரும், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான சின்ன அண்ணாமலையை நான் என் தந்தையைப் போல் மதித்து வந்தேன். அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அவர் மகன் கருணாநிதியும், நானும் சென்னை தியாகராய நகர் ராமகிருஷ்ண மிஷன் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்து வந்தோம். மேலும், எங்கள் கடைக்கு அடுத்த கட்டடத்தில்தான் அவர் நடத்திய "தமிழ்ப் பண்ணை'  பதிப்பகம் இருந்தது. எனவே, தினமும் வீட்டுக்குத் திரும்பும்போது அந்தப் பதிப்பகத்திற்குச் சென்று வருவேன். அந்தக் காலத்தில் வெவ்வேறு தலைப்புகளில் ஆன சின்னஞ் சிறு புத்தகங்களை நேர்த்தியாக அச்சிட்டு, குறைந்த விலையில் வெளியிட்டு வந்தார். பல தமிழ்ப் பதிப்பாளர்களுக்கு அவரே ஆசான். அவர் நடத்திய "தமிழ்ப் பண்ணை' தமிழ்ப் பதிப்பகங்களில் பல வகைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தது.

நகரத்தாரும், பிறரும் பதிப்புத்துறையில் நுழைய அவர் வழிகாட்டியாக இருந்தார். புத்தகங்கள் மீது வாசகர்கள் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தம் பதிப்பக வாசலில் ஒரு கரும்பலகையில் புதிய புத்தகங்களை குறிப்பிட்டு, அவற்றில் உள்ள செய்திகளை சாக்பீஸால் எழுதி வைத்திருப்பார். நான் அந்த வாசகங்களைப் படித்திருக்கிறேன். படிப்பவர்களை புத்தகத்தை வாங்கச் செய்யும் விளம்பர உத்தி அது.

நான் பதினாறு வயதில் கடைக்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்ட போது ராஜாஜி, பெரியசாமி தூரன், மீப. சோமு போன்ற பெரியவர்கள் தமிழ்ப் பண்ணைக்கு வந்து சென்றதைப் பார்த்திருக்கிறேன். சில சமயம் அவர்கள் சேர்ந்தார் போல் உஸ்மான் ரோடில் அப்போது வசித்து வந்த வெ. சாமிநாத சர்மா வீட்டிற்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.

தேசபக்தரான சின்ன அண்ணாமலை சுதந்திரப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும்படி சில புத்தகங்களை எழுதினார். அவர் தன் புத்தகங்கள் மூலம் வன்முறையைத் தூண்டுகிறார் என்று பிரிட்டிஷ் அரசாங்க உளவாளிகள் அவர் மீது குற்றம் சாட்டி, வழக்குத் தொடர்ந்தார்கள்.

அவரது "பூட்டை உடையுங்கள்' என்ற நூலின் தலைப்பும் உட்கருத்தும் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது. "முட்டுக்கட்டையை நீக்குங்கள்' என்ற பொருள்படும் "ரிமூவ் தி டெட்லாக்' என்ற ஆங்கில சொற்றொடரை "பூட்டுகளை உடையுங்கள்' என்று தமிழில் எழுதினார். இவர் சிறைப் பூட்டை உடைக்க சிறைவாசிகளைத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இவருக்கு மூன்றுமாத கால தண்டனை விதித்தார். இதுபற்றி சின்ன அண்ணாமலை "சொன்னால் நம்பமாட்டீர்கள்' என்ற தன் புத்தகத்தில் "பூட்டை உடையுங்கள்' என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

வழக்கு எழும்பூர் பிரதம மாகாண மாஜி ஸ்ட்ரேட் கோர்ட்டில் நடைபெற்றது. மாஜிஸ்ட்ரேட் ஒரு தெலுங்கர், பெயர் கோடீஸ்வர ராவ், சுத்தமாகத் தமிழ் தெரியாது. "பூட்டை உடையுங்கள்' என்பதை,  அவருக்கு "பிரேக் ஓபன் தி லாக்' என்று மொழிபெயர்த்துக் கொடுத்துவிட்டார்கள்.

இதை வைத்துக் கொண்டு அவர் ""எதுக்கு மேன் ஜெயில் பூட்டை உடைக்கும்படி சொன்னே?'' என்று கேட்டார்.

நான் அவருக்குப் பணிவுடன், ""பூட்டை உடையுங்கள் என்பதற்கு நான் கொள்ளும் அர்த்தம் "ரிசால்வ் தி டெட்லாக்' என்பதாகும்'' என்றேன்.

அவர் அதை ஒப்புக்கொள்ளாமல், "பூட்டை'  என்றால் "லாக்'  "உடை' என்றால் "பிரேக்' என்று அர்த்தம் எடுத்துக்கொண்டு சொன்னார். சர்க்கார் வக்கீலும் என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டரும் மாஜிஸ்ட்ரேட்டுக்குத் தலையாட்டினார்கள்.

உடனே நான் "கிக்கிட் தி பக்கெட்' என்றால் "இறந்து போனான்' என்று அர்த்தமே தவிர, "பக்கெட்டை உதைத்தான்' என்றா சொல்வது?'' என்றேன். கோர்ட் சிரித்தது. மாஜிஸ்ட்ரேட்டும் சிரித்துவிட்டு ""வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா?'' என்று கேட்டார்.

உடனே நான் ""நீங்கள் தெலுங்கர், உங்களுக்குச் சரியாகத் தமிழ் தெரியவில்லை. என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டரோ கன்னடக்காரர், அவருக்கும் தமிழ் தெரியாது. கேஸ் நடத்த வந்த சர்க்கார் வக்கீலோ மலையாளி. நான் வெளியிட்டிருக்கும் புத்தகமோ தமிழ்ப் புத்தகம். ஆகவே தமிழ் தெரிந்தவர்கள் இந்த வழக்கை நடத்த வேண்டுமென்று விரும்புகிறேன்'' என்றேன்.

மாஜிஸ்ட்ரேட்டுக்கு கோபம் வந்துவிட்டது ""வாட் டமில் டமில்'' என்று கூறி ஆறு மாத சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கிவிட்டார். என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டரே என்னிடம் வந்து ""காரியத்தைக் கெடுத்துவிட்டீர்களே!'' மாஜிஸ்ட்ரேட் மூன்று மாதம்தான் தண்டனை கொடுப்பதாக இருந்தார். ஆனால், நீங்கள் தமிழ் கிமிழ் என்று பேசி ஆறு மாதம் வாங்கிக் கொண்டீர்கள்''  என்று அனுதாபப்பட்டார்.

சின்ன அண்ணாமலை ராஜாஜிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவருடைய நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். அவரது நட்பு வட்டம் பெரியது. அதிலிருந்த எல்லோருமே அறிவு ஜீவிகள். தன் நகைச்சுவையான பேச்சின் காரணமாக மேடைப் பேச்சிலும், கலந்துரையாடல்களிலும் அவர் எப்போதுமே நடுநாயகமாக இருந்திருக்கிறார்.

பெயர்தான் சின்ன அண்ணாமலை; 
புகழில் அவர் ஒரு பெரிய அண்ணாமலை! 

சின்ன அண்ணாமலை நினைவு நாள் :18.6.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT