தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (12-05-2022)

12th Jun 2022 09:06 PM

ADVERTISEMENT

 

பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம் ஐயாவின் முகநூல் பதிவு எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதும், நான் அதிர்ந்தேன். தமிழக முதல்வரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு, நல்லதொரு முடிவு காண வேண்டும் என்பது "தினமணி' வாசகர்கள் சார்பில் எனது கனிவான வேண்டுகோள்.

தமிழகத்தின் மிகப் பழைமையான இலக்கிய அமைப்பு என்று சொன்னால் அது "தென்காசி திருவள்ளுவர் கழக'மாகத்தான் இருக்கும். 95 ஆண்டுகளுக்கு முன்பு, தென்காசியிலுள்ள நீதிமன்ற வழக்குரைஞர்களின் குமாஸ்தாக்கள் ஒருங்கிணைந்து தோற்றுவித்த அமைப்பு அது.

1927-ஆம் ஆண்டு "திருக்குறள் அட்டாவதானியார்' சுப்பிரமணியதாசர் என்பவரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட "தென்காசி திருவள்ளுவர் கழகம்' சாதாரணமானதல்ல. "செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரனாரின் தலைமையில் அதன் முதலாம் ஆண்டு விழா நடந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தக் கழகத்தின் விழாக்களில் திரு.வி.க., ரா.பி. சேதுப்பிள்ளை, மறைமலையடிகள், நீதிபதி மகராஜன், குன்றக்குடி அடிகளார் தொடங்கி,  கலந்து கொள்ளாத தமிழ்ச் சான்றோர் யாரும் இருக்க முடியாது.

ADVERTISEMENT

"தென்காசி திருவள்ளுவர் கழகம்' முன்னெடுக்கும் சீரிய தமிழ்ப் பணிகள் ஒன்றிரண்டல்ல. பிற ஊர்களிலிருந்து தமிழ்ச் சான்றோரை வரவழைத்து, ஞாயிறுதோறும் அவர்கள் நடத்தும் வாராந்திர திருக்குறள் ஆய்வு ஒன்று போதும் அந்த அமைப்பின் செயல்பாட்டை எடுத்தியம்ப. மாதந்தோறும் திருக்குறள் முற்றோதல், பள்ளிக் குழந்தைகளுக்குத் திருக்குறள் வழங்கி ஊக்குவித்தல், அனைவரும் பயன்பெற நூலகம், திருக்குறள் குறித்த புத்தகங்கள் வெளியிடுதல் என்று அவர்கள் செய்யும் குறள் தொண்டு எண்ணிலடங்காது.

கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் தென்காசித் திருநகரில், உலகம்மை உடனுறை காசி விசுவநாதருக்குத் திருக்கோயில் எழுப்பினார் என்பது வரலாறு. அந்தத் திருக்கோயிலின் முற்றத்தில் அறச்சாலை மண்டபம் அமைத்தார் பராக்கிரம பாண்டியன். அந்த அறச்சாலை மண்டபத்தில் அருளாளர்களையும், அறிஞர்களையும் கொண்டு அறம் சார்ந்த கருத்துகளை போதனை செய்யச் செய்தார். அந்த அறச்சாலை மண்டபத்தின் அருகில் அதனுடன் ஒருங்கிணைந்த பகுதியில்தான்  "தென்காசி திருவள்ளுவர் கழகம்' இயங்கி வருகிறது.

"தென்காசி திருவள்ளுவர் கழகம்' என்பது சாமானியர்களால் நடத்தப்படும் அமைப்பு. குறள் பரப்பும் அவர்களது தொண்டுக்காக, பெயருக்கு ரூ.1 தரை வாடகை பெறப்பட்டது. இப்போது அறநிலையத்துறை "அதற்கு மாதம் ரூ.1,000 வாடகை வேண்டும்' என்று கேட்டால், அவர்கள் எங்கே போவார்கள்? கோயில் வளாகத்தில் இருக்கும் வணிகர்களுக்கு வாடகையைக் கூட்டுதல் நியாயம். தமிழ் அமைப்புக்கும் அதே அளவுகோலைப் பயன்படுத்தினால், அது எப்படி சரி?

தென்காசியில் மட்டுமல்ல, தமிழகத்தின் ஏனைய ஆலயங்களிலும் தமிழும் சமயமும் வளர்க்கும் அமைப்புகள் இருந்தால், வாடகை, மின்சாரம், தண்ணீர் வசதி  முதலியவை இலவசமாக வழங்கப்பட்டு, முடிந்தால் நிகழ்ச்சிகளை நடத்த ஏதுவாக மாதா மாதம் நிதியுதவியும் வழங்கி, இந்து சமய அறநிலையத்துறை அவர்களை ஆதரிக்க வேண்டும். 

அமைச்சர் காதுக்கும், முதல்வரின் கவனத்துக்கும் செய்தி எட்டினால், உத்தரவு பாய்ந்து வரும் என்கிற ஆவலுடன் முனைவர் தெ.ஞா.வுடன் நானும் காத்திருக்கிறேன்.

-----------------------------------------------------

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகிலுள்ள "செண்டு பொறியியல் கல்லூரி'யின் முதல்வர் பேராசிரியர் அ. முகமது அப்துல்காதர். கல்வி, வேலைவாய்ப்புக் கட்டுரைகள் பல அவர் எழுதி வருவதை நான் படித்திருக்கிறேன். "வீட்டுக்கு ஒரு நூலகம் அமைப்போம்' என்கிற போட்டியை நடத்தி, பல மாணவர்களை வாசிப்பு நேசர்களாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

பேராசிரியர் அ. முகமது அப்துல்காதர் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தமிழகத்தில் இஸ்லாமிய ஆளுமைகளுடைய வெற்றிப் பயணத்தைப் பதிவு செய்வதுதான் அவரது அந்த முயற்சி. "வெற்றியின் முகவரி' என்கிற அவருடைய புத்தகம், இஸ்லாமிய இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை நூல்.

இஸ்லாமிய நாடுகளில்கூட இல்லாத சுதந்திரமும், வாய்ப்புகளும் இந்தியாவில்தான் கொட்டிக் கிடக்கின்றன என்கிற உண்மையை அவர்கள் உணரவிடாமல், பெரும்பான்மை இஸ்லாமிய இளைஞர்களின் மனதில் எதிர்மறை சிந்தனைகள் மட்டுமே விதைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. "ஒதுக்கப்படுகிறோம், வெறுக்கப்படுகிறோம், வாய்ப்புகள் மறுக்கப்படுகிறோம்' என்று மீண்டும் மீண்டும் அவர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.

எல்லாத் தடைகளையும் மீறி வெற்றியடைய இஸ்லாமிய இளைஞர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பல வெற்றிச் சரித்திரங்களை எடுத்துக்காட்டி, தன்னம்பிக்கை ஊட்டுகிறது பேராசிரியர் அப்துல்காதரின் "வெற்றியின் முகவரி'. இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் பல வெற்றியாளர்கள் என்னுடைய  நண்பர்கள். நான் வியந்து பார்த்து வணங்கும் பேராளுமைகள். அவர்கள் குறித்து எனக்குத் தெரியாத செய்திகளையும் "வெற்றியின் முகவரி' எனக்கு உணர்த்தியது. அதற்கும் சேர்த்து நன்றி!

-----------------------------------------------------

ஆண்டுதோறும் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி நடத்துகிறார்கள் இயக்குநர் லிங்குசாமி தலைமையிலான குழுவினர். 2022-ஆம் ஆண்டுக்கான கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டியில் 4000-க்கும் அதிகமான கவிஞர்கள் கலந்துகொண்டு, 8000-க்கும் அதிகமான கவிதைகளை அனுப்பி இருந்தனர். 

அதில் 50 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தலா ரூபாய் ஆயிரம் சன்மானம் வழங்கப்பட்டிருக்கிறது.

அப்படித் தேர்வு செய்யப்பட்ட ஐம்பது கவிதைகள் "வாடியது கொக்கு' என்கிற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தை அனுப்பித் தந்திருந்தார் இயக்குநர் லிங்குசாமி. அதில் எனக்குப் பிடித்திருந்த கவிதை, கோவை புதியவன் எழுதியது.

சரிந்த மேம்பாலம் இடிபாடுகளிடையே சிக்கியது ஊழல்!

ADVERTISEMENT
ADVERTISEMENT