தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (17-07-2022)

17th Jul 2022 05:04 PM

ADVERTISEMENT

 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் "தினமணி' நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், மூத்த தமிழறிஞர்களைச் சந்தித்து அவர்களது ஆசி பெற விழைந்தேன். அப்படி நான் சந்தித்து ஆசி பெற்றவர்களில் முதலாமவர் ஊரன் அடிகள்தான். 

நான் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சில வாரங்களில் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குப் பயணித்தபோது, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வடலூர் சென்றேன். சன்மார்க்க சபைக்கும், சித்தி வளாகத்துக்கும் சென்றுவிட்டு, ஊரன் அடிகளை சந்தித்து ஆசி பெறச் சென்றேன். ஊரன் அடிகள் என்னைப் புதியவராகப் பார்க்கவில்லை. ஏதோ நெடுநாள் பழகியவர்போல, அளவளாவத் தொடங்கினார். 

வள்ளலாரைப் பார்த்தது போன்ற பரவசத்தில் நானிருந்தேன். ஆனால் அவரோ, நெடுநாள் பழகிய ஒருவருடன் பேசுவதுபோல பேசிக் கொண்டிருந்தார்.  என்னுடைய வியப்பை அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, அவர் சொன்ன பதில்தான் மறக்க முடியாதது. ""உங்களுக்கு ஊரன் அடிகள் புதிதாக இருக்கலாம். ஆனால், எனக்கும் "தினமணி'க்கும் எழுபது ஆண்டுத் தொடர்பு. நான் எழுத்துக்கூட்டிப் படிக்கத் தொடங்கிய முதல் பத்திரிகையே "தினமணி'தான். அதனால் அதன் ஆசிரியரான நீங்களும் எனக்குப் புதிதல்ல!'' என்று அவர் சொன்னபோது நான் சிலிர்த்துத்தான் போனேன்.

ADVERTISEMENT

அதற்குப் பிறகு, விழுப்புரம் அல்லது கடலூர் வழியாகப் பயணம் என்றால், வடலூர் சென்று அடிகளை சந்திக்காமல் சென்றதில்லை. 

வள்ளலாரின் 200-ஆவது தோற்ற ஆண்டு பிறக்க இருக்கிறது. அதை விமர்சையாகக் கொண்டாட வேண்டும் என்று நானும், வடலூர் சுத்த சன்மார்க்க நிலையப் பொறுப்பாளர் சங்கர் வாணவராயரும் திட்டமிட்டிருக்கிறோம். வழிகாட்டி ஊரன் அடிகள்தான். 

அடுத்த ஆண்டு அகவை தொண்ணூரை எட்ட இருக்கும் ஊரன் அடிகளுக்கு சிறப்பாக விழா எடுத்து சிறப்பிக்க வேண்டும் என்று அன்பர்கள் திட்டமிடத் தொடங்கி இருந்தனர். கடந்த புதன்கிழமை, "குருபூர்ணிமா' அன்று  இறைச் சித்தம் அவரை நம்மிடமிருந்து பிரித்து, அருட்பெரும் ஜோதியில் சங்கமிக்க வைத்துவிட்டது. 

வடலூரில் உள்ள அவரது வீட்டில், ஆயிரக்கணக்கான அரிய பல புத்தகங்களை அவர் சேகரித்து வைத்திருந்தார். அந்தப் புத்தகங்கள் எல்லாம் இனி என்னவாகும் என்று கவலை தெரிவித்தார் பேராசிரியர் அரங்க. ராமலிங்கம். சங்கர் வாணவராயர் முன்யோசனையுடன் அவர்களது "குமரகுரு' கல்வி நிலைய வளாகத்தில் பிரம்மாண்டமான ஒரு நூலகம் அமைத்திருக்கிறார். அதில் அவை பத்திரமாகப் பராமரிக்கப்படும் என்பது மட்டுமல்ல, ஆய்வு மாணவர்கள் அங்கே போய் தங்கியிருந்து குறிப்பெடுத்துக் கொள்ளவும் முடியும்.

சங்கர் வாணவராயர் அமைத்திருக்கும் நூலகத்துக்கு "ஊரன் அடிகள் நூலகம்' என்று பெயர் சூட்ட வேண்டும். புத்தகங்களை நேசித்தவர்; புத்தகங்களுடன் வாழ்ந்தவர். அவரது பெயர்தான் அந்த நூலகத்துக்குப் பொருத்தமானதாக இருக்கும்.

""சன்மார்க்க உலகத்துக்கு இப்படி ஒரு ஞானத்துறவி வாய்ப்பது அரிது. எழுத்து, பேச்சு, எண்ணம், தொண்டு மேலாண்மை என அனைத்து நிலைகளிலும் அவர் மாசற்ற தொண்டராக, அருளாளராக நாடு போற்ற வாழ்ந்தார்.

நூற்றாண்டைத் தொடுபவர் என்று எண்ணித் தமிழகம் அவரைப் போற்றி வந்தது. வாழ்வெல்லாம் வடலூருக்கே, மூச்செல்லாம் வள்ளலாருக்கே என்று வாழ்ந்த சமரச ஞானப் பெருஞ்சுடர் அணைந்ததே என்று அன்பர்கள் மனம் ஓலமிடுகிறது'' என்கிற அவருடன் நெருங்கிப் பழகிய தமிழறிஞர் ஒளவை நடராசனின் இரங்கல் செய்திக்கு மேல் சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது?

-------------------------------------------------------------------


"சாணக்கியர்' என்று பரவலாக அறியப்படும் கெளடில்யர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில், அதாவது இன்றைக்கு 2,200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நூல் "அர்த்த சாஸ்திரம்'. அரசர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி அரசாள வேண்டும், தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், படையெடுத்துத் தனது ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும் என்னென்ன உபாயங்களைக் கையாள வேண்டும், மக்கள் எப்படி பரிபாலனம் (நிர்வாகம்) செய்யப்பட வேண்டும் என்பவை குறித்தெல்லாம் "அர்த்த சாஸ்திரம்' விரிவாக விளக்குகிறது.

இந்தியாவில் அன்றைய அரசியல், சமூக சூழலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அரசர்களுக்கான ராஜதந்திர நூல் "அர்த்த சாஸ்திரம்'. அர்த்த சாஸ்திரம் போலவே இத்தாலிய மொழியில் 16-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ராஜதந்திர நூல் "இல் பிரின்ஸிப்'. அதை எழுதியவர் நிக்கோலோ மாக்கியவெல்லி. ஆங்கிலத்தில் "பிரின்ஸ்' என்று மொழிபெயர்க்கப்பட்ட அந்தப் புத்தகத்தைத் "துளசி' என்கிற அம்மையார் 1946-இல் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்தப் புத்தகத்துக்கு, அன்றைய "தினமணி' ஆசிரியர் ஏ.என். சிவராமன் பதிப்புரை வழங்கி இருக்கிறார்.

"அர்த்த சாஸ்திரம்' போன்று விரிவான, போர் முறைகள், நிர்வாக உத்திகளை மாக்கியவெல்லியின் "பிரின்ஸ்' எடுத்தியம்பவில்லை. சின்னாபின்னமாகிக் கிடந்த அன்றைய இத்தாலியில் நிலையான ஆட்சி ஏற்படவும், சிற்றரசர்களுக்கிடையே நிலவிய பகையைப் பயன்படுத்தி அந்நியர்கள் ஆட்சி அதிகாரம் செய்வதைத் தடுப்பதுவும்தான் மாக்கியவெல்லியின் இலக்காக இருந்தது; அதற்காக எழுதப்பட்ட நூல்தான் "பிரின்ஸ்'. உள்நாட்டு நிர்வாகத்தை "அர்த்த சாஸ்திரம்' முன்னிலைப்படுத்துகிறது என்றால், வெளியுறவுக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தருகிறது "பிரின்ஸ்'.

"ராஜ தந்திரம்' என்கிற தலைப்பில் துளசி அம்மையார் மொழியாக்கம் செய்திருக்கும் மாக்கியவெல்லியின் "பிரின்ஸ்', 75 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பதிப்பாக வெளி வந்திருக்கிறது.

-------------------------------------------------------------------


கட்செவி அஞ்சலில் வந்திருந்தது இந்தக் கவிதை. ""பெயர் போட வேண்டாம். விரைவில் வெளிவரும் எனது கவிதைத் தொகுப்பில் இடம்பெறும்போது தெரிந்து கொள்ளட்டும்'' என்கிற வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை.

ஆழிசூழ் உலகு
பனிமலைச் சிகரங்கள்
ஆங்காங்கே பேராறுகள்
அதிர்ந்து வீழும் அருவிகள்
பெருமழை அடைமழை
தூறல் சாரல் தூவானமென
இத்தனை பொழிந்தும்
அப்படியே இருக்கிறது
ஆதிக்கனல் அடிவயிற்றில்! 

ADVERTISEMENT
ADVERTISEMENT