தமிழ்மணி

கடைக்கண் பாராயோ?

17th Jul 2022 04:59 PM | டி.எம். இரத்தினவேல்

ADVERTISEMENT

 

பரம்பொருள் ஒன்று உண்டு என்ற அடிப்படை உண்மையைக்கூட சமய நூல்கள் தமக்கே உரிய தனித்தனிக் கண்ணோட்டத்தில் உறுதி செய்கின்றன. இதனைத்தான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், ""ஒன்று உண்டு; அதைத்தானே ஒவ்வொரு நூல் ஒவ்வொருவாறு என்றும் புகன்று இகலுமே'' என
விளக்குகிறார்.
இவரது ஒரு பாடலின் முற்பகுதி இது:
"சுருதி ஒன்றோடொன்று இகல்வதால்
உனைத்தினம் துதிப்பதே நலம் என்னக்
கருதி நிற்கும் நான் அலமரா
வண்ணம் நின் கடைக்கண்ணால் பாராயோ'
இது "கணபதி மாலை'யில் வரும் 86-ஆவதுபாடல். விநாயகப் பெருமானின் தோத்திரமாக அமைந்தது. இதன் பிற்பகுதியில் அமைந்தபாடல் அடிகளில் விநாயக புராணத்தின் ஒரு வரலாறு இடம்பெற்றுள்ளது.
மைதல நாட்டின் தலைநகரம் கண்டகபுரி. அதனை முன்னொரு காலத்தில் சக்கரபாணி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் மகன் சிந்துராசன். இவன் தன் பெரு வலிமையாலும், அசுர குருவாகிய சுக்ராச்சாரியாரின் உபதேசத்தாலும் அவுணனாகவே மாறி தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். இவனை அழிக்க விநாயகர் மயூரேசராக அவதாரம் செய்து, அன்னை பார்வதியால் நன்கு பேணப்பட்டு வளர்ந்து வந்தார்.
இதனை அறிந்த சிந்துராசன் விநாயகப் பெருமானைக் குழவிப் பருவத்திலேயே அழித்துவிட பற்பல அசுரர்களை ஒருவர்பின் ஒருவராக ஏவினான். ஆனால், பால விநாயகர் அவ்வரக்கர்கள் அனைவரையும் அழித்துவிட்டார். அவர்களுள் ஒருவன் கமடாசுரன். இவன், பிள்ளையார் ஏழு மாதக் குழந்தையாக இருந்தபோது ஒரு பெரிய ஆமை வடிவம் எடுத்துச் சென்றான். ஆனால் விநாயகரால் அழிக்கப்பட்டான். மயூரேசப் படலத்துள் உள்ள இவ்வரலாறே, "பொருதிரைக் கடல் கமடம் ஒன்று அடும் திறல் புனிதனே' எனக் குறிக்கப்பட்டுள்ளது. கணேச மூர்த்தியின் துதிக்கை உள்துளை உடையது. ஆதலின் "புழைமாறா ஒரு திருக்கரம்' எனப்பட்டது.
விநாயகப் பெருமான் இயல்பாகவே மலங்களினின்றும் (பாசங்களினின்றும்) நீங்கியவர் என்பதால் "அமலன்' என்றும், அடியார்களின் பிறவித் துயரை முற்றிலுமாக நீக்கி ஆட்கொள்ளும் கருணைக்கடல் ஆதலின் "பவப்பிணி ஒருங்கு அறத் துடைப்போன்' எனவும் அழைக்கப்படுகிறார். புனிதனும், அமலனும், பவப்பிணி துடைப்போனுமாகிய விநாயகப் பெருமான் அருளால், பரம்பொருளாகிய இறைவனின் கடைக்கண் பார்வை கிடைத்துவிட்டால் உயிர் அலமராவண்ணம் உய்தல் உறுதி என்று சொல்லவும் வேண்டுமோ?
இனி, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் "கணபதி மாலை' என்னும் தோத்திர பிரபந்தத்தில் வரும் 86-ஆவது பாடல் முழுவதையும் பார்ப்போம்!
சுருதி யொன்றோடொன்று இகல்வதால்
உனைத் தினம் துதிப்பதே நலம் - என்னக்
கருதி நிற்கும் நான் அலமரா
வண்ணம் நின் கடைக்கணால் பாராயோ?
பொருதி ரைக்கடல் கமடம் ஒன்று
அடும் திறல் புனிதனே! புழை மாறா
ஒருதி ருக்கரத்து அமலனே!
பவப்பணி ஒருங்கு அறத் துடைப்போனே!

ADVERTISEMENT
ADVERTISEMENT