தமிழ்மணி

மூன்று அடிகளில் ஒரு முத்தாய்ப்பு

17th Jul 2022 04:57 PM | முனைவர் அ.அ. ஞானசுந்தரத்தரசு

ADVERTISEMENT


தலைவனின்  மிக உயர்ந்த பண்புகள் தலைவியை ஈர்ப்பனவாக அமைகின்றன. உடல் ஈர்ப்பு, உள்ள ஈர்ப்பு ஆகிய இரண்டில்,  உள்ள ஈர்ப்பு காதலில் சிறப்பிடம் பெறுகிறது. அது மட்டுமின்றி, பாடல் பெரும் தகுதி உடையதாகி, நீண்டு நிலைத்து நிற்கிறது. 
தலைவன் பிறருக்குக் கொடுக்கும் குணம் உடையவனாகவும், தன்னலம் அற்றுப் பிறர் நலம் பேணுபவனாகவும், அளவற்ற அன்பு உடையவனாகவும், பெண்களிடம் கருணை காட்டுபவனாகவும் இருப்பதுண்டு. இத்தகைய குணங்கள் தலைவியின் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்துவிடுகின்றன.
தலைவி, தலைவனைக் காணும்போது இத்தகைய பண்புகள் அவனிடம் இருப்பதை மிக நுட்பமாகக் கூர்ந்து நோக்குவது இயல்பு. இத்தகைய பண்புகளை உடைய தலைவனை ஐங்குறுநூற்றில் "அறவன்' என்று கபிலர் குறிப்பிடுகிறார். 
பொதுவாக "அறவோர்' என்பது, தமது சீலத்தால் மிக உயர்ந்து நிற்கின்ற துறவிகளைக் குறிப்பதாகும். "அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்' என வரும் சிலப்பதிகார வரிகள் நினைவுகூரத்தக்கவை. ஆனால்,  தலைவன் ஒருவனிடம்  மிகச்சீரிய பண்புகள் இருக்குமாயின் அவனையும் "அறவன்' என்று குறிப்பது தமிழ்ப் பண்பாட்டைக் குறிக்கிறது.
தலைவனின் உயர் பண்புகளை உற்றுநோக்கிக் கொண்டாடுவது தலைவியின் இயல்பு. எப்போதுமே பெண்கள், தலைவன் ஒருவனிடம் தோன்றும்  நற்பண்புகளைப் பற்றித் தமது ஆயத்தில் அல்லது தோழிகளின் கூட்டத்தில் பேசுவது வழக்கம். அவ்வாறே அத்தலைவியும், தோழிக்கு அவனது நல்லியல்புகளை எடுத்துச் சொல்லியிருக்கிறாள். அது ஒரு வகையில் அவளுக்குத் துணை புரிவதாகவும் அமைகிறது.
தலைமகன் வீட்டார் அத்தலைவியை மணம் கொள்ளக் கேட்டபோது, தலைவியின் உறவினர் அவளை மணம் செய்துகொடுக்க மறுக்கின்றனர். இந்நிலையில், செவிலி கேட்கும்படியாக தலைவனின் பண்பு நலன்களை தோழி உரக்கக் கூறுகிறாள்.
""அன்னையே! இவளைக் காதலித்தவன் தூரத்தில் தோன்றும் மலைநாட்டைச் சார்ந்தவன். அங்கே சந்தன மரமும் அகில் மரமும் அருகருகே பருத்து வளர்ந்திருக்கும். அவை ஒன்றோடு ஒன்று உராயும்போது தீப்பொறி எழுந்து அகிலின் மணம் வீசத் தொடங்கும். அந்த மணத்தோடு மற்றொரு மணமும் கூட அங்கே வீசும். சந்தன மரம் பூத்துக் குலுங்கி நிற்கிறது. அதன் மணம் அகிற் புகையோடு கலந்து ஒரு புதுவித நறுமணம் கமழ்கிறது. இத்தகைய வளம் நிறைந்த மலைநாட்டுக்குரிய தலைவனாக இருப்பது மட்டுமின்றி, இதற்கும் மேலாக அவனிடம் ஒரு சிறப்பு உண்டு. அது யாதெனில், அவன் அறப் பண்புகளாலே நிரம்பிய சான்றோனாக இருக்கிறான் என்பதுதான். அவ்வாறு இருக்கும் அவனை, தலைவியை விட்டு அகலச் சொல்வது எவ்வகையில் நியாயமாகும்?'' என்று கேட்கிறாள். இதன் மூலம்  மணமன்றலுக்கும் வழி திறக்கிறாள்.
அகிற்புகை பிறரை மகிழ்விப்பது போலே தலைவன் தனது நல்லறத்தால் பிறரை மகிழ்விப்பவன். சந்தனம் பூத்துக் குலுங்குவது போலே தலைவி இல்லறச் செம்மையால் பூரித்து அவ்வறத்தைச் செழுமைப்படுத்தத் தயார் நிலையில் இருக்கிறாள். மேற்காண் இரு மரங்களும் புதுவித மணம் வீசி மகிழ்விக்கின்றன. அதுபோலவே இவ்விருவரும் மணமன்றல் கொண்டால், அறத்தாற்றின் மேற்கொண்ட இல்வாழ்க்கையாய் அது அமையும்; பிறர்க்கும் பயன் நல்கும் என்ற உள்ளுறை உவமையையும் உட்பொதிந்து வைத்து,  கபிலர் பாடும் மூன்றடிப் பாடல் இது.

சாந்த மரத்த பூழில் எழுபுகை
கூட்டுவிரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ, நாம் அகல்வு அன்னாய்? 
(ஐங்.212)

ADVERTISEMENT
ADVERTISEMENT