தமிழ்மணி

திருமுறையில் ஆமை படும் பாடு!

புலவர் தா. குருசாமி தேசிகர்

மதுரை திருவள்ளுவர் கழக விழா ஒன்றில் அமரர் கி.ஆ.பெ.விசுவநாதம் திருவள்ளுவர் காலத்திலும் ஆமை, எலிகள் வாழ்ந்தன என்று உரை செய்து, அரிய விளக்கங்கள் செய்திருந்தார். அக்குறளையும் கருத்தையும் எண்ணிக்கொண்டே கல்லூரி இறுதி வகுப்பில் ஆசிரியராய் இருந்த முத்து. சு. மாணிக்கவாசக முதலியாரிடம் ஆமை பற்றிய பெரிய உரையைச் சொல்லி, "திருமுறையில் ஆமை உளதா' என்று வினவினேன். அதற்கு அவர் ஒரு வகுப்பில் இதற்காகப் பேருரையே நிகழ்த்திவிட்டார். அதன் சுருக்கம்தான் இந்தப் பதிவு.
ஆமை நீருள் வாழும் உயிர்தான். அதன் இயல்பை திருவள்ளுவர் "அடக்கமுடைமை' அதிகாரத்தில் "புலனடக்கம்' கூறும் செய்திக்கு, ஆமைபோல் ஐந்து உறுப்புகளையும் அடக்கி வாழ்ந்தால் எழுமையும் ஏமாப்புடைத்து என்று அருளுவார்.
இக்கருத்தை அப்பர் உவமையுள் ஒன்றாக அருளியுள்ளார். ஆமையை சூடுமிகுந்த உலை நீரில் இட்டால், ஆனந்தமாகத் திளைத்து மகிழும். சூடு ஏற ஏற ஆமைக்கு அழிவு நெருங்கும். இதனை, "புலன்வழி நடக்குமாக்களும், அதனால் விளையும் பெருந்துன்பங்களையும் அறிவதில்லை. புலனெறி நீங்கி அருள் நெறியில் ஒழுகுவதே பேரின்பத்தைத் தரும்' என்று அருளியுள்ளார். அப்பாடல் திருநேரிசைப் பதிகத்தில் உள்ளது.

வளைத்து நின்றுஐவர் கள்வர்வந்து 
எனை நடுக்கம் செய்யத்
தளைத்து வைத்து உலையை 
    ஏற்றித் தழல்மடுத்த நீரில்
திளைத்து நின்று ஆடுகின்ற 
    ஆமைபோல் தெளிவிலாதேன்
இளைத்து நின்றாடு கின்றேன் 
    என்செய்வான் தோன்றினேனே!

என்று திருவள்ளுவரின் அரிய கருத்தை அப்பர் தம் அனுபவம் கலந்து அருள்கின்றார். மேலும் நாலடியார் பாடல் ஒன்றையும் நினைவுகூர்ந்தார்.

கொலைஞர் உலைஏற்றித் தீமடுப்ப ஆமை
நிலை அறியா தந்நீர் படிந்தாடி- அற்றே
கொலைவல் பெருங்கூற்றம் கோட் பாரிப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு

என்ற பாவில் முன்னீரடியில் இயற்கை ஒன்று கூறப்பட்டது. பின் ஈரடியில் மக்கள் இயற்கை கூறப்பட்டது. இங்குக் குறித்த ஆமையின் இயல்பு யாது? மீன் உணவாவது போல் ஆமையையும் உண்பவர் உளர். ஆமையின் முதுகில் ஓடு இருப்பதால், நெருப்பு மூட்டி, உலை நீர்ப் பாத்திரத்தில் ஆமையைப் போட்டுவிடுவர். தீச்சூடு ஏற ஏற, முதலில் ஆனந்தமாக இருந்த சூடு, ஆமைக்கு அழிவு நெருங்கிக்கொண்டே இருப்பதை உணர்த்தும். அழிவு வரும்  அந்த நிலையை அறியாத ஆமையின் உயிர் போய்விடும். அதைச் சுவைத்து உண்பவரும் உளர். அதனைத்தான் ""கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப'' என்று ஜைன முனிவர் மக்கள் பேதைமை ஆமையின் பேதைமைக்கு ஒப்பாகும் என்ற கருத்தும் நல்ல விளக்கமாகும்.

திருக்குறள் "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு டைத்து' என்ற குறளுக்கு பரிமேலழகர் பாடலின் அடைவை, ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமைக்கண்ணும் தொடரும் என்று இப்பாடல் மெய்யடக்கம் கூறப்பட்டது என்பார்.

தீமை செய் புலன்கள் ஐந்துந் 
    தன்னுளே செறியச் சேர்த்தின்
வாய்மையுள் நிகழும் என்னை 
    வழுத்தவும் படநின்றானேல்
தூய்மை செய்த வர்களுஞ் 
    சொல்லுவது அவத்தைச் சொல்லே

என்ற புலனெறிப் பாடலிலும் ஐந்தடக்கலின் பெருமை அருளப்பட்டது.  தணிகை புராணத்தில், பானுகோபன் வீரவாகுதேவர், முன்பாகப் போய், போர் செய்த களிப்பில் முழுகித் திளைத்திருந்து தான் தன் குலத்தோடு வேரறச் சாய்ந்
தொழிய இருக்கும், பின் விளைவுகளைத் தெளிந்திலன். அது குறித்து கச்சியப்ப முனிவரும் ஆமையை மேற்கோள் காட்டுவார்.

"வலைபடும் இளவெந்நீரின் உளம்மகிழ்
கமடம் (ஆமையை) ஒத்தான்'

இவ்வாறு மூவரும் ஆமையின் தெளியாமையையும், அதன்பின் எய்தும் அழிவையும் உணர்த்தும் வகையில், உலக வலைச்சிக்கலையும், அதனால் பிறந்திறந்து உழலும் துன்பத்தையும் உணர்த்தி, மக்கள் அனைவரும் கடவுள் நெறியில் ஒழுகி இன்பமடைதலைச் செய்ய வேண்டும் என்பர். ஆமை ஐந்துறுப்புகளையும் அடக்குவதுபோல், ஒருவன் ஐம்பொறிகளையும் அடக்க வேண்டும் என்பதே பொருள். 

பகவத்கீதை சாங்கிய யோக அத்தியாயத்தில், "இவன் (துறவி) ஆமையானது (தன்) அவயவங்களை உள்ளுக்கிழுத்துக் கொள்வதுபோல சகலமான விஷயங்களிளிருந்தும் இந்திரியங்களை எப்போது இழுத்துக் கொள்கிறானோ, அப்போது அவனுடைய ஞானமானது நிலைத்தது' என்று கூறுவதையும் பேரறிஞர் வடிவேலு செட்டியார் குறள் பதிப்பில் மேற்கோள் காட்டுவார்.

திருநாவுக்கரசர் திருமுறையில்தான் "என்றன்று இரக்கும்'  குறிப்புமிக்க பாடல்களைக் காணலாம். என்னை நடுங்கச் செய்து துன்புறுத்துவர் ஐவர். அவரோ கள்வர். கள்வர்க்கு நடுங்காமல் இருப்பர் எவர் உள்ளார்? தொலைவிலிருக்கும் கள்வராகின் நடுக்கம் உண்டாகாது. சூழ்ந்து வளைத்துக் கொண்ட கள்வர்க்கு நடுங்காதிருப்பது எவ்வாறு? உயிர் உடம்பிலிருந்து நீங்குவதில் சிறிதும் வெறுப்பில்லாதவராயினும், உடம்பில் உள்ளபோதே  உய்ய விரையும் தாயுமானவர் போன்றோர்க்கு அவ்வுய்தி அடையும் முன்பு, உடம்பிற்குக் கேடு செய்வது சரியன்று என்ற கருத்துகள் பொலியுமாறு திருநாவுக்கரசர் அருளிய தேவாரத்தில் ஆமை படும் பாடு உணர்த்தி, மெய்யுணர்வு காட்டிய செந்தமிழ்ப் பாடல்களை ஓதி உணர்வோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT