தமிழ்மணி

முந்நீர் உண்டு முந்நீர் பாயும்

3rd Jul 2022 04:07 PM | ராஜேஸ்வரி ராமச்சந்திரன்

ADVERTISEMENT

 

நறுமண மலர்கள் பூத்துக் குலுங்கும் கடற்கரைச் சோலை. அவ்விடத்து இருந்த மகளிர் நீர்முள்ளிப்பூ மாலையைச் சூடியுள்ளனர். அவர்கள் மகிழ்ச்சியான மனநிலையை இப்பாடலில் காட்சிப்படுத்துகிறார் புலவர் மாங்குடி மருதனார்.

முண்டகக் கோதை யொண்டொடி மகளிர்
இரும்பனையின் குரும்பை நீரும்
பூங்கரும்பின் தீஞ் சாறும்
ஓங்குமணற் குலவுத் தாழைத்
தீநீரோ டுடன் விராஅய்
முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயும்
தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய' 
(புறநா-24: 11-18)

கடற்கரைச் சோலையில் மகளிர், பனைநுங்கின் நீரும், தீங்கரும்பின் சாறும், தென்னை இளநீரையும் ஒன்றாகக் கலந்து முந்நீரையும் குடித்து இன்புறுவர். அத்துடன் ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் ஆகிய முந்நீரும் கலந்த கடலில் பாய்ந்து நீராடி மகிழ்ச்சி அடைவர்.

ADVERTISEMENT

இயற்கை பானங்களாகிய நுங்கு, இளநீர், கரும்பின் இனிய சாறு இவற்றுக்கு இணையாக எந்த செயற்கை பானமும்  கிடையாது.  மகளிர் பெரிய பனையினது நுங்கின் நீரும் பொலிவினையுடைய கரும்பினது இனிய சாறும் உயர்ந்த மணலிடத்துத் திரண்ட தெங்கினது இனிய இளநீருடனேகூடக் கலந்து இம்மூன்று நீரையும் உண்டு,  மூன்று நீரையுடைய கடற்கண்ணே, பல மக்களும் வாழ்தலையுடைய நல்ல ஊர் என்றும், அங்கே பெண்கள் வாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுவதுடன், எந்த நாட்டில் மகளிர் மகிழ்வுடன் வாழ்கிறார்களோ, அந்நாடே சிறந்த நாடு என்பதையும் உணர்த்துகிறார் மாங்குடி மருதனார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT