தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (03-07-2022)

DIN


தொழிற்கல்வியில் கோலோச்சும் வேலூர் விஐடி கல்விக் குழுமம் இப்போது பள்ளிக் கல்வியிலும் தடம் பதிக்க முற்பட்டிருக்கிறது. சென்னை கேளம்பாக்கம் அருகில் அவர்கள் நிறுவியிருக்கும் சர்வதேசப் பள்ளித் தொடக்க விழாவுக்கான அழைப்பு எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. விஐடி குழுமத்தின் துணைத் தலைவர் ஜி.வி. செல்வத்தின் தனிப்பட்ட அழைப்பும் வந்திருந்தது. கலந்துகொள்ள இயலாதது குறைதான்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஐசிஎஸ்இ, கேம்பிரிட்ஜ் பாடத்திட்டங்களை வழங்க இருக்கும் அவர்களது விஐஎஸ் சர்வதேசப் பள்ளியைத் திறந்து வைக்க குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு  வலியுறுத்தும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.

""பள்ளிக் கல்வியில் தாய்மொழியைப் பயன்படுத்துவதற்கு நாம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.  எங்கெங்கு முடியுமோ, குறைந்தபட்சம் தொடக்க நிலை வரையிலாவது தனியார் பள்ளிகளில் தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும். மாணவர்கள் அவர்களது சமூகச் சூழல், பள்ளி வளாகம், கலாசார நிகழ்ச்சிகள், வீடுகளில் தாய்மொழியிலேயே சுதந்திரமாகப் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்'' என்பது அன்றைய அவரது உரையின் அடிநாதமான கருத்து.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துவது இது முதல் தடவையல்ல. கடந்த ஐந்தாண்டுகளில் அவர் கலந்துகொண்ட பல நிகழ்ச்சிகளில் இதே கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறார். அவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருந்தபோதும்கூட,  தாய்மொழிக் கல்வியை கட்சியின் கொள்கையில் ஒன்றாக இணைப்பதை வலியுறுத்தி நிறைவேற்றினார் என்பதை இங்கே நினைவுகூரத் தோன்று கிறது.

நேற்று முன்தினம் மாலையில், சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் குடியரசு துணைத் தலைவரை சந்தித்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற நான் குடும்பத்தினருடன் சென்றிருந்தேன்.

அவர் குறித்த புத்தகமொன்றில் அவரது கையொப்பம் பெற எனது மூத்த மகன் விரும்பினான். அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த குடியரசு துணைத் தலைவர் சிரித்தபடியே அதில் கையொப்பம் இட்டபோது நான் திகைத்தேன்.

சிலர் ஊருக்கு உபதேசம் செய்வார்கள். அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அதை கடைப்பிடிப்பதில்லை. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அந்த ரகமல்ல என்பதை அவரது கையொப்பம் வெளிப்படுத்தியது. தனது தாய்மொழியான தெலுங்கில் அவர் கையொப்பமிட்டபோது, சொல்லுக்கும் செயலுக்கும்  வித்தியாசமில்லாத அந்த மனிதரின் உயரம் என் மனதில் மேலும் பல மடங்கு உயர்ந்தது.


குடியரசுத் தலைவராக இருந்து அவர் இந்தியாவுக்கு வழிகாட்டும் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை கைநழுவி இருக்கிறது. பரவாயில்லை. குடியரசு துணைத் தலைவராகவாவது அவர் தொடர வேண்டும் என்று மனதுக்குள் இறைவனை இறைஞ்சுகிறேன்!

தாய்மொழி பற்றிய சிந்தனையுடன் இரவில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தபோது, திடீரென்று தி.ஜ.ர.வின் "மொழி வளர்ச்சி' என்கிற புத்தகம் நினைவுக்கு வந்தது. "மஞ்சரி' பத்திரிகையின் ஆசிரியராகவும், தலைசிறந்த எழுத்தாளராகவும் இருந்த தி.ஜ.ர.வுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு தெரியுமோ? எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது புத்தகங்கள் எதற்கும், யாரிடமும் அணிந்துரை பெறுவதில்லை. ஒரே ஒரு விதிவிலக்காக தனது ஒரு புத்தகத்துக்கு தி.ஜ.ர.விடம் அணிந்துரை வாங்கினார் என்றால், அவர்மீது எந்த அளவுக்கு மதிப்பு வைத்திருந்தார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

"மொழி வளர்ச்சி' என்கிற  தி.ஜ.ர.வின் புத்தகம், அவர் மொழி குறித்தும், மொழிக் கல்வி குறித்தும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. முல்லை முத்தையாவின்  வற்புறுத்தலின் பேரில்தான் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டதாக தனது முன்னுரையில் தி.ஜ.ர. கூறுகிறார். அந்தக் கட்டுரைகளில் அவர் வெளியிட்டிருக்கும் பல கருத்துகளைத் தொகுத்து வெளியிட்டால் போதாது,  தமிழகமெங்கும் உள்ள நாற்சந்திகளில் பதாகையாக நிறுவ வேண்டும்.

""ஹிந்தி எதிர்ப்பு கோஷங்களைப் போட்டுக்கொண்டு, "தமிழ், தமிழ், தமிழ், வாழ்க!' என்று வீணே பஜனை செய்து கொண்டிருந்தால், தமிழ் தானே வளர்ந்துவிடாது. ஹிந்தியை வளர்க்கவும், பரப்பவும் பலமான ஸ்தாபனங்கள் வேலை செய்கின்றன. நவீன விஷயங்கள் அடங்கிய நூல்களெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கின்றன. தமிழில் இல்லை.  தமிழை வளர்ப்பது எப்படி? அதற்கு சர்க்காரையோ,  அதைச் சார்ந்த ஸ்தாபனங்களையோ நம்பிப் பயனுண்டாகும் என்று இன்று தோன்றவில்லை. நாமேதான் தமிழை வளர்க்க வேண்டும்''.

இதை அவர் எழுதிய ஆண்டு 1957. கடந்த 65 ஆண்டுகளில், தமிழை முன்னிலைப்படுத்திய திராவிட கட்சிகளின் அரை நூற்றாண்டு ஆட்சியும் அடங்கும். அப்போதிருந்த அதே நிலையில்தான் நாம் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறோம்.

மொழி வளர்ச்சி, ஹிந்தி திணிப்பு, ஆங்கிலத்தின் தேவை என்று அனைத்து பரிமாணங்களையும் அலசி ஆராய்கிறது தி.ஜ.ர.வின்  கட்டுரைத் தொகுப்பு. ""ஆங்கிலத்தை நாம்  கற்றதோ, கற்பதோ தவறல்ல; தமிழைப் புறக்கணித்ததும், புறக்கணிப்பதும்தான் தவறு'' என்கிற அவரது கருத்தும், ""நமது உயர்தரக் கல்விக்கு இன்று ஆங்கிலம் வேண்டியதே. அதைக் கைவிட்டுவிடக் கூடாது. ஆனால், என்றென்றும் அது  அப்படியே நிலைத்துவிடத்தக்க முறையில் நடந்து கொள்ளக்கூடாது'' என்கிற கருத்தும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லாதவை.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இப்போது சொல்வதை தனது "மொழி வளர்ச்சி' புத்தகத்தில்  65 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருக்கிறார் தி.ஜ.ர. என்னவொரு தீர்க்க தரிசனம்...

புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது  அமெரிக்காவில் தற்போது வசித்துவரும் தஞ்சாவூர்க்காரரான  த.ச.பிரதீபா பிரேம் எழுதிய "என் நெடும்பயணக் காட்டில்' கவிதைத் தொகுப்பு. அதிலிருந்த "வெட்கிக் கடக்கிறான் மனிதன்' என்கிற தலைப்பிலான கவிதை.

விரிந்த கைகளோடு
விசும்பினை நோக்கி
இயற்கையிடம்
முறையிட்டுக் கொண்டிருக்கும்
மரக் கூட்டங்களை
ஏறெடுத்துப்
பார்க்க முடியாமல்
தினமும் வெட்கிக் கடக்கிறான்
இந்த மனிதன்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT