தமிழ்மணி

யாரையும் அறியேன்...

3rd Jul 2022 04:02 PM | அக்கினிபாரதி

ADVERTISEMENT

 

புலவர் ஓரம்போகியார் பாடிய பாடல் இது; மருதத் திணைக்குரியது. இது தலைவி கூற்றுப் பாடலாக அமைந்துள்ளது. மேலும், தலைவி தலைவனிடம் கூறியதாகவும் தோழி, தலைவியிடம் சொன்னதாகவும் குறிப்பு உள்ளது. "மருதம்' என்றாலே பிரிதலும் பிரிதல் நிமித்தமும்தானே! தலைவியைப் பிரிந்து பரத்தையிடம் சென்ற தலைவன் சில நாள் கழித்துத் திரும்பினான். "யாவர் இல்லத்திலிருந்து நீ வந்தனை?' என்று தலைவி அவனை சினந்து வினவினாள். தலைமகனும் "யாரையும் அறியேன்' என்று பொய்யுரைக்கிறான். அதற்குத் தலைவி மறுமொழி கூறுவதாக அமைந்த பாடல் இது:

ஐய! குறுமகள் கண்டிகும்; வைகி
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்கு இயல் அசைவர, கலிங்கம் துயல் வரச்
செறி தொடி தெளிர்ப்ப வீசி, மறுகில்
பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச்
சென்றனள், வாழிய மடந்தை! நுண்பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்,
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,
பழம் பிணி வைகிய தோள் இணைக்
குழைந்த கோதை கொடி முயங்கலளே. (நற்றி.20)

"தலைவ! உன் காதல் பரத்தையை நாம் கண்டோம். நேற்று அவன் மகிழ்நன் ஆகிய நின்பால் தங்கி, நின் மார்பில் உறங்கி, வண்டு மொய்க்கும் பூங்கொத்தை அணிந்த கூந்தல் சிறு முதுகில் அசைந்துவர, இடையிலிருந்த ஆடை சரிந்து விழ, செறிந்த வளைகள் ஒலிக்கும்படி கைகளை வீசியவாறு, நீல விழிகள் நிலைபெயர்ந்து சூழ, எம் தெருவில் நடந்து செல்லக் கண்டோம். இன்று அவள் நின்னைப் பிரிந்ததால் விளங்கு பூண்களும், சுணங்கும் கொண்ட மார்பினளாய் வந்தாள். ஆயின், நின் மார்பை தழுவிக் குழைந்த தோள்களும், மாலையும் உடைய கொடி போன்ற அந்த இளவயதினள் முயக்கம் நீங்கினவளாய் தெருவில் வந்தாள், அதை நாம் கண்டோம், வாழிய அவள்' என்கிறாள்.

ADVERTISEMENT

தலைவனோ, "யாரையும் அறியேன்' என்று கூறியது பொய் என்பதையும், அவன் புறத்தொழுக்கம் தனக்கு நன்கு தெரியும் என்பதையும், இனி "நீ அவளுடனேயே தங்கிவிடுக' என்று வெகுண்டு தலைவி கூறினள் என்பதனையும் இப்பாடல் உணர்த்துகிறது.

பரத்தை ஒருத்தி தெருவில் எவ்வாறு நடந்து செல்வாள் என்பதை இப்பாடலில் மிக அழகாக புலவர் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT