தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன்(23.01.2022)

23rd Jan 2022 10:46 AM

ADVERTISEMENT


பொங்கல் திருநாளில் கலாரசிகனின் "இந்த வாரம்' ஆறு தொகுதிகளை வெளியிட வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. புத்தகத் திருவிழாவுக்காக அத்தனை பதிப்பகங்களும் அவசர வேகத்தில் தங்களது புத்தகங்களை வெளியிடப் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. அதனால், அச்சகம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது என்றால், அதைவிட அச்சடிப்பதற்கான காகிதம் கிடைப்பதிலும் கடுமையான தட்டுப்பாடு வேறு காணப்பட்டது.

நண்பர் வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் உதவிக்கு ஓடிவந்தார். அவரது "கதைசொல்லி' இதழை அடிக்கும் அச்சகத்தை ஏற்பாடு செய்து தந்தார். நீண்டநாள் நண்பரான "சிட்டி பேப்பர் மார்ட்' அதிபர் மீரான் காகிதம் ஏற்பாடு செய்து தந்தார். இவையெல்லாம் நடப்பதற்குள், பொங்கல் திருவிழா வந்துவிட்டது. அச்சகத் தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்குப் போய்விட்டார்கள்.

அவர்கள் திரும்பி வந்து, நண்பர் மீரான் ஏற்பாடு செய்து தந்த தரமான காகிதத்தில் ஆறு தொகுதிகளும் அச்சடித்து முடிந்துவிட்டது. அட்டையும் அச்சாகி, புத்தகம் வெளிவர இன்னும் நான்கைந்து நாள்கள் ஆகக்கூடும் என்று தெரிவித்திருக்கிறார்கள். 

அம்மாவின் ஆசையும் ஆசியும் - பதிப்பகம் தொடங்கியாயிற்று. இப்போதுதான், புத்தகங்கள் பதிப்பிப்பது என்பது எத்துணை சிக்கலானது என்பது தெரிய வருகிறது. நாம்  சர்வ சாதாரணமாகப் புத்தகங்களைப் படித்து விடுகிறோம். 

ADVERTISEMENT

அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பும், கவனச் சிதறல் இல்லாத கண்காணிப்பும்,  மன அழுத்தமும் ஏராளம் என்பதைப் பதிப்பாளரான பிறகுதான் உணர்கிறேன்.

புத்தகத் திருவிழா காலவரையில்லாமல் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. "ஒமைக்ரான்' நோய்த்தொற்றுப் பரவல் அடங்கிய பிறகுதான் நடக்கும் போலிருக்கிறது. நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் பல லட்சங்களை முடக்கிப் பதிப்பித்திருக்கும் புத்தகங்கள் அச்சுக்கூடங்களிலும், அவர்களது புத்தகக் கிடங்குகளிலும் தேங்கிக் (ஏங்கி) கிடக்கின்றன.

கலாரசிகனின் வாசகர்களும், அன்பர்களும், எனக்கு அந்தக் கஷ்டத்தைத் தரவில்லை. அவர்களது ஆதரவால் முன்வெளியீட்டுத் திட்டத்திலேயே "இந்த வாரம்' தொகுப்பு பலராலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அந்த அன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. "இந்த வாரம்' தொகுப்புகள் வெளிவருவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்கு தயைகூர்ந்து மன்னித்தருளவும்.

பெரிய அளவில் சிறப்பாக விழா நடத்தி புத்தகத்தை வெளியிட வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். இப்போதைய நோய்த்தொற்று சூழலில் அது நடக்குமென்று தோன்றவில்லை. 

இந்த மாத இறுதிக்குள் சிறிய அளவில் வெளியீட்டு விழா நடத்தினால் என்ன என்று யோசிக்கிறேன். காணொலி வழி வெளியீட்டு விழாவில் எனக்கு உடன்பாடில்லை. முன்பதிவு வெளியீட்டுத் திட்டம் முடிந்துவிட்டதா என்று சிலர் கேட்கிறார்கள். 

புத்தகம் வெளியிடும் நாள்வரை, முன்பதிவு வெளியீட்டுத் திட்டம் தொடரும். வெளியிட்ட பிறகு புத்தகத்தில் அச்சிடப்பட்ட விலை. இதன் விநியோக உரிமையை "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்துக்கு வழங்க இருப்பதால், வெளியீட்டுக்குப் பிறகான தேவைக்கு அவர்களைத்தான் அணுக வேண்டும்.

*******************

மணிவாசகர் பதிப்பகத்தின் மணிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது, பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி என்னைச் சந்தித்து, அவரது "பாரதி 100' புத்தகத்தைத் தந்தார். 1978 முதல் பாரதியாரின் நினைவு நூற்றாண்டான 2021 வரையிலான 43 ஆண்டுகளில், முனைவர் உலகநாயகி பழனி ஆற்றிய மகாகவி பாரதியார் குறித்த மேடைப் பேச்சுக்களின் தொகுப்புதான் "பாரதியார் 100'.

பாரதியின் நினைவு நூற்றாண்டில், முனைவர் உலகநாயகி பழனி நிகழ்த்திய நூறு மேடைப் பேச்சுக்கள் என்பது மட்டுமே அல்ல இந்தப் புத்தகம். 100 வெவ்வேறு தலைப்புகளில், 100 வெவ்வேறு மேடைகளில் அவர் நிகழ்த்தியிருக்கும் உரைகள் என்பதுதான் அதன் தனிச் சிறப்பு.

பல ஆண்டுகளுக்கு முன்னால், சுமார் பத்தாண்டுகளுக்கு மேலேயே இருக்கும், தாம்பரத்தில் நடந்த இலக்கிய விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். நல்ல கொட்டும் மழை. கூடவே என் தாயாரும் வந்திருந்தார் என்று நினைவு.

அப்போது அங்கே நடந்த பட்டிமன்றத்தில் பேராசிரியர் தி.இராசகோபாலன், அரு.நாகராஜன் உள்ளிட்டவர்களுடன் முனைவர் உலகநாயகி பழனியும் கலந்து கொண்டார். அதுதான் நான் அவரை முதன் முதலாக சந்தித்ததும், அவரது உணர்ச்சிபூர்வமான உரையைக் கேட்க நேர்ந்ததுமான நிகழ்வு. அதன் பிறகு, பல இலக்கிய நிகழ்வுகளில் பார்த்திருக்கிறோம், பேசியிருக்கிறோம். 

"பாரதி 100' புத்தகத்தைப் படித்தபோது அந்தப் பழைய நினைவுகள் வந்துவிட்டன. பாரதியார் எப்படி கண்ணனைப் பல்வேறு கோணங்களில் பார்த்து ரசித்தாரோ, பாடி மகிழ்ந்தாரோ, போற்றித் துதித்தாரோ, அகமகிழ்ந்து கொண்டாடினாரோ அதேபோல, "பாரதி 100' புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் 100 உரைகளின் மூலம் பாரதியின் பன்முகப் பரிமாணத்தை முனைவர் உலகநாயகி பழனி ஒன்றுவிடாமல் வியந்து கொண்டாடி இருக்கிறார்.

சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவரான முனைவர் உலகநாயகி பழனியின் "பாரதி 100' புத்தகம், பாரதியியல் ஆய்வாளர்களும், பாரதியார் குறித்துத் தெரிந்துகொள்ள விழைபவர்களும், பாரதி அன்பர்களும் வைத்திருக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொரு கட்டுரையைப் படிக்கும்போதும், உலகநாயகி பழனி உரையாற்றுவதுபோல நமக்குத் தோன்றுவதுதான் இதன் இன்னொரு சிறப்பு.

***********************

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் "சிராங்கூன் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியாகியிருந்தது தமிம் அன்சாரி எழுதிய "வாளினும் வலிது' என்கிற கட்டுரை. அதில் மியான்மர் கவிஞர் "கெட் தீ' எழுதிய பகடிக் கவிதை ஒன்று மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. 

அடக்குமுறையை எதிர்த்துக் கவிதை எழுதியதற்காகக் கொல்லப்பட்டு, உடல் உறுப்புகள் நீக்கப்பட்ட நிலையில், அந்த மியான்மர் கவிஞர் "கெட் தீ'யினுடைய உடல் அவருடைய மனைவியிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் குரூரமானது, சகிக்க முடியாத வேதனை தருவது.

மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபோது, கவிஞர் "கெட் தீ' எழுதிய கவிதையைத்தான் மேற்கோள் காட்டியிருந்தார் தமிம் அன்சாரி. அந்தக் கவிதை இதுதான் - அவர்கள் தலையில் சுடுகிறார்கள் புரட்சி பொங்கிக் கொண்டிருப்பது இதயத்திலென்று தெரியாமல்!
 

ADVERTISEMENT
ADVERTISEMENT