தமிழ்மணி

பெருமதி உணராச் சிறுமதி நன்றா?

23rd Jan 2022 11:10 AM | புலவர் வே. பதுமனார்

ADVERTISEMENT

 

தமிழர் மரபு: "புலவர் பாடும் புகழுடையோர்கள் - விசும்பின்/  வலவன் ஏவா வானவூர்தி எய்துப (புறம் 27)' என்றே நிலைத்த புகழால் வாழவிரும்பினர் அன்றைய வள்ளல் மனம் படைத்த ஆன்றோர்கள். "கொள்' எனக் கொடுப்போர் உயர்ந்தவர்தாம்; கொடுப்பதைப் பெறுவோர் பரிசிலர்தாம். என்றாலும், புறநானூற்றுப் பாடல்களைத் தொகுத்துரைக்கும்போது,  அரசனை "அவன்' என்றும், புலவரை "அவர்' என்றும் குறிக்கும் மரபு தமிழர்தம் மரபாகும். புறநானூற்றில் வரும் "அவனை அவர் பாடியது'என்ற குறிப்பால் இதை நன்கு உணரலாம்.

சிறுமதி - சிரிமதி தீமையே விளைக்கும்
அண்மையில் ஓரிதழில் சிரிப்புத் துணுக்கை வெளியிட்டிருந்தனர். "அரசரின் காது வலிக்கு மருந்து வேண்டும்' என்கிறார் அமைச்சர் அரண்மனை மருத்துவரிடம்.  அவரோ, "அவைப்புலவர் இப்போதுதான் அரசரைப் புகழ்ந்துவிட்டுப் போகிறார். 

அதனால், இதோ மருந்தோடு அரசரைப் பார்க்கச் செல்கிறேன்' என்று சொல்கிறார். நகையாடுதல் இதழின் ஒரு பகுதி. ஆனால், புலவர் பாட்டு காதுவலியை உண்டாக்கும் என்று இகழ்வதை அறிவுடையோர் ஏற்றுக் கொள்வார்களா?  பகைவரே ஆனாலும், பண்பு பாராட்டுவதுதானே உலக நடை. நகைச்சுவைக்காகவும் ஒருவரை இகழ்ந்து பேசுதல் தீமையே விளைக்கும். இதனை, "நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி' (குறள்-995) என்று
கூறுவார் திருவள்ளுவர். 

ADVERTISEMENT

பொருளுக்கா பாடினர் புலவர்கள்?
வறுமைவாய்ப்பட்டவர்தாம் புலவர்கள்.  ஆனால், தம்புலமை நலம் அறிந்து, அதற்குத்தக்க பரிசிலைப் பெற்றுத் தமக்கு மட்டுமின்றி, தம் உறவினர்க்கும், ஊரார்க்கும் அப்பரிசிலைப் பங்கிட்டு வாழும் செம்மை-வறுமையில் செம்மை கொண்டவர்களே புலவர்கள். 

புலவர்தம் வரிசை அறிந்து, புலவரை நேரில் கண்டு, கொடுக்கும் பரிசில் சிறிதே ஆயினும் அதை மகிழ்வுடன் ஏற்பர் புலவர்கள்.

அதியமான் நெடுமான் அஞ்சி, புலவர் பெருஞ்சித்திரனாரைக் காணாமலே அவர்க்குப் பரிசு தந்து அனுப்பினான்.  ஆனால், அதைப் புலவர் மறுத்து விடுகின்றார். (புறம்-208).  இத்தகைய பெருமிதம் அன்றைய புலவர்க்கு இருந்ததை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இல்லறத்து நெறிகாத்த சொல்லறம்
வள்ளண்மை, வீரம், ஈரம், உயிர் இரக்கம் கொண்ட அரசர்களையே பாடிப் பரிசில் பெறுவர் புலவர்கள். மன்னர்களின் பண்புகளைப் பாடிப் பரிசுபெறும் புலவர்கள், அவர்களிடம் பண்பாட்டுக் குறை கண்டால், இடித்துரை செய்யவும் அஞ்சுவதில்லை.

இதற்குச் சான்று: வையாவிக் கோப்பெரும் பேகனை இடித்துரைத்த புலவர் பரணர். 

இந்நிகழ்வை புறநானூற்று, 145-ஆவது பாடலால் அறியலாம். மேலும், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார் முதலான புலவர்களும் பேகனை இடித்துக் கூறத் தயங்கவில்லை.

இடித்துரைக்கும் நிமிர்வு
சோழன் நலங்கிள்ளிக்கும், அவன் தம்பி நெடுங்கிள்ளிக்கும் போர் மூண்டது. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியின் கோட்டையை முற்றுகையிட்டான். 

நெடுங்கிள்ளியோ கோட்டை வாயிலை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான். உள்ளே உள்ள மக்கள் படும்பாட்டை அறிந்த புலவர் ஆவூர்கிழார், நெடுங்கிள்ளிக்கு மக்களின் அவலநிலையை எடுத்துக்கூறி, அவனுக்குத் தக்க நெறி உரைத்தார்.

போர்த்தீ அவித்த பா மழைப் புலவர்:
ஒருகுடிப் பிறந்த சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் போரிட முனைந்தனர். வலிமை மிகப்பெற்ற நலங்கிள்ளியை நோக்கிப் புலவர் ஆலந்தூர்கிழார், "உன்னை எதிர்த்துப் போரிடுபவன் பனம்பூ மாலை சூடிய சேரனா?  வேப்பம்பூ மாலை சூடிய பாண்டியனா? உன்னுடன் போர்புரிவோன் மாலையும் உன் மாலையும் ஆத்திப்பூ மாலை அல்லவோ?  நும் இருவரில் ஒருவர் தோற்றாலும், தோற்பது உம்குடி அல்லவா?  இருவரும் வெற்றிபெறுவது இயற்கை அன்று. எனவே, உம்செயல் குடிப் பெருமைக்குத் தக்கதன்று. நீவிர் இயற்றும் போர், பகைவேந்தர்க்கு உவகை தரும்' என்று இருவர்க்கும் இடித்துரை செய்து போர்த் தீயைப் பாட்டு மழையால்அவித்தார் (புறம் 45). இவ்வண்ணம் இடித்துக்கூறும் புலவர்களையா நகையாடுவது?

பெறுமதி உணர்ந்த அருமதிவாணர்
பாண்டியன் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், "என்னை எதிர்த்து வந்த  மன்னரை நான் எதிர்த்துப் போரிட்டு வெல்லேன் ஆயின், மாங்குடி மருதன் முதலாகப் போற்றும் பெரும்புலவர் பலரும் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக' (புறம்-72) என நெடுஞ்செழியன் வீரம் பேசுவானானால், புலவர்தம் பாட்டுகளுக்கு இருந்த பெறுமதியை இன்று உணராத சிறுமதியாளர் நகைப்பை என்னென்பது?

காவலனின் முதற்கடமை உழவர்குடி காத்தலே
காவலனின் முதற்கடமை, படைதரும் வெற்றி, நிலத்தில் உழுபடையால் விளைவித்ததன் பயன் என்று அறிந்து, உழவர்தம் குடிகளைக் காத்தலே ஆகும். 
 
உழவர், உழுபடைச் சாலால்தான் அரசு நிலைபெறும் என்பதை வெள்ளைக்குடி நாகனார் என்ற புலவர், சோழன் குளமுற்றத்துஞ்சிய கிள்ளி
வளவனுக்கு அறிவுறுத்துகிறார் (புறம்.35). 

பெருமதி கூட்டும் அருமதிப் புலமை
வறுமையில் வாடும் புலவரே ஆயினும், வள்ளல்களைப் பாடிப் பரிசுபெறும் பரிசில் வாழ்க்கை உடையவரே என்றாலும், காணாது தந்த பரிசிலை மறுக்கும் பெருமித வாழ்க்கை உடையோரே- "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே' என்ற நிமிர்வுடையோரே புலவர்கள்.

காவலன் வாழ்வில் நெறிபிறழ்ந்தால், நமக்கென்ன பரிசில்தானே வேண்டும் என்று எண்ணாமல், அவனைத் திருத்தும் பாவீரம் கொண்டோர் புலவர்களே! ஒரே குடியைச் சேர்ந்த காவலர் போரிட எழுந்தால், எவர் தோற்றாலும் தோற்பது நும்குடியே என்று அறிவித்துப் போர்ச் சூழலைத் தம்பாட்டு மழையால் அவித்தோரும் புலவர்களே!

காவலன் கவனம் போர்ப்படை நடத்தி, நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்துவதிலேயே மையம் கொண்டபோது,  "உன்படையின் வெற்றிப் பெருமிதம் உழுபடை ஊன்று சாலால் விளைந்த வெற்றியே என்பதை எண்ணி, உழுது தாமும் உண்டு, பிறரையும் உண்பித்து வாழும் உழவர் குடியைக் காத்திடுக' என்று இடித்துரை செய்து, நாட்டுக்கு நன்மை விளைப்பதும் புலவர்தம் செந்நாவழிப்படும் பாட்டுத் திறமே ஆகும்.

மறம் மேலோங்கி, அறம் நிலைகுலையும் போதெல்லாம், தன்னலம் நோக்காது, பிறர்நலம் நாடி, அறத்தை நிலைநிறுத்தும் புலவர்களைப் போற்றாவிட்டாலும், நகையாடித் தூற்றாமலாவது இருந்தால் அறம் வாழும்;  அல்லவை வீழும்!
 

ADVERTISEMENT
ADVERTISEMENT