தமிழ்மணி

வாசமுள்ள பொன்மலர்

23rd Jan 2022 10:53 AM | -மு.சுவாமிநாதன்

ADVERTISEMENT


மனித வாழ்வில் அழகுக்காகவும், மணத்துக்காகவும், மனமகிழ்ச்சிக்காகவும் பற்பல பொருள்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றுள் முதலிடம் பெறுவது மலரே ஆகும்.

கபிலரின் "குறஞ்சிப் பாட்டு' 999 வகை மலர்களின் பெயர்களைக் கூறுகிறது. ஆனால், வண்ணம், மணம், வடிவம் எனும் அடிப்படையில் சில வகைகளே உள்ளன. மணம் தரும் மலர்களையே  எல்லோரும் விரும்புவர். 

இறைவழிபாட்டுக்கும் மணமலர்களே  பயன்படுத்தப்பெறும். மணத்தில் வேறுவேறு வகை இருக்கலாம். ஆனால், மணமிகு மலர்களே சிறப்புப் பெறுகின்றன.

மணமுள்ள மலரின் உயர்வை, சிறப்பை ஸ்ரீகுமரகுருபரர் தம் இலக்கியமாகிய "நீதிநெறி விளக்க'த்தில் வேறொரு பொருண்மையை விளக்கப்  பயன்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

கல்வி, கற்றதை உய்த்துணர்தல், உய்த்துணர்ந்ததை எடுத்துரைக்கும் ஆற்றல் ஆகிய மூன்று பொருண்மைகளை விளக்குகிறார் குமரகுருபரர். கல்வியின் ஆழமும், விரிவும் எவ்வளவு பெரியதாயினும், இடம் அறிந்து உய்த்துணரும் ஆற்றல் இல்லையாயின் அதனால் பயனேதும் இல்லை. உய்த்துணர்ந்தாலும் அதனைப் பிறர் அறிய எடுத்துரைக்கும் ஆற்றல் இல்லையாயின் அதுவும் பயன்தராது.

விரிவாகக் கற்க வேண்டும்; இடமறிந்து உய்த்துணர வேண்டும்; விரித்துரைக்கும் சொல்வன்மை மிக அவசியம். இவை ஒன்றாகச் சேர்ந்து ஆற்றலாக வெளிப்படும்போது, அது எப்படிச் சிறப்புற்றிருக்கும்?

ஒரு மலர். அது தங்கத்தால் செய்யப்பெற்றது. அதற்கு மணமும் இருக்கிறது. தங்கத்தால் உயர்வும் பெருமையும், மணத்தால் விரும்பத்தக்க இயல்பும் இருப்பது அம்மலரின் சிறப்பை மீயுயர் நிலைக்குச் செலுத்தும்.

குமரகுருபரர், கற்று, உய்த்துணரும் ஆற்றலை பொன்மலரோடும், சொல்வன்மையை அம்மலரால் பெறும் மணத்தோடும் உவமித்து, மணமிக்க - வாசமுள்ள பொன்மலர் போல இருக்கும் என்கிறார்.

எத்துணைய வாயினும் கல்வி இடமறிந்து உய்த்துணர் வில்லதனின் இல்லாகும்-உய்த்துணர்ந்தும் சொல்வன்மை இன்றெனின் என்னாகும் அஃதுண்டேல்
பொன்மலர் நாற்றம் உடைத்து!

ADVERTISEMENT
ADVERTISEMENT