தமிழ்மணி

சமய, சமரச இலக்கியப் புறா! 

16th Jan 2022 07:34 PM | கிருங்கை சேதுபதி

ADVERTISEMENT

 

சமயம் கடந்த சமரச நோக்கோடு இலக்கியங்களைக் கண்டு உலகிற்குக் காட்டிய தமிழ் அறிஞர்கள் பலர். அவர்களுள் குறிக்கத்தக்கவர் மு.மு.இஸ்மாயில். 

நாகூரில், 08.2.1921 அன்று பிறந்த இவர், இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர். ஈன்றவர்களிடமிருந்து பெறவேண்டிய இனிய மாண்புகளை இலக்கியங்களின் வழியாகப் பயின்று வளர்ந்தவர். நீதிமன்றத்தில் மட்டுமின்றி, கம்பன் கழகங்களிலும் நீதியரசராகவே இருந்து பல நல்ல தீர்ப்புகளை வழங்கிச் சுவைஞர்களைக்  கவர்ந்தவர். வாழ்வியல் பாங்கோடு கம்பராமாயணத்தை கருதிப் பார்க்கும் அவர், இஸ்லாமிய நெறியோடு பிற சமய நெறிகளை இணைத்துப் பேசியும், எழுதியும் வாழ்ந்தவர்.

மொழி சமயத்திற்கு அப்பாற்பட்டது. இந்து, பெüத்தர், சமணர், கிறித்தவர், முஸ்லீம் ஆகிய பல மதத்தினரும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டதன் காரணமாகவே தமிழில் பெரும் அறிஞர்களாகவும், கவிஞர்களாகவும், இலக்கியக் கர்த்தாக்களாகவும் இருந்திருக்கிறார்கள்; இன்னும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சமய பேதமின்றித் தமிழ் பொது மொழியாவதோடு, தமிழ் இலக்கியங்கள் பொதுச்சொத்தும் ஆகும் என்ற கொள்கையுடையவர்.

ADVERTISEMENT

சென்னைக் கம்பன் கழகத்துத் தலைவராக அவர் இருந்த காலத்தில், எத்தனையோ  இளந்தலைமுறைப் பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் அடையாளங்கண்டு உலகறியச் செய்வதற்குத் தானும் ஒரு காரணரானவர். திருக்குறள், கம்பராமாயணம்,  சிலப்பதிகாரம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி, இவற்றோடு சீறாப்புராணத்தையும் இளந்தலைமுறையினர் பயிலச்செய்த, செய்கிற பெருமை சென்னைக் கம்பன் கழகத்திற்கு உண்டு. 

எளிமையும், அன்பும், வாய்மையும் நிறைந்த இசுலாமியப் பெரியவர் அவர். அவர் எழுதி, சென்னைக் கம்பன் கழக நிகழ்வுகளில் வெளியிட்ட நூல்கள் பலவாகும். அவற்றுள் ஒன்று,  "தாயினும்...' அதில் குறிப்பிடும் அவர்தம் அனுபவமும், இலக்கிய உண்மையும் என்றும் நினைந்து போற்றுதற்குரியனவாகும்.

""ஒன்பது வயதில் ஈன்றவளை இழந்த எனக்கு, "அன்னையின் அன்பும் அரவணைப்பும் இல்லையே' என்ற ஏக்கமும், "அவள் இருந்து அவளுக்குப் பணிவிடை செய்தோ, நாம் வளர்ந்த நம்முடைய வாழ்க்கையைக்கொண்டு அவளை மகிழ்விக்கவோ, வாய்ப்பு அற்றவனாக ஆகிவிட்டோமே' என்ற ஆதங்கமும் கணம்கூட மறையாத ஒன்று. இந்த இயற்கையான சிந்தனைச் சூழலில், வளர்ந்துகொண்டிருக்கும் எனக்கு நான் படித்தவையும், கேட்டவையும் அந்த ஏக்க (ஆதங்க)த் தீயில் நெய் ஊற்றுவன போலவே அமைந்தன. இஸ்லாத்தின் திருத்தூதரான முகம்மது நபி (ஸல்) அவர்கள், "உங்கள் சுவர்க்கம், உங்கள் மாதாவின் பாதங்களின் அடியில் அமைந்திருக்கிறது' என்று கூறிப் போந்ததுவும், இவ்வுணர்வுக்கு ஒப்பற்ற தூண்டுகோலாக அமைந்தது. சூழ்ந்திருக்கும் இயற்கையும், இதற்கு வலுவூட்டுவதாகவே அமைந்தது. அத்தகைய தாயினுடைய தன்மையை அருளித் தந்தவன், அவளையும்விட அருளில் உயர்ந்த இறைவனாகத்தான் இருக்க முடியும் என்ற எண்ணமும் உள்ளத்தில் அசைக்க முடியாத இடம் பெற்றுவிட்டது. 

இதன் விளைவே, "கண்ஞ்ட்ற் ர்ச் டஹய்க்ண்ழ்ம்ஹப்ஹண்' என்ற இதழுக்கு ஒரு கட்டுரை எழுதித் தரவேண்டும் என்று தன்னைக் கேட்டபொழுது அவர் எழுதித் தந்த ஒரு கட்டுரையின் தலைப்பு, "தாயினும்...'

"பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப்பரிந்து' என்ற மணிவாசகர் வாக்கையும், "தாயினும் நல்லான்' என்ற கம்பர் வாக்கையும் இணைத்து நினைக்கத் தூண்டும் இத்தலைப்புக்கு விளக்கம் அளித்து அவர் எழுதுகிற அக்கட்டுரையில், "தாய் அவன் உலகுக்கு' (1:113:2), "தாயும் நீயே தந்தை நீயே' (1:50:7), "தாயானே தந்தையுமாகிய தன்மைகள் ஆயானே' (2.151.4), ஆகிய திருஞானசம்பந்தரின் பாடல்களை மேற்கோளிட்டு விளக்குகிறார். 

"தாய் அவன் எவ்வுயிர்க்கும் (6:355) "தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை' (6.650) என்பனவான அப்பரடிகளின் அருள் வாக்குகளையும், "தாய் அவளாய்த் தந்தையாகி' (7:173) எனும் சுந்தரர் வாக்கையும், குறிப்பிட்டு, சிவபுராணத்தில் "தாயிற்சிறந்த தயாவான தத்துவனே' என்றும், திருவம்மானையில் "தாயான தத்துவனை' என்றும் மணிவாசகர் குறிப்பிடும் தொடர்களையும் விளக்குகிறார். மேலும், "அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே அழும் குழவி' என்ற குலசேகராழ்வார்தம் பெருமாள் திருமொழியையும், அதனோடு ஒப்பத் தோன்றும் வள்ளற்பெருமானின் "தந்தை அடித்தால் தாய் அணைப்பள்' என்ற வாக்கையும் இணைத்துச் சிந்தித்து இறைவனின் பெருங்கருணையினை நபிகள்(ஸல்) பெருமானின் வரலாற்றோடு நினைவுபடுத்திக் காட்டுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) பிரிய தோழர்களோடு ஓரிடத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவசரமாக அங்கு வந்து சேர்ந்த நண்பர் ஒருவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பார்த்து, ""பெருமானார் அவர்களே! ஒரு விசித்திரச் செய்தி'' என்றார்.அச்செய்தி என்னவென்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

வந்த நண்பர் சொன்னார்: ""நான் வந்து கொண்டிருந்தபோது வழியில் புதரொன்றிலிருந்து விசித்திர ஒலி ஒன்றைக் கேட்டேன். அருகில் நெருங்கியபோது இரண்டு சின்னஞ்சிறு புறாக்குஞ்சுகள் ஒரு கூட்டில் இருப்பதைக் கண்டேன். அவற்றை எடுத்து எனது போர்வையில் சுருட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். அதற்குள் எங்கிருந்தோ தாய்ப்புறா வந்துவிட்டது. தனது குஞ்சுகளைக் காணாது வீறிட்டலறிக்கொண்டு அங்குமிங்கும் பறந்தது. எனக்கு மேலே அது வந்தபோது, எனது துப்பட்டாவை விலக்கினேன். என்ன ஆச்சரியம், தாய்ப்புறாவும் எனது துப்பட்டாவுள் புகுந்து தனது குஞ்சுககள் மீது சிறகைப் பரப்பிப் பாதுகாக்கத் தொடங்கிவிட்டது. இதோ பாருங்கள்'' என்று திறந்து காட்டினார்.

அதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "'நீங்கள் மீண்டும் இவற்றைக் கொண்டுபோய் அவற்றின் கூட்டில் சேர்ப்பித்து விடுங்கள்'' என்று கூறினார்கள். இப்படிக் கூறிவிட்டு, திடீரெனச் சிந்தனையில் ஆழ்ந்து சிறிது நேரம் மெüனமாக இருந்தபிறகு பெருமானார், தோழர்களை நோக்கி, நெகிழ்ந்த தழுதழுத்த குரலில் சொன்னார்கள்: 

""தாயின் அன்புதான் எவ்வளவு உன்னதமானது! இந்தத் தாய்ப்புறா தனது குஞ்சுகளுக்காகச் செய்ய முனைந்த தியாகமும், அது செய்த முயற்சியும்தான் எத்தகையது! ஆனால் தோழர்களே, இறைவன் தனது படைப்பினங்கள் மீது கொண்டுள்ள அன்பு உண்டே, அது தாயன்பினும் மிக மிகப்பெரியது; அளவிட 
முடியாதது!''

இதனைப் பரிபூரணமாகவே உணர்ந்தவர்கள் இவ்வுலகில் தோன்றிய அறிஞர்களும், ஞானிகளும் ஆவார்கள். அதன் காரணமாகவே அவர்கள் தாம் பாடிய, எழுதிய பக்திப் பாடல்களிலும், பாசுரங்களிலும் இறைவனைத் தாயாகவும், தாய்க்கும் மிக்கவனாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் (மு.மு. இஸ்மாயில், தாயினும்... பக்.10-11) என்று விளக்குகிறார்.

இத்தகைய பக்திமை நிறைந்த பார்வை எல்லாச் சமயத்தார்க்கும் வாய்க்க வேண்டும். "ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள் உலகின்பக் கேளி' என்ற மகாகவி பாரதி மரபில், "என்றுமுள தென்தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட யாவருக்கும் இந்தப் பொதுமைநெறி வசப்பட வேண்டும்' என்றும், உயரிய நோக்கோடு இஸ்லாமியப் பேரறிஞர் மு.மு.இஸ்மாயில் ஆற்றிய இலக்கியப் பணிகளில் சமய சமரசப் புறா சிறகு விரித்துப் பறப்பதைப் பார்க்க முடிகிறது.
தானே ஒரு சமய சமரசப் புறாவாக இருந்து தமிழ் வளர்த்த மு.மு.இஸ்மாயிலுக்கு, நாளை நினைவு நாள்.(17.01.2022) பெரிதாய்க் கொண்டாட முடியாமல், சென்ற ஆண்டோடு முடிந்தது, அவர்தம் நூற்றாண்டு (1921-2021).

Tags : Tamilmani
ADVERTISEMENT
ADVERTISEMENT