தமிழ்மணி

அருந்ததி ஏன் வடக்கிருந்தாள்?

16th Jan 2022 07:36 PM | -முனைவர் இரா. மாது

ADVERTISEMENT


பாண்டியன் கோமாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி குலசேகரனுக்குப் படைத்தலைவனாகவும் அமைச்சனாகவும் இருந்தவன் வாணன். அவன்ஆளுகைக்குக்கீழ் மாறை என்ற நாடு இருந்தது. 

அந்த நாட்டின் தலைநகர் தஞ்சாக்கூர். இது சோழநாட்டுத் தஞ்சாவூர்அன்று. "மதுரையிலிருந்து மானாமதுரை போகும் வழியில் திருப்பாச்சேத்தி என்னும் ஊருக்கு அருகே உள்ளதாகும்' என்பது "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. வின் கூற்று. தென்காசிக்கு அருகிலுள்ளது என்பதும் ஒருசிலர் கருத்து.

கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொய்யாமொழிப் புலவர் இயற்றிய "தஞ்சைவாணன் கோவை' எனும் நூல் இவ்வாணனின்அருமை பெருமைகளை விவரிக்கின்றது.

மற்றொன்று, அருந்ததி குறித்தும், அவள் கற்பின் திறம் குறித்தும் பண்டைய தமிழ் நூல்கள் பலவாறாக எடுத்தியம்புகின்றன. 

ADVERTISEMENT

புறநானூற்றில் மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிக் கபிலர் பாடிய பாடலில்,

வடமீன் புரையும் கற்பின் மடமொழி
அரிவைதோள் அளவு அல்லதை
நினதென இல்லைநீ பெருமிதத்தையே
என்றுவானில் வடபகுதியில் தோன்றும்
விண்மீன் அருந்ததி
என்கின்றார். 

சிலப்பதிகாரம் புகார்க் காண்டத்தில், மங்கல வாழ்த்துப் பாடலில் கண்ணகியை அறிமுகப்படுத்துகின்றபோது, "தீதிலா வடமீனின் திறம் இவள்திறம்' என்றும், பாராட்டும்போது, "வானத்துச் சாலிஒரு மீன்தகையாளை' என்றும்,  "அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை' என்றும், கூறுகின்றார்.

இராமன் சீதைக்குக் காட்டின் அழகினைக் காட்டும்போது, சீதையை, "சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளியதிருவே' என்று விளிப்பதாகக் கம்பர் எழுதுகின்றார். அருந்ததி போல் கற்பில் சிறந்தவள் திருமுடிக்காரியின் மனைவி என்று கபிலரும், கண்ணகியின் கற்புத்திறமும் அருந்ததியின் கற்புத்திறமும் நேர் என்று இளங்கோவும், அருந்ததிக்குச் சீலம் அருளியவள் சீதையென்று கம்பரும் உரைக்க, பொய்யாமொழிப் புலவரோ, அருந்ததி ஏன் வடதிசை நோக்கினாள் என்பதற்கு வேறொரு சுவையான காரணத்தை இயம்புகின்றார்.

கணவனோடு சேர்ந்து இல்லறம் நடத்திவரும் தலைமகளைக் காண்பதற்காகச் சென்று வந்த செவிலி, அவள் கற்புக் குறித்து நற்றாய்க்கு உணர்த்துவதாக அமைந்துள்ள செய்யுளில்,

ஒன்றோ நமக்கு வந்து எய்திய 
நன்மை உடன்று எதிர்ந்தார்
வன்தோல் அமர்வென்ற வாட்படை
வாணன் தென்மாறை யில்வாழ்
நின்தோகை கற்பின் நிலைமை
 எண்ணாது எதிர்நின்று வெந்நிட்டு
அன்றோ வடக்கிருந்தாள் 
மடப்பாவை அருந்ததியே

என்று கூறுகின்றார். போரில் தோல்வியடைந்தோர் வடக்கிருத்தல் உண்டு. 

அதுபோல, வாணன் நாட்டில் வாழும் உன் மகளின் கற்புத்திறத்துக்கு ஒப்ப நிற்க நினைத்து இயலாமையால் அருந்ததி வடக்கிருக்கிறாள் என்றாள் செவிலி. 

தம் முன்னோர் மொழிபொருளையெல்லாம் நன்குகற்று, அவற்றைத்தான் இயற்றும் காப்பியத்தில் மேலும் அழகுபடுத்தி உரைக்கின்ற கவிஞன் பெருங்கவிஞனாகத் திகழ்கிறான். 

பொய்யாமொழிப் புலவனின் 
கூற்றில் பொய்யிருக்குமா என்ன?

Tags : tamilmani
ADVERTISEMENT
ADVERTISEMENT