தமிழ்மணி

இந்த வார கலாரசிகன் - (04-12-2022)

DIN

கொள்ளைநோய்த்தொற்று காரணமாக, பாரதியாரின் அவதார தினத்தன்று மூன்று ஆண்டுகளாக அவர் பிறந்த எட்டயபுரம் செல்ல முடியாமல் போனதில் எனக்கு வருத்தம். அந்தக் குறை இந்த ஆண்டு தீர இருக்கிறது. வரும் ஞாயிறன்று, பாரதி அன்பர்களுடன் எட்டயபுரம் பாரதியார் இல்லத்தில் மரியாதை செலுத்தவும், அதையடுத்து மணிமண்டபத்துக்கு ஊர்வலமாகச் சென்று அங்கே அஞ்சலி செலுத்தவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். 

தினமணியின் "மகாகவி பாரதியார் விருது' வழங்கும் நிகழ்வு, வழக்கமாக எட்டயபுரம் மணிமண்டபத்தில் நடைபெறும். இந்த ஆண்டு, அதில் சிறிய மாற்றம். விருது வழங்கும் நிகழ்ச்சி, மாலையில் தூத்துக்குடியில் நடைபெற இருக்கிறது. தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்க இசைந்திருக்கிறார். இந்த ஆண்டு விருது பெறுபவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். 

சீனி. விசுவநாதன், இளசை மணியன், பெ.சு. மணி, கணபதிராமன் ஆகியோர் வரிசையில் பாரதியார் குறித்த பல அரிய தகவல்களை திரட்டியதில் பெரும் பங்கு வகிக்கும் ஆ.இரா.வேங்கடாசலபதி தமிழகத்தின் ஆய்வறிஞர்களில் ஒருவர். தில்லி ஜவாஹர்லால் பல்கலை.யில் முனைவர் பட்டம் பெற்ற இவர், சமீபத்தில் அவர் பேராசிரியராகப் பணிபுரியும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

பாரதி படைப்புகள் குறித்து விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் வேங்கடாசலபதி. "பாரதியார் கருத்துப் படங்கள்', "வ.உ.சி.யும் பாரதியும்', "பாரதி கருவூலம்', "எழுக, நீ புலவன்!', "பாரதி. கவிஞனும் காப்புரிமையும் - பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு', "பாரதியின் விஜயா கட்டுரைகள்' - என இவரது நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்து சிறப்பு கவனம் பெற்றவை. பாரதி இயல் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பாரதியார், புதுமைப்பித்தன் குறித்து ஆய்வு நடத்துவதையே தனது வாழ்நாள் குறிக்கோளாகக் கருதி செயல்படும் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இந்த ஆண்டின் "தினமணி' மகாகவி பாரதியார் விருது வழங்கப்பட இருக்கிறது. காலையில் எட்டயபுரம் பாரதியார் விழாவில் கலந்து கொள்ளும் அன்பர்கள், மாலையில் தூத்துக்குடியில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியிலும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள். 

எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லத்தில் 11.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலையில் சந்திப்போம்!

---------------------------------------------

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டு - தொல்லியல் துறையின் முன்னாள் தலைவர் புலவர் செ. இராசு தொகுத்திருக்கும் "கொங்கு நாட்டுப் பட்டக்காரர்களும் பாளையக்காரர்களும்' என்கிற புத்தகத்தை எனக்கு அனுப்பித் தந்திருந்தார் நண்பர் சங்கர் வாணவராயர். அவர்களது வாணவராயர் ஃபௌண்டேஷனின் பங்களிப்புடன் வெளிவந்திருக்கும் நூல் இது. 

பிரிட்டிஷார் இந்தியாவை காலனியாக்க முற்பட்ட நேரத்தில், அதாவது 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் 40 வட்டாரத் தலைவர்கள் ஆட்சி பரிபாலனம் செய்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் நாயக்கர் என்று அழைக்கப்பட்டனர். கவுண்டர், மன்றாடி, வாணவராயர் உள்ளிட்ட பட்டங்களுடன் ஆட்சி செய்து வந்தவர்களும் உண்டு. அவர்கள் குறித்த முழுமையான வரலாறோ, குறிப்புகளோ முறையாகத் திரட்டப்படவில்லை, பதிவு செய்யப்படவில்லை என்கிற குறை இருந்து வருகிறது.

19-ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட மெக்கன்ஸி குறிப்புகளின் அடிப்படையில், களஆய்வு மேற்கொண்டு பல தரவுகளின் அடிப்படையில் இந்த நூலைத் தொகுத்திருக்கிறார் புலவர் செ. இராசு. "இது மிக விரிவான நூல் அல்ல. இது ஒரு தொடக்க முயற்சியே. எதிர்வரும் ஆய்வாளர்கள் இப்பணியைத் தொடர்ந்து மேற்கொள்வது அவசியம்' என்று வலியுறுத்தும் புலவர் இராசு, 11 பட்டக்காரர்கள், 29 பாளையக்காரர்கள் குறித்த அரிய பல தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். 

"நாயக்கர் என்பது விஜயநகர அரசின் காலத்தில் (1350-1650) போர்த் தலைவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட பட்டம். அப்பொழுது இது சாதிப்பட்டம் அல்ல. இதில் பிராமணர், வேடர், யாதவர், பலிஜர், வேளாண் சாதியினர் எனப் பல சமூகத்தினரும் அடங்குவர். அவர்கள் போர்த் தொழிலால் நாயக்கர் பட்டம் பெற்றனர். பிற்காலத்தில் அதுவே சாதிப்பட்டமாக மாறியது' என்கிறார் அறிமுக உரை வழங்கி இருக்கும் பேராசிரியர் முனைவர் எ. சுப்பராயலு.

அது பட்டக்காரர்களானாலும், பாளையக்காரர்கள் ஆனாலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள 40 முக்கியமானவர்களின் வம்சாவளி, நிர்வாக சாதனை, தனிப்பட்ட சிறப்பு என்று அவர்கள் குறித்த வரலாற்றுப் பதிவை காட்சிப்படுத்தியிருக்கிறார் புலவர் இராசு. தனது வயதைப் பொருட்படுத்தாமல், வருங்கால சந்ததியினருக்கு இந்த வரலாற்றுப் பதிவைத் தந்திருக்கிறார். கொங்கு மண்டலம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் புலவர் இராசுவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

---------------------------------------------

கவிஞர் ஜெயபாஸ்கரனின், "ஜெயபாஸ்கரன் கவிதைகள்', "மனைவியானேன் மகளே', "சொல்லாயணம்', "வரவேண்டாம் என் மகனே' ஆகிய நான்கு கவிதை நூல்களும் "ஜெயபாஸ்கரன் கவிதைகள்' என்கிற தலைப்பில் ஒரே நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பல்வேறு இதழ்களில் வெளிவந்து வரவேற்புப் பெற்ற அந்தக் கவிதைகளை ஒரே தொகுப்பாகப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

புதுக்கவிதைகள், நெடுங்கவிதைகள், குறுங்கவிதைகள், பாடல்கள் என்று 129 கவிதைகள் கொண்ட இந்தத் தொகுதியில், பின்னுரையாக அவரது நூல்களுக்கு வழங்கப்பட்ட அணிந்துரைகளும், தன்விவரக் குறிப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்தத் தொகுப்பிலிருந்த ஒரு கவிதை இது.

அங்கே
மணலோடு வெள்ளம்
கரைபுரண்டு ஓடுகிறது
நேஷனல் ஜியாகரபியில்...
இங்கே
மணல் லோடு லாரிகளே
வெள்ளம் போல் போகின்றன
என் ஆறுகளில்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT