தமிழ்மணி

யான் செய்  புண்ணியம் அனைத்தும்...

28th Aug 2022 04:32 PM | கிருங்கை சேதுபதி 

ADVERTISEMENT

 

செய்கிற செயலின் விளைவுகளைப் பொருத்தே, அது, பாவமா, புண்ணியமா என்று அறியப்பெறுகிறது.

நல்லதே செய்தால்கூட, அது தகவிலாரைச் சென்று சேர்கிறபோது ஏற்படுகிற விளைவினால் அல்லதாகிவிடுகிறது. அதற்குத் தருமனின் வாழ்வே தக்க சான்று.

"அழுக்காறு' என்னும் பொறாமைத்தீயினுக்கு ஆட்பட்டு, சூதுபோர்க்கு அழைக்கிறான் துரியோதனன். மறப்போர் புரிந்தால் உயிர்க்கொலை நேர்ந்துவிடும் என்று அஞ்சிய தருமன், வேறு வழியின்றி இந்தப் போருக்கு இசைகிறான்.

ADVERTISEMENT

பணயப்பொருளாக அவன் வேண்டுவன எல்லாவற்றையும் வைத்து, இழப்பதுபோலக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான் தருமன். நாடு, நகரம், செல்வம் இவற்றோடு, தன்னையும் தம்பியரையும் விட்டுக் கொடுத்த தருமன், இறுதியில் பாஞ்சாலியையும் வைத்து இழக்கிறான். இவ்வாறு, மாமன் சகுனியொடு மாயச் சூதாடித் தருமன் தோற்ற கதை, தரணி அறியும்; அதன்பின் பாஞ்சாலி செய்த சபதமும் பார் அறியும்.

அதற்கும் பிறகு, தம்மை மீட்கும்பொருட்டு, மீளவும் சூதாடச் சொல்கிறாள் பாஞ்சாலி. எல்லாம் வைத்து இழந்தபிறகு, ஆடப்போகிற சூதுக்குப் பணயப் பொருளாக வைப்பதற்குத் தருமனிடம் என்ன இருக்கிறது? தன் நாடு, பொருள், தம்பியர், தாரமாகிய பாஞ்சாலி உட்பட யாவரையும் யாவற்றையும் வைத்து இழந்த தருமனுக்கு இனி ஏது கைப்பொருள்?

துரியோதனத் தம்பியர்தம் ஆசை தீர அனைத்தையும் சூதில் வைத்து "இழப்பது' போலக் "கொடுத்தவன்' அல்லவா தருமன்? மகாகவி பாரதி பாடிய பாஞ்சாலி சபதத்தில், தருமன் சூதில் அனைத்தையும் வைத்து இழந்தான். ஆனால், வில்லியார் பாரதத்தில், தருமன் கொடுத்தான் என்றே குறிக்கப் பெறுகிறான்.

எல்லாம் கொடுத்து முடித்தபிறகு, "எஞ்சி நிற்பது யாது?' என எண்ணிப் பார்க்கிறான் தருமன். கண்ணுக்கு முன்னால் பாஞ்சாலியின் மானம் காக்கக் கண்ணன் அளித்த "துணிக்கொடை' மனதுக்குள் பக்தியாக பிரவாகம் எடுக்கிறது.

இதுவரை, தான் செய்த புண்ணியத்தின் பலன் இதுவெனப் புத்தியில் உறைக்கிறது. இந்த இரு நினைவுகளும் தருமனின் சிந்தையில் வந்து புக, மீளவும் பாஞ்சாலி சொல்லியதுபோல், தருமன் சூதாடப்போகிறான். வில்லியார் பாடுகின்றார்:

சத்தியவிரதன் தானும்
தன்பெருந் தேவி சொல்லப்
பத்தியால் வணங்கி மாயன்
பன்னிரு நாமம் ஏத்தி
ஒத்தவெண் கவறு வாங்கச்
சகுனி,"யாது ஒட்டம்?' என்றான்;
புத்தியால் அவனும் "யான்செய்
புண்ணியம் அனைத்தும்' என்றான்.

சத்தியவிரதனாகிய தருமன் தனது தேவியாகிய பாஞ்சாலி சூதாடச் சொல்ல, பக்தியோடு கண்ணனை வணங்கி, அவனது பன்னிரு நாமங்கள் சொல்லிப் புகழ்ந்து பகடைக்காய்களை எடுக்கும்போது, சகுனி கேட்கிறான்: "பந்தயப்பொருள் யாது?' தருமனும் புத்தியால், "யான்செய் புண்ணியம் அனைத்தும்' என்கிறான்.

இந்தப் பாடலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சொல், "புத்தியால்'.

சூதாட நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறவனுக்கு, உணர்ச்சிதான் முன்னிற்குமே தவிரப் புத்தி வேலை செய்யாது.

இதுவரையில் தருமத்தின் நெறிபிறழாது வாழ்ந்த தருமன், அதர்மத்திற்கு வழிவகுக்கும் பாவச்செயலான சூதில் இறங்கப் போகிறான். இது சூழ்ச்சி என்பதும் தெரிகிறது; பின் விளைவும் புரிகிறது. ஆனால், சூழ்நிலைக் கைதியாகி, துரியோதனன் விரும்பும் வண்ணம் அனைத்தையும்ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, (விட்டு)க்கொடுத்த தருமன், இப்போது விழித்துக்கொள்கிறான்; புத்தி வேலை செய்கிறது. அதனால், பத்தியால் பரந்தாமனைத் துதித்துப் புத்தியால், "யான்செய் புண்ணியம் அனைத்தும்' ஒட்டமாக - பந்தயமாகவைக்கிறான்.

யான் செய் புண்ணியம் - இது முன்னர்ச் செய்த புண்ணியமா? "ஆம்' என்றால், அந்தச் "செய்த புண்ணியம்' அனைத்தும் சூதாடுதல் என்கிற பாவச் செயலால் ஒழிந்துபோயிற்று.

ஆனால், அந்தப் பாவச்செயலிலும் துரியோதனக் கூட்டத்திற்குப் பணயப் பொருள்களாகக் கொடுத்த கொடையால் வந்த புண்ணியம் இருக்கிறதே, அது, இப்போது "செய்திருக்கிற புண்ணியம்'; இதுவும் இனிச் செய்யப்போகிற சூதாடும்பாவத்திற்கு நேராகி நீங்கிப் போகிறது.

இனி வெற்றிக்குரிய பந்தயப்பொருள், இந்த வெற்றிக்குப் பிறகு செய்யப்போகும் புண்ணியம்தான்.

செய்யப்போகும் வேலைக்கு முன்கூலியாக வாங்கிச் செலவழிக்கும் முன்தொகையை ஒத்தது இது.

இதுவும் வினைத்தொகைதான்! ஆனால், இலக்கணக் குறிப்பாக வரும் வினைத்தொகையன்று. செய்த வினைக்கு ஈடாக, இப்போது செய்கிற வினையின் தொகை தொடர்ச்சியாக, இனிச் செய்யப்போகிற வினையின் தொகையாக அமைவது.

இதனை, கர்ணன் சொன்ன புண்ணியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அங்கே, "ஓவிலாது யான்செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க' என்று கர்ணன் கொடுத்ததை வாங்கிக் கொள்ள, முதிய அந்தண வேடத்தில் கண்ணன் வருகிறான்; இங்கே அனைத்தையும் தாங்கிக்கொள்ள, பன்னிரு நாமங்களால் எண்ணித் துதிக்கப்பெறும் மாய(வடிவின)னாகக் கண்ணன் வருகிறான்.

சூத்திரதாரியான கண்ணன் ஆட்டுவிக்கச் சூதாடியாகத் தர்மன் பகடைக் காயாகிறான். தருமம் வெல்லத் தருமன் மறுபடி ஆடிய சூதில் பந்தயப்பொருள், செய் புண்ணியம். இது, செய்த - செய்கின்ற புண்ணியங்களல்ல; இனிச் செய்ய போகின்ற புண்ணியமே! வென்ற பந்தயத்திற்கு ஈடாகக் காலம் முழுவதும் தருமன் செய்த புண்ணியமே, தருமம் மறுபடி வெல்ல உதவியது.

ஆக, செய்த பாவங்களையோ, புண்ணியங்களையோ கணக்கிட்டுக் கொண்டிராமல், அனைத்துக்கும் பரிகாரமாக இனிச் செய்ய வேண்டியவை யாவும் புண்ணியங்களே என்பதால், "செய் புண்ணியம் அனைத்தும்' என்கிறார், வில்லியார். பாரத தேசத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும் இதுதான் பாடம்.

பாவம் செய்தோர் பரிகாரம் செய்வதற்கு, வழிபடுதலங்களுக்குத்தான் செல்லவேண்டும் என்பதில்லை; கூட வாழ்கிற யாவருக்கும் அறவழிநின்று கொடுத்து உதவுகிற புண்ணியம் செய்தாலே போதும் என்பது இலக்கியம் உணர்த்தும் உண்மை.

ADVERTISEMENT
ADVERTISEMENT