தமிழ்மணி

பாடல் பெற்ற பாவை விளக்கு

28th Aug 2022 04:35 PM | டி.எம். இரத்தினவேல்

ADVERTISEMENT

 

அழகிய பெண் கரத்தில் ஏந்திய அகலில் எண்ணெய்யும் திரியும் இட்டு ஏற்றக் கூடிய விளக்கே "பாவை விளக்கு' ஆகும். பாவை விளக்கு  வைத்தலை முல்லைப் பாட்டு (85-86) 

பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, 
இடம் சிறந்து உயரிய எழுநிலை மாடத்து 
என்று குறிப்பிடுகிறது. நெடுநல் வாடை (101-104) 
யவனர் இயற்றிய வினை மான் பாவை கைஏற்று 
ஐ அகல் நிறைய நெய் சொரிந்து, பரூஉத்திரி கொளிஇய 

என்று கூறுகிறது.

ADVERTISEMENT

யவனர்கள் அன்ன விளக்கையும் பாவை விளக்கையும் தந்தனர் என்பதை பெரும்பாணாற்றுப் படை தெரிவிக்கிறது.

கேள்வியந்தனர் அருங்கடன் இறுத்த
வேள்வித் துணைத் தகைஇ யவனர்
ஒதிம விளக்கின் உயர் மிசைக் கொண்ட
வைகுறு மீனிற் வையத் தோன்றும் (315-318) 
என்பது அப்பாடல்.    

யவனத் தச்சரும் அவந்திக் கொல்லரும் தேவைப்பட்ட இடத்தில் நெய்யகல் விளக்கில் திரிபோட்டுக் கொளுத்தியும், அழகிய பாவை விளக்கு வைத்தும் பணிபுரிந்தனர் என்பதை பெருங்கதை (173-75) இயம்புகிறது.

வேண்டிடந் தோறும் தூண்டுதிரிகொளி இக்
கை பயிற் கொண்ட நெய்யகல் சொரியும்
யவனப் பாவை யணி விளக் கழல 
என்கிறது அப்பாடல்.

குளித்தலை அருகேயுள்ள இரத்தினகிரீஸ்வரர் சுவாமி சந்நிதிக் கெதிரில் இரண்டு பாவை விளக்குகள் உள்ளன. இரண்டு சிலைகளும் வேறுவேறு வகையாக உள்ளன. இந்தப் பாவை விளக்குகளை "ஆலத்தி வெள்ளையம்மாள்' என்று அழைக்கின்றனர்.

அகம்  86-ஆவது பாடல் மணப்பந்தலில் "மனைவிளக்கு' ஏற்றி வைக்கும் பழக்கமிருந்ததைக் குறிப்பிடுகிறது.

உழுந்து தலைப் பெய்த கொழுங்கனி மிதவை 
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரைகால்
தன் பெரும் பந்தர்த் திருமணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து மாலை தொடரிக்
கனை இருள் அகன்ற கவின் பெறு காலை
என்கிறது பாடல்.

கி.பி. 897-இல் திருமழபாடி சிவபெருமானுக்கு ஆதித்த சோழனது முதல் மனைவியான இளங்கோப் பிச்சி, வெண்கலத்தாலான அழகிய பாவை விளக்கு ஒன்றை வைத்துப் பத்துக் கழஞ்சு பொன்னும் அளித்திருக்கிறாள்.

மன்னனின் இன்னொரு மனைவி திரிபுவனமாதேவி திருப்பூந்துருத்தி, திருச்சோற்றுத்துறை ஊர்களின் சிவன் கோயில்களில் விளக்குகள் வைத்து அவற்றுக்கு நிவந்தமாகப் பொன்னும் அளித்திருக்கிறாள்.

முதல் குலோத்துங்க சோழனது படைத்தலைவர்களில் ஒருவனாக இருந்தவன், கஞ்சக்காரன் பஞ்ச நதி முடி கொண்டானான வத்தராயன்.  இவன் கோதாவரி மாவட்டம், திராட்சாராமம் ஊரிலுள்ள ஈஸ்வரனுக்கு ஒரு நந்தா விளக்கு வைத்திருக்கிறான். இதனைப் பின்வரும் கல்வெட்டுப் பாடல் அறிவிக்கின்றது.
புயல் மேவு பொழிற்றஞ்சை முதற் பஞ்ச நதிவாணன் 
                                                                                    புதல்வன் பூண்ட
வய மேவு களியாணை முடிகொண்டான் மாநெடு
                                                                     வேல் வத்தர் வேந்தன்
இயன் மேவு தோளபயற் கிருபத்தை யாண்டதனில்  
                                                                                 இடர்க் கரம்பைச்
செயன் மேவு மீச் சுரற்குத் திருநந்தா விளக்கொன்று 
                                                                                     திருத்தினா னே!

சுசீந்திரம் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் எழுந்தது. மிகப் பெரிய கோயில். இக் கோயிலில் திருமலை நாயக்கர், விஜயநகர மன்னர்களின் சிலைகள் காணப்படுகின்றன. சில தூண்களில் பாவை விளக்கேந்திய அழகான பெண்களின் சிலைகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதிசயமானதொரு "பாவை விளக்கு'  திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்க சுவாமி சந்நிதியில் இருக்கிறது. இதை "பாவை விளக்கில் ஓர் காதல் காவியம்' என்று போற்றுகிறார்கள். இப்பாவை விளக்கு தமிழகத்து வரலாறு கூறுவதோடு தன் காதல் காவியமும் கூறும் ஒர் அரசியின் உருவத்தோடு உள்ளது. 

கி.பி. 1787 முதல் 1798 வரை தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிப் புரிந்தவன் அமரசிம்மன். அப்போதைய ஆட்சியாளராக இருந்த கிழக்கிந்திய கம்பெனியார் அமரசிம்மனை நீக்கிவிட்டு, சரபோஜியை 
அரியணையில் அமர்த்தினர். 

அரசுக் கட்டில் இழந்த அமரசிம்மன், திருவிடைமருதூர் அரண்மனையில் தங்கி அப்பகுதியின் தலைவனாக இருந்து ஆட்சி புரியத் தொடங்கினான். இந்த அமர சிம்மனின் புதல்வனே பிரதாப சிம்மன். தஞ்சை மராட்டிய மன்னனாக இந்த பிரதாப சிம்மன் கி.பி. 1736 முதல் 1783 வரை ஆட்சி புரிந்தான்.

பிரதாப சிம்மனிடம் அவனது மாமன் மகள் அம்முனு அம்மணி காதல் கொண்டாள். பிரதாப சிம்மனும் அவளை விரும்பினான். 

ஆனால், இவர்களது காதலுக்குப் பற்பல இடையூறுகள் ஏற்பட்டன. மன்னன் பிரதாப சிம்மனை மணந்து பட்டத்து அரசியாகத் திகழ உறவு முறையில் பல பெண்கள் இருந்தனர். மன்னனை மணந்து கொள்ள அப்பெண்களிடையே பலத்த போட்டி இருந்தது.

இந்நிலையில் அம்முனு அம்மணி, தன் காதல் நிறைவேறி மன்னனின் கரம்பிடிக்க திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்க மூர்த்தியின் சந்நிதியில் நின்று, தன் விருப்பத்தை நிறைவேற்றினால் கோயிலில் லட்சதீபம் ஏற்றுவதாக பிரார்த்தனை செய்துகொண்டாள்.  அவளது பிரார்த்தனைக்குப் பலன் கிடைத்தது. அவள் விரும்பியபடியே உள்ளம் கவர்ந்த மன்னன் மணாளனானான். 

மணம் மிக மகிழ்ந்த அம்முனு அம்மணி தன் பிரார்த்தனையை திருவிடைமருதூர் கோயிலில் நிறைவேற்றவும் செய்தாள்.லட்ச தீபங்களின் ஒன்றாக தன்னையே பாவை விளக்காக அமைத்தாள்.

அந்த லட்ச தீப விளக்குகளில் ஒன்றாக 120 செ.மீ. உயரம் உடைய அம்முனு அம்மணியின் உருவமாக வடிக்கப்பட்ட பாவை விளக்கும் ஒன்று. மிகவும் சிறந்த அழகிய வேலைப்பாடுடன் கூடிய பாவை விளக்கு இது. 
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி சந்நிதியில்  இப்பாவை விளக்கை இன்றும்  காணலாம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT