தமிழ்மணி

மாலையில் மலரும் பூ

14th Aug 2022 04:46 PM | முனைவர் சே. கரும்பாயிரம்

ADVERTISEMENT

 


"பீர்க்கு' என்பது கொடி வகையைச் சார்ந்த தாவரமாகும். இதற்கு,  பீர் (நற்.197:2), பீரம் (அகநா.45:7), பீரை (புறநா.116:6) ஆகிய வேறு பெயர்கள் வழங்கியுள்ளதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. 

பீர்க்கில் பீர்க்கு என்றும்,  காட்டுப் பீர்க்கு என்றும் இரண்டு வகை உண்டு. பீர்க்கின் இளங்காய் உணவுக்குப் பயன்படுத்தப்படும். காட்டுப் பீர்க்கின் காய் உணவுக்குப் பயன்படுத்துவதில்லை.  

உணவுக்காகப் பயன்படுத்தும் பீர்க்குத் தானாக முளைத்து வளர்வதும் உண்டு; பயிரிடப்படுவதும் உண்டு. மரங்களுக்கு அருகிலோ, பந்தல் போடும் இடத்திலோ குழி தோண்டி அதில் விதையை இடுவர்.  அதோடு அவரை, சுரை முதலான கொடிகளின் விதைகளையும் சேர்த்து இடுவதுமுண்டு. அதற்கு "பக்குழி போடுதல்' என்று  பெயர்.

ADVERTISEMENT

பீர்க்கு முளைத்து வளர்ந்து கொடியாகி, மரம், செடிகளில் படரும். இக்கொடி, "புதலிவர் பீர்' என்று புதரிலும் (135:2), "பீரெழு முதுபாழ்' (167:10) என்று பாழ் இடத்திலும் படர்ந்து இருந்ததை அகநானூற்றுப் பாடலடிகள் எடுத்தியம்புகின்றன. இது வீட்டின் கூரையில் படர்வதுண்டு. இதனை, "பீரெழுந்து, மனைபாழ்' (அக.373:1,2) என்னும் பாடலடியால் அறியலாம். செயற்கையாகப் பந்தல் போட்ட இடத்திலும் படரும்.      

பீர்க்கம் பூ, மாலை நேரத்தில் பூக்கக் கூடியது. பூக்கத் தொடங்குவது கார்காலம். இப்பூவில் தேன் மிகுதியாக இருக்கும். அதனால் இப்பூக்களைச் சுற்றி வண்டுகள் மொய்க்கும். இதனை, "தும்பி... நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய, தாறுபடு பீர மோதி, வேறுபட நாற்ற மின்மையின்' (நற்.277:1-8) என்னும் பாடலடிகள் வேலியில் படர்ந்திருந்த பீர்க்கின் பூக்களிலுள்ள தேனை வண்டுகள்  உண்டதால் அப்பூக்கள் மணம் இல்லாமல் போனது என்று சுட்டிக்காட்டியுள்ளன. 

பீர்க்கு, கார்காலத்தில் பூக்கத் தொடங்கி கூதிர்காலத்தில் மிகுதியாகப் பூக்கும். கூதிர்காலம் என்பது ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் குறிக்கும். இக்காலத்தில் மழை மிகுதியாக இருக்கும்.  பீர்க்கம்பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை, "பொன்போற் பீரமொடு புதற்புதல் மலர' (14) என்று நெடுநல்வாடை பாடலடி உணர்த்துகின்றது. 

பீர்க்கம்பூவைப் பொன்னிறம் என்று கூறியது மஞ்சள் நிறத்தைக் குறிப்பதற்காக. இப்பூவின் மஞ்சள் நிறத்தை முன்னோர்கள் பெண்களுடைய பசலை நோய்க்கு (பீரல ரணிகொண்ட பிறைநுதல், கலித். 124:8) உவமையாகக் கூறியுள்ளனர். பசலை என்பது,  தலைவனைப் பிரிந்த தலைவிக்கு ஏற்படும் ஒருவகை நோயாகும். தலைவனைப் பிரிந்த தலைவிக்கு மாலை நேரம் வருத்தம் தரக்கூடியதாக இருப்பதால் அந்நேரத்தில் பூக்கும் இப்பூவை உவமையாகக் கூறியுள்ளது பொருத்தம் உடையதாக அமைகிறது.
கூதிர்காலத்தின் அடைமழையால் வானத்தைச் சுற்றி மேகங்கள் காணப்படும். அதனால் நிலவு, சூரியனைக் கொண்டு இரவு, பகலை அறிய முடியாது. இன்றைய காலத்தில் கடிகாரம் கொண்டு  இரவு, பகலை அறிந்து கொள்கிறோம். கடிகாரம் இல்லாத காலத்தில் முன்னோர் இயற்கையில் நிகழும் மாற்றங்களைக் கொண்டே நேரத்தை அறிந்தனர். அவ்வகையில் மாலைப்பொழுதை அறிந்து கொள்வதற்குப் பீர்க்கம்பூவே பயன்பட்டுள்ளது.   

இவ்வாறு இயற்கையோடு இயைந்த  வாழ்வில் மக்கள் தங்களுடைய பட்டறிவால் நேரத்தை அறிந்து செயல்பட்டுள்ளதை நம் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியும்போது வியப்பு மேலிடுகிறது! 

ADVERTISEMENT
ADVERTISEMENT