தமிழ்மணி

புதுமையான பிள்ளைத்தமிழ்

7th Aug 2022 03:20 PM

ADVERTISEMENT

தமிழ் இலக்கியப் புதையலைத்தேடி தமிழகமெங்கும் அலைந்தார் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது இலக்கியத் தேடலுக்கான பலன் கிடைத்தது திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீசரஸ்வதி மஹால் நூல் நிலையத்தில்தான். பழைமையான இந்நூலகத்தில்தான் கிடைத்தற்கரிய பொக்கிஷமான "சுப்பிரமணியர் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்' கிடைத்தது. இதை இயற்றியவர் காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்.
குமரகுருபரர் இயற்றிய "மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்' பிள்ளைத்தமிழ் இலக்கண மரபின்படியே உள்ளது. ஆனால் சில பிள்ளைத்தமிழ் நூல்கள் இலக்கண மரபின்படி இல்லாமல் சிற்சில மாற்றங்களுடன் புதுமையாக வெளிவந்துள்ளன.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய "ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்' , "ஸ்ரீஅம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ்' ஆகிய நூல்களின் கடவுள் வாழ்த்தில் விநாயகர் முதலிய கடவுளர்கள் இடம்பெறாமல் திருத்தொண்டர்களையே கடவுளர்களாகப் பாடி புதுமை செய்துள்ளார்.
மாதவச் சிவஞான சுவாமிகள் செய்த "செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமி'ழில் பருவத்திற்குப் பத்து பாடல்களுக்கு பதிலாக ஐந்து பாடல்களே இடம்பெற்றுள்ளன. தணிகைமணி வ.சு. செங்கல்வராயப் பிள்ளை இயற்றிய திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழில் பருவத்திற்கு ஒரு பாடல் வீதம் மொத்தம் பத்துப் பாடல்களே உள்ளன. விசயகிரி வேலச் சின்னோவையன் பாடிய "பழனி முருகன் பிள்ளைத்தமி'ழில் பருவந்தோறும் மூன்று பாடல்களே இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் "சுப்பிரமணியர் úக்ஷத்திரக்கோவைப் பிள்ளைத்தமி'ழும் இடம்பெற்றுள்ளது.
கடவுளரையோ, மக்களில் சிறந்த ஒருவரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பிள்ளைத்தமிழ் பாடப்பட வேண்டும். ஆனால் இந்நூலாசிரியர், குமரகுருபரர்போல ஒரு தலத்து இறைவனைப் பாடாமல் நூறு தலங்களில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானைப் பாடியுள்ளார். நூறு தலங்களில் உறையும் முருகப் பெருமானே இந்நூலின் பாட்டுடைத் தலைவன்.
இந்நூல் திருவாவடுதுறை ஆதீனவெளியீடாக சய ஆண்டு பங்குனித் திங்கள் (1955) வெளிவந்தது. இந்நூலாசிரியர் காஞ்சிபுரம் சிதம்பர முனிவர், மாதவச் சிவஞான சுவாமிகளின் மாணவர் பன்னிருவருள் ஒருவர். இந்நூல் மட்டுமின்றி "காஞ்சி காமாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார்.
"சுப்பிரமணியர் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்' காப்புப் பருவத்தில் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளைத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் சொன்ன வரிசையில் அமைத்துள்ளார். "வருவோர் கேட்டவரம் வரையாமலே தினம் மகிழ்ந்து தந்தருள் வள்ளல்' என்று முருகப்பெருமானைப் புகழ்ந்துள்ளார்.
செங்கீரைப் பருவத்தில் அரிய பல செய்திகளை அழகுறப் புனைந்துள்ளார். கதிர்காமத்திலுள்ள மாணிக்க கங்கையாகிய தீர்த்தத்தில் மூழ்கி முருகப்பெருமானை வழிபட்டால் ஊமை நீங்கலும், குருடர் கண் பார்த்திடலும், மலடி மைந்தர் பெறலும் இயலும் என்று பாடியுள்ளார். பாவநாசத் தலத்து அகத்திய முனிவருக்கு அனுதினமும் இறைவர் மணக்கோலம் காட்டி நிற்கும் அற்புத நிகழ்வையும் விளக்கியுள்ளார்.
தாலப்பருவத்தின் ஏழாம் பாடலில் நாரத முனிவர் சிவனிடம் தந்த மாங்கனியைப் பெற முருகப்பெருமான் மயிலேறி உலகை வலம் வந்தமையும் விநாயகர் தாய்-தந்தையை வலம் வந்தமையும், பழம் கிடைக்காத கோபத்தில் முருகன் பழநி தலத்திற்கு வந்த செய்தியும் சொல்லப்பட்டுள்ளது.
முத்தப் பருவம் ஆறாவது பாடலில், சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கு பட்டீசுவரத்தில் முத்துப்பந்தர் கொடுத்தருளிய வரலாறும், பத்தாவது பாடலில் நக்கீரர், ஒளவையார், பொய்யாமொழி, அருணகிரிநாதர், பகழிக்கூத்தர், குமரகுருபரர் முதலியோர்க்கு முருகப்பெருமான் கவிபாட அடியெடுத்துக் கொடுத்த செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இவை போன்று அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக ஏராளமான செய்திகள் "சுப்பிரமணியர் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத் தமி'ழில் உள்ளன.
-சே. ஜெயசெல்வன்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT