தமிழ்மணி

ஏற்றமிகு எண் 7

24th Apr 2022 04:42 PM | முனைவர் சீனிவாச கண்ணன்

ADVERTISEMENT


எண்ணிலக்க (டிஜிட்டல்) அடிப்படையில் இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை அமைந்துள்ளது என்று கூறினால் அது மிகையன்று. எண்ணிலக்கங்களில் ஏழுக்குத் (7) தனிச்சிறப்பு உண்டு. அன்றாட வாழ்வில், குடும்பத்தில் சிறு ஊடல் நிகழ்கின்ற வேளையில், "போதும்... போதும் ஈரேழு ஜன்மத்துக்கும் இப்போது உங்களுடன் வாழ்ந்ததே போதும்' என்று அலுத்துக் கொள்வதைக் கேட்டிருக்கலாம்.

இங்கு 2x7=14 பிறவிகள் குறிப்பால் உணர்த்தப்படுகிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளும் ஏழு சீர்களில் அன்றோ இயற்றப்பட்டுள்ளது! வள்ளுவப் பெருந்தகையும், ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து.

என்று 7-இன் மடங்கில் வாழ்க்கை (பிறவிகள்) அமைவதை ஏற்றுக் கொள்கிறார். ஆண்டாள் நாச்சியார் தம்முடைய திருப்பாவையில், "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாவோம்' என்று பாடியுள்ளார்.

பெரியாழ்வார் தம்முடைய திருமொழியில், "எந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி' என்று தம்முடைய முன்னோர்கள் ஏழு தலைமுறைகளாகத் தொடர்ந்து திருமால் தொண்டில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிடுவார். திருமங்கை மன்னன், திருமாலின் பெருமைகளைக் கூற முற்படுகையில், "கண்ணாய், ஏழுலகுக்கு உயிராய்' என்று ஏழு உலகங்களைக் குறிக்கிறார்.

ADVERTISEMENT

அவர் குறிப்பது மேல் உலகம் ஏழு (பூலோகம், புவர்லோகம், சுவர்க்க லோகம், மகாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்திய லோகம்) மற்றும் கீழ் உலகம் ஏழு (அதலம், விதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், மகாதலம், பாதாளம்) ஆகலாம்.

திருவாசகத்தின் தோரண வாயிலான சிவபுராணத்தில், மணிவாசகப் பெருமான் ஏழின் மடங்கான பதினான்கு பிறவித் தலைப்புகளை (தளைகளை) விரிவாக்கம் "புல்லாகிப் பூடாய் ..... எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்'என வரும் சிவபுராண வரிகளில் தன்னிலை விளக்கமாக 14 பிறவிகளைச் சுட்டுகிறார்.

திருமங்கை மன்னன், தான் எடுத்த பிறவிகளைப் பற்றி சொல்லும்போது, "நோற்றேன் பல்பிறவி நுன்னைக் காண்பதோர் ஆசையினால்' என்றும்; "குலந்தான் எத்தனையும் பிறந்தே இறந்து உய்த்து ஒழிந்தேன்' என்றும் பாடுவார். இவ்வாறாக உள்ள 14 பிறவித் தளைகளுக்குள்,
"மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று அப்பரடிகள் அபய ஓலமிடுகிறார். ஏனென்றால், "மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்பதை ஒளவைப் பிராட்டி போன்ற அருளாளர்கள் நன்கு அறிவர்.

தமிழ் இலக்கியங்களில் "ஏழு' என்ற எண்ணின் அடிப்படையில் பல்வேறு வாழ்வியல் பரிமாணங்கள் விளக்கப்படுகின்றன. செல் விருந்து ஓம்பும் முறை பற்றி ஆற்றுப்படை நூல்கள் கூறுகையில், விருந்தினர் விடைபெற்றுச் செல்கையில், அவர்கள் பின்னால் "ஏழு' அடி நாமும் நடந்து செல்ல வேண்டும் என்ற மரபினை வலியுறுத்துகிறது.

இசையின் சப்த ஸ்வரங்களாக ஸ, ரி, க, ம, ப, த, நி என ஏழு ஸ்வரங்கள் சுட்டப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகிய ஏழுவகை ராகங்கள் இடம்பெற்றுள்ளன.

சங்க இலக்கியங்களில் அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என ஏழாகவும், புறத்திணை - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அகப்பொருள் இலக்கியமான "உலா' எனும் சிற்றிலக்கியம் ஏழு வகைப் பருவப் பெண்களை, "பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்' என்று வகைப்படுத்துகிறது. எழினி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், அதியன் என கடையெழு வள்ளல்களின் பெருமைகளை சிறுபாணாற்றுப்படை விவரிக்கிறது.

கம்பர் இயற்றிய ஆறு காண்டங்கள், ஒட்டக்கூத்தர் இயற்றிய உத்தரகாண்டம் ஆகியன சேர்ந்து ஏழு காண்டங்களாக, வான்மீகி இயற்றிய "ஆதிகாவியம்' தமிழில் எழுதப்பட்டது.

நடையில் நின்றுயர் நாயகனான இராமபிரான் எண்ணிக்கையில் திருமாலின் ஏழாவது அவதாரம் அன்றோ?

இராமனைக் காட்டுக்குப் போகச் சொல்லும் கைகேயி, "ஏழிரண்டாண்டில் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்' எனும் பாடல் வரியில் ஏழு எனும் எண் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இராமனின் வலிமையைச் சோதிக்க விரும்பிய சுக்ரீவன் ஏழு மராமரங்களை ஒரே அம்பினால் துளைக்குமாறு இராமனை வேண்டுகிறான்.

வைதீக முறைப்படி நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணின் கால் கட்டை விரலை மணமகன் பிடித்து "ஏழு அடிகள்' மணமகளை நடக்கச் செய்யும் "ஸப்தபதி' எனும் சடங்கு நடைபெறுவதுண்டு. இரவில் ஆகாயத்தில் வடகிழக்குப் பகுதியில் தோன்றும் ஏழு நட்சத்திரத் தொகுப்பிற்கு "ஸப்தரிஷி மண்டலம்' என்பது பெயர்.

காஞ்சிபுரம் உட்பட ஏழு நகரங்களை முக்தி தரும் தலங்கள் என்பர். பூமிப்பந்தின் மேற்புறமாக ஏழு உலகங்களும், கீழ்ப்புறமாக ஏழு உலகங்களும் உண்டு என்று புராணங்கள் இயம்புகின்றன.

ஏழு வகையான கடல் உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன் பற்றி புராணங்கள் விளக்குகின்றன.

ஏழு வகையான மேகங்களைப் பற்றி "அபிதான சிந்தாமணி' அழகுற விளக்குகிறது. அளவைகள் ஏழு என்பதை வணிகர்கள் அறிவர். "ஸப்த கன்னிகள்' என்று ஏழு மாதர்குல மாணிக்கங்களை உலகோர் வணங்குவர். உலோகங்கள்கூட ஏழு வகையே!

திருஞானசம்பந்தப் பெருமானும், திருமங்கை ஆழ்வாரும் "ஏழு' எனும் எண்ணிக்கையின் அடிப்படையில் "கோயில் தேரின்' வடிவமைப்பில் பாடி மகிழ்ந்தது "திருவெழுகூற்றிருக்கை' அன்றோ? இன்றும் பெரும்பாலான மக்கள் தங்கள் வாகனங்களில் பொறிக்கப்படும் எண்களின் கூட்டுத்தொகை 7 ஆகவே இருக்க விரும்புகின்றனர். இவ்வாறு ஏட்டிலடங்கா, எண்ணிலடங்கா, எழுத்திலடங்காப் பெருமைகளைக் கொண்டது ஏழு.

ADVERTISEMENT
ADVERTISEMENT