தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (12-09-2021)

12th Sep 2021 10:53 PM

ADVERTISEMENT

 

"எனக்கு எழுத்தாசையை ஏற்படுத்தியவர் பாரதியார்தான்' என்று சொல்லிக் கொள்ளும் லட்சக்கணக்கானோரில் நானும் ஒருவன். 1964-ஆம் ஆண்டு மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவனாக நான் சேர்ந்தபோது, அந்தப் பள்ளியின் பின்னணி குறித்து என் தந்தையார் எனக்குத் தெரிவித்த தகவல்களைக் கேட்டு நானடைந்த பரவசம் கொஞ்ச நஞ்சமல்ல. என் தந்தையாருடன் சேதுபதி உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குள், பயபக்தியுடன், கோயிலுக்குள் நுழையும் பக்தனைப்போல நுழைந்ததை இப்போது நினைத்தாலும் மேனி சிலிர்க்கிறது.

சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் பின்னணி பலருக்கும் தெரியாது. பாலவநத்தம் ஜமீன்தாரும், ராமநாதபுரம் சேதுபதி அரசர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான பாண்டித்துரைத் தேவர் தமிழறிஞர். சொற்பொழிவாற்ற மதுரை மாநகருக்கு வந்த பாண்டித்துரைத் தேவர் குறிப்பெடுக்கக்  கம்பராமாயணம், திருக்குறள் பிரதிகள் கேட்டபோது கிடைக்கவில்லை. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் குறள் கிடைக்க வழியில்லா நிலைகண்டு கவலைப்பட்ட பாண்டித்துரைத் தேவர் மனமுடைந்தார். 

தமிழகமெங்கிருந்தும் அறிஞர் பெருமக்களை வரவழைத்து ஒரு மிகப் பெரிய மாநாடு கூட்டினார். அந்த அறிஞர்கள் 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூடிய இடம் சேதுபதி உயர்நிலைப் பள்ளி வளாகம். அந்தத் தமிழறிஞர்கள் கூடிய சபையில் அறிவிக்கப்பட்டு உருவானதுதான் நான்காம் தமிழ்ச் சங்கம்.

ADVERTISEMENT

"தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர், "பரிதிமாற் கலைஞர்' என்று அறியப்படும் சூரியநாராயண சாஸ்திரியார், அரசஞ் சண்முகனார், ரா. இராகவையங்கார் என்று தமிழறிஞர்கள் பலர் பாண்டித்துரைத் தேவரின் ஆதரவில் உருவாக்கிய நான்காம் தமிழ்ச் சங்கம் தோன்றிய இடத்தில் படிக்கப் போகிறோம் என்கிற பேராவல் அதிகரித்தது. மகாகவி பாரதியார் சில மாதங்கள் அங்கே ஆசிரியராகப் பணியாற்றினார் என்கிற செய்தி என்னை மேலும் பரவசப்படுத்தியது.

பாரதியாரின் மூச்சுக் காற்று உலாவிய இடம் என்பதாலோ என்னவோ, பாரதிபோல எழுத வேண்டும், அவரைப் போல கவி புனைய வேண்டும், அவரைப் போல நெஞ்சுரம் கொண்ட மனிதனாக உயர வேண்டும் என்கிற உணர்வு பள்ளிப் பருவத்தில் எனக்குள் நுழைந்து கொண்டது. பாரதியார் வகுப்பு நடத்திய அறையை தினந்தோறும் ஒரு முறை சென்று தரிசிப்பது வழக்கமானது. பாரதியின் பாடல்களை மனனம் செய்வது கடமையானது. பாரதி குறித்த செய்திகளைப் படித்துத் தெரிந்து கொள்வது ஆவலானது.

பரிதிமாற் கலைஞரின் மகன் வயிற்றுப் பெயரன் வி.ஜி.சீனிவாசன் வகுப்பாசிரியராகவும் அமைந்த பிறகு,  கேட்கவே வேண்டாம். என்னையும், என்னொத்த மாணவர்கள் சிலரையும் அவர் பாரதியின் பித்தர்களாகவே மாற்றிவிட்டார். அதற்காக அவருக்கு நான் தலைமுறைக் கடன் பட்டிருக்கிறேன். சேதுபதி பள்ளி வளாகத்தில் பாரதியார் சிலை நிறுவ வேண்டும் என்று விரும்பியவரும், முனைந்தவரும்,  அதற்காக உழைத்தவரும் எங்கள் ஆசான் வி.ஜி.சீனிவாசன்தான்.

சேதுபதி பள்ளி வளாகத்தில் உள்ள சிலைதான் பாரதியாரின் மனதுக்குகந்த சிலையாக இருக்கும். ஏனென்றால்,  நாங்கள் மாணவர்கள் பலர் மதுரை மாநகர வீதிகளில் நடந்து, அந்தச் சிலையமைக்க நன்கொடை திரட்டித் தந்திருக்கிறோம். அன்றைய தமிழக முதல்வர் எம்.பக்தவத்சலம் சிலை திறப்பு விழாவுக்கு வந்ததையும் எண்ணிப் பார்த்துப் பூரிக்கிறது மனம்.

மதுரை செல்லும் போதெல்லாம், நான் அன்னை மீனாட்சியையும் சொக்கநாதப் பெருமானையும் தரிசிக்கிறேனோ இல்லையோ, சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் உள்ள பாரதியை தரிசிக்காமல் இருந்ததே இல்லை.  நான் கற்ற தமிழ், பாரதியிடமிருந்து பெற்றது. நான் பெற்ற தமிழுணர்வும், தேசியச் சிந்தனையும் பாரதியிடமிருந்து வந்தது. பள்ளிப் பருவத்தில் தொடங்கிய பாரதியுடனான பயணம் இப்போது "தினமணி' ஆசிரியராகத் தொடர்கிறது அவ்வளவே...

பாரதியின் நினைவு நூற்றாண்டு. அதற்கு "தினமணி' நாளிதழ் ஒரு நினைவு நூற்றாண்டு மலரை எனது மேற்பார்வையில் உருவாக்கி இருக்கிறது. அதன் வெளியீட்டு விழா, "எங்கள் குல சாமி' பாரதி கொலுவிருக்கும் அந்த மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில்  நேற்று நடைபெற்றது. இது வெறும் தற்செயல் நிகழ்வா அல்லது பாரதியாரின் கட்டளையின் விளைவா? தெரியவில்லை.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்பமை அரங்க. மகாதேவனும், மாண்பமை ஜி.ஆர்.சுவாமிநாதனும் நேற்று வெளியிட்டுப் பெருமைப்படுத்திய பாரதியார் நினைவு நூற்றாண்டு மலரைத் தயாரித்ததில் நானடைந்திருக்கும் பெருமிதத்தைச் சொல்லி மாளாது. பாரதியாரை நேரில் பார்த்துப் பேசிப் பழகியவர்கள், பாரதியாரைத் தூக்கிப் பிடித்து அவரது புகழ் பரப்பியவர்கள், பாரதியியலில் தோய்ந்தவர்கள் என்று பலருடைய கட்டுரைகளையும் தேடிப்பிடித்தும், கேட்டு வாங்கியும் தொகுத்து வெளிக்கொணர்ந்திருக்கிறோம். சிலை திறப்பு விழாவின்போது ஏற்பட்ட அதே பரவசம், நேற்று அதே சேதுபதி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மலர் வெளியீட்டு விழாவின்போதும் ஏற்பட்டது.

பள்ளியிலுள்ள பாரதியார் சிலைக்கு முன்னால் நின்றபோது,  எனக்கு ஒன்று புரிந்தது - அவன் இயக்குகிறான்; நான் இயங்குகிறேன்!


"சந்தியா' நடராஜன் என்று அழைக்கப்படும் முத்தையா நடராஜனுக்கு இரண்டு முகங்கள். முதலாவது, பதிப்பாளர் என்கிற முகம். அவருக்கு எழுத்தாளர் என்கிற இரண்டாவது முகமும் உண்டு. அந்த எழுத்தாளர் முகத்தின் வெளிப்பாடுதான் அவரது "பாரதியின் பெரிய கடவுள் யார்?' என்கிற புத்தகம்.

12 கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தில் "பாரதியின் பெரிய கடவுள் யார்?' என்பது முதல் கட்டுரை. பாரதி எழுதி முற்றாக வெளிவராத நாவலான "சந்திரிகையின் கதை' குறித்த "பாரதி ஒரு சந்திரகாந்தி' இரண்டாவது கட்டுரை. ஏனைய கட்டுரைகள் பாரதியுடன் தொடர்புடையவை அல்ல.

தி.க.சி., வண்ணநிலவன்,  கலாப்பிரியா, ஓவியர் டிராட்ஸ்கி மருது, "ஞானாலாயா' கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறித்த அவரது பதிவுகள் பல புதிய தகவல்களை நமக்குத் தருகின்றன. அவர் படித்த புத்தகங்கள் குறித்த விமர்சனங்களும் கட்டுரை வடிவம் பெற்று, புத்தகத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

நாம் தலைப்புக் கட்டுரைக்கு வருவோம். பாரதியார் தனது "மனதிலுறுதி வேண்டும்...' என்று சொல்லும் பாடலில், "பெரிய கடவுள் காக்க வேண்டும்' என்று ஒரு வரி எழுதுகிறார். "பெரிய கடவுள்' என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்கிற ஆராய்ச்சியில் இறங்கி, அந்தப் பெரிய கடவுள் " பிரம்மம்' என்று நிறுவ முற்பட்டிருக்கிறார் சந்தியா நடராஜன்.

 


கவிஞர் தங்கம் மூர்த்தி தன்னைக் கவர்ந்த நூறு கவிஞர்களின் நூறு கவிதைகளைத் தேடித் தொகுத்துக் கவியாரம் ஒன்று படைத்திருக்கிறார். நான் தேர்ந்தெடுத்திருப்பது, சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற கவிஞர் பொன்.செல்வகணபதி எழுதிய கவிதை.

சென்னை
ஒரு
தலைநகரம் மட்டுமல்ல
சிலைநகரமும் கூட
இங்கே
உழைப்பாளர்கள்
சிலையில் கூட
உழைத்துக்
கொண்டுதான்
இருக்கிறார்கள்!
தலைவர்கள்
சிலையில் கூட
பேசிக்கொண்டுதான் 
இருக்கிறார்கள்!

Tags : tamilmani This Week Kalarasigan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT