தமிழ்மணி

குருவை விஞ்சலாமா சீடன்?

இராம. பரணீதரன்


"குருவை சீடன் விஞ்சலாமா?' என்று கேட்டால் விஞ்சக்கூடாது என்றுதான் பொதுவாக விடை கிடைக்கும். அப்படியானால் இராமானுஜரின் குருவான யாதவப் பிரகாசரின், "கப்யாசம் புண்டரீகம் ஏகம் அக்ஷின' என்கிற உபநிஷத தொடருக்கு "குரங்கின் பின்பாகம் போன்ற சிவந்த கண்கள்' என்று பொருள் கூறியபோது, 

இராமானுஜர், "புண்டரீகம் என்றால் தாமரை; கபி என்றால் சூரியன்; ஆசம் என்றால் மலரச் செய்தல் - சூரியனின் கதிர்களால் மலர்ந்த தாமரை மலர் போன்ற கண்களை உடையவன் பகவான் என்பதே சரியான பொருள்' என்று கூறி ஆசிரியரை விஞ்சி நின்று நிமிர்ந்தது தவறாகுமா?

கணக்கியல் அறிஞர் இராமானுஜனின் ஆசிரியர், "எந்த ஓர் எண்ணையும் அதே எண்ணால் வகுத்தால் விடை ஒன்று என்று வரும்' என்று மாணவர்களிடம் கேட்டபோது, இராமானுஜன், "அப்படியானால் 0 வை 0 ஆல் வகுத்தால் விடை ஒன்று என்று வருமா?' என்று கேட்டுத் திகைக்க வைத்தாரே... அது குற்றமாகுமா?
பொதுவாக ஆசிரியரிடம் மாணவன் அடங்கியிருந்து பாடம் கேட்பது யாவரும் ஏற்கும் நெறியாகும்.

"உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்' என்கிறது திருக்குறள். செல்வமுடையவர் முன் இல்லாதவர் தாழ்ந்து நிற்பதுபோல் ஆசிரியர் முன் மாணவன் நின்று கற்றாக வேண்டும். சரி, உடலால் பணிந்து நிற்பது பற்றிக் கவலையில்லை. ஆசிரியர் கூறுவது தவறானது என்று தெரிந்த பின்னும் அதனைப் பணிந்து நிற்பதா, துணிந்து எதிர்ப்பதா என்பதை எண்ணிப் பார்க்கும்போதுதான் நம் நினைவில் வைணவ இராமானுஜரும், கணக்கியல் வல்லுநர் இராமானுஜனும் வருகின்றனர். இருவரும் "இராமானுஜ' என்பது எதிர்பாராத பொருத்தமே.

இராமரும் விசுவாமித்திரரும் ஆசிரியர் என்ற சொல்லுக்கு ஆசு + இரியர். குற்றங்களைப் போக்குபவர் என்பது பொருள். மாணாக்கன் என்பதற்கு மாண்பினை ஆக்குவோன் என்பது பொருளாகும். 

வேள்வி காப்பதற்காக இராமனை தசரதரிடம் கேட்டு அழைத்து வந்தார் விசுவாமித்திரர். கானகம் வந்தாயிற்று. கண்ணினை இமை காப்பது போன்று இராம-இலக்குவர் வேள்வி காத்தனர். அப்போது அச்சமூட்டும் வகையில் தாடகை வருகிறாள். அவளைக் கொல்லுமாறு விசுவாமித்திரர் இராமரிடம் கூறுகிறார்.

இராமனுக்கு இது கன்னிப்போர். முதலில் "போரைத் தொடங்கும்போதே ஒரு பெண்ணைக் கொல்வது அறமாகாதே' என்று நினைக்கிறான். இராமன் நினைப்பதை உணர்ந்த முனிவர், 

"இக் கொடியாளையும் மாது என்று எண்ணுவதோ? / ஆறி நின்றது அறனன்று; அரக்கியைக் கோறி' என்றுகூறி, தாடகையைக் கொல்லப் பணிக்கிறார்.

"அறமல்லாத ஒன்றையும் நீ செய்யப் பணிந்தால் நான் செய்வது தானே அறம்' (அறன் அல்லவும் எய்தினால் அது செய்க) என்று சொல்லிவிட்டு, இராமன் தாடகை மேல் அம்பெய்தியதை (சொல் ஒக்கும் கடிய) வர்ணிக்கிறார் கம்பர். கம்ப சித்திரங்களில் இது ஒன்று. இராமன் குருவை விஞ்சுதல்

இராமனைக் காட்டிலிருந்து நாட்டுக்கு அழைத்துப் போய் ஆட்சியில் அமர்த்தும் ஆர்வக் கோளாறினால் வசிட்டர் "ஆட்சியில் அமர வா' என்று அழைத்தார். "உனக்கு ஏராளமான வாழ்வியல் உண்மைகளை விளக்கமளித்துக் கற்பித்தவன் என்கிற உரிமையில் ஆணையிடுகிறேன். அயோத்தி வந்து ஆட்சி செய்வாயாக. உனக்குரிய நாடு அது என்று இராமனை ஆணையிட்டு அழைக்கிறார். பெற்றோர் வாக்கைக் காப்பாற்றுவதைவிட, தன் ஆணையை ஏற்பதே முறையாகும்' என்றும் விளக்கம் தருகிறார். 

குருநாதர் ஆணையை புறக்கணிக்கலாமா? இராமன் குருவாகிய வசிட்டருக்கு அளித்த விடை அருமையானது.  

"சான்றவர் ஆக தன்குரவர் ஆக தாய்
போன்றவர் ஆக மெய்ப்புதல்வர் ஆக
தேன்தரு மலருளான் சிறுவ! செய்வேன் 
என்றபின் மறுக்கும் ஈட்டதோ? 

குற்றங்களை விரட்டுபவனாகிய ஆசிரியன் மாண்பினை ஆக்கும் மாணவனுக்கு குற்றத்தை உண்டாக்கலாமா? குருதான் யாவரினும் உயர்ந்தவர். "குருவாகிய நான் சொல்கிறேன் தாய், தந்தையை மதிக்கத் தேவையில்லை. ஆட்சிபுரிய வா' என்று அழைத்தது கேட்டு இராமனுக்கு சினம் பொங்கியது. அதனால்தான் வசிட்டரை "தேன் தரு மலருளான் சிறுவ' என்று அழைத்துப் பேசுகிறான்.

குருநாதரை - குல குருவை "தேன்தரு தாமரை மலரில் வாழும் பிரம்மனின் சிறுவனே' என்று விளிப்பதே இராமனின் சினத்தின் அடையாளம்தான். மாணவனை ஆசிரியர் "இன்னாரின் மகனே' என்று அழைக்கலாம்; அழைப்பது உண்டு. ஆனால், ஆசிரியரை மாணவன் "இன்னாரின் மகனே' என்று அழைப்பது முறையன்று. அதிலும், "சிறுவனே' என்று கூறுவது ஆசிரியரைக் குறை கூறுவதாக உள்ளது. இவ்வாறெல்லாம் இராமன் ஏன் பேசினான்?இராமன் குருநாதரை குறைவுபடக் கூறியது எதனால்?

வசிட்டர், "காடுறை வாழ்க்கையை விடுத்து ஆட்சிபுரிய வா' என்று அழைத்ததை இராமனால் ஏற்க இயலவில்லை. அதனால், குருநாதர் மீது சீற்றம் கொண்டான். அவனுக்கு உண்டானது அறச் சீற்றமே தவிர வேறு இல்லை. 

தாடகை வதத்தின்போது விசுவாமித்திர குருவின் பேச்சைக் கேட்டு அறம் தவறி பெண்கொலை புரிந்தான். அறமல்லாத ஒன்றினை ஆசிரியர் கட்டளை என்பதற்காகச் செய்யும் நிலை அன்றைய அவன் நிலை. இன்றைய நிலை வேறு; இராமன் உயர்ந்து விட்டான். அவன் அறத்தின் நாயகனாக நிலை உயர்ந்து நிற்கிறான். இன்றைய இராமன், ஆசிரியரே கட்டளையிட்டாலும் அதை மறுத்து நிற்கும் நிலையில் உயர்ந்த இராமன்.

"ஒழுக்கம் விழுப்பம் தரும்' என்பது பொதுமறை.  ஒழுக்கத்துடன் ஆசிரியரிடம் "பிற்றை நிலை முனியாது' பணிந்து நின்று கற்றால் விழுமிய கருத்துகளைக் கற்றறிந்து உயரலாம். அவ்வாறு உயரும்போது அறத்தைக் கடைப்பிடிக்கும் நெறிநிற்றல் வாய்க்கிறது. அப்போது அறத்தைக் கற்பித்த ஆசிரியரே அறத்தை கைவிடச் சொன்னாலும், ஆசிரியரின் சொல்லையும் மீறி அறத்தொடு நிற்கும் அருமை வாய்க்கிறது.

குருவா, அறமா என்று நினைத்துப் பார்க்கும் இராமன், அறத்தையே தலைமேல் ஏற்கிறான். "குருவை விஞ்சினால் ஒன்றும் குற்றமில்லை' என்ற ஒரு நல்ல நோக்கத்தை நிறைவேற்ற...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT