தமிழ்மணி

'அறத்தொடு நிற்கும்' தமிழ்த் திறம்!

புலவர் வே.பதுமனார்


மருதம் பாடுவதில்வல்ல ஓரம்போகியார்

அகன் ஐந்திணைகளுள் நடுநிலையானது மருதத்திணை. இதை, 'வேந்தன் மேய தீம்புனல் உலகம்' என்பார் தொல்காப்பியனார். இது வயலும் வயல் சார்ந்த நிலமும்; ஊடல் நிமித்தம் என்பதை உரிப்பொருளாகக் கொண்டது.  
உழுதும் உழுவித்தும், உண்டும் உண்பித்தும் வாழும் உழவர்களின் ஒழுக்கத்தை உலகம் உவப்பப் பாடிய புலவர் ஓரம்போகியாரே. இவர் ஓரேர் போகியார், ஒன்னார் உழவர் என்றும் அழைக்கப்பெற்றவர். இவரை ஆதரித்தவன் சேர மன்னனான ஆதன் அவினி ஆவான்.

அரிய செய்திகளை உரிய வகையில் சுட்டும் ஓரம்போகியார்

இவர்தம் மருதத்திணைப் பாடல்கள் நூறாலும் பண்டைத் தமிழர்தம் பண்பு நலன்கள் துலக்கமுறுகின்றன.

மணம் செய்து கொள்வதற்கு முன்னமே, தலைவி கற்பை உயிரெனப் போற்றுவாள் என்பதும்; தலைவனோடு ஊடல் கொள்ளக் காரணம் இருப்பினும், ஊடல் கொள்ளத் தலைவி ஒருப்படாள் என்பதும்; கற்பு மாண்புடைய மகளிர் ஊடல் கொள்வது தீமையை விளைவிக்கும் என்பதும் புலவர் பாடலால் புலப்படும் அரிய விழுமியங்களாம்.

சொல்லேர் உழவர் ஓரம்போகியார்

இல்லறம் அறத்தோடு நிற்பதால், விருப்பத்தை வேட்கை எனவும்; வேழக்கரும்பான கொறுக்கந்தட்டை வேழம் எனவும்; எப்போதும் வளைக்குள் மறைந்து வாழும் நண்டைக் கள்வன் எனவும்;  சிறு சினத்தைப் புலவி எனவும்; தலைமகளைக் கிழத்தி எனவும்; தலைவனை மகிழ்நன் எனவும் குறித்துக்காட்டும் தமிழ் மரபுச் சொல்லேர் உழவர் புலவர் ஓரம்போகியார் என்பதை அவர்தம் மருதத்திணைப் பாடல்கள் தெளிவாகக் காட்டும்.

களவைக் கற்பாக்கும் அறத்தொடு நிற்றல் துறை

தலைமக்களின் வாழ்வை நிலைநிறுத்த விழையும் தோழி முதலானோர், பிறர் அறியாமல் தலைவன்தலைவியர் காதல் ஒழுக்கத்தில் உள்ளதைத் தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தை தனயர்க்கும் எடுத்துக்கூறி, விரைவில் மணம் நிகழ்த்தும் முறையே அறத்தொடு நிற்றல் என்பர் அகப்பொருள் ஆசிரியர்.  

உள்ளதை உள்ளவாறு எடுத்து உரைப்பது அறம் அன்றோ? களவுக் காதலை கற்பு மணமாக்கும் திறம் அறம் அன்றோ?  எனவே, அன்று களவுக் காதல் வாழ்வில் அச்சமும் நடுக்கமும் நீக்கும் இந்த மரபை அறத்தொடு நிற்றல் என வழங்குவது தமிழர்க்கே உள்ள அறமாட்சியாகும்.

நண்டைக் காட்டி நன்மன்றலுக்கு வழிகோலும் தோழி:


தலைமகளின் அணுக்கமாகப் பக்கம் இருந்து நட்பாடும் தோழியைப் பாங்கி என்று சுட்டினர் தமிழர்.  தலைவனும் தலைவியும் தாமே எதிர்ப்பட்டுக் காதல் கொண்டனர் பிறர் அறியாவண்ணம்!  தலைவனும் தலைவியும் காதலில் திளைத்ததைத் தோழி  மட்டுமே  அறிவாள். தலைவன்  தலைவியை   மணந்துகொள்ள  விரும்பித் தலைவியின் இல்லத்தாரை அணுகினான். அவர்களோ மறுத்தார்கள். தலைவியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பவும் ஒப்பாது, வீட்டுக் காவலில் வைத்துவிட்டார்கள்.  தலைவன் நினைவால் நாளும் வாடிய தலைவியின் உடல் மெலிவு கண்டு, அவளுக்குத் தெய்வத்தால் நோய் பற்றியிருக்கிறது என்று கருதி, தெய்வத்துக்குப் படையலிட ஏற்பாடுகளைச் செய்தனர் பெற்றோர். இதைக்கண்ட தோழி, தலைவியின் நோய்க்குக் காரணம் தலைவனின் பிரிவே என்ற உண்மைக் காரணத்தைத் தாய்க்கு நெருக்கமான செவிலிக்கு எடுத்துச்சொல்லி அறத்தொடு நின்றாள்.

அவர்கள் வாழும் ஊர் நீர்வளம்மிக்க தீம்புனல் வயல்கள் சூழ்ந்த ஊர்.  ஆதலால், அங்கே நீர்த்துறையில் உள்ள தெய்வம், அங்கே விளையாடி ஒளிந்து கொள்ளும் நண்டு ஆகியனவற்றைக் கொண்டே தோழி, தன் தலைவியின் களவொழுக்கத்தை வெளிப்படுத்தி, களவு வாழ்வைக் கற்பு வாழ்க்கையாக மாற்ற வழி காண்கிறாள். இதனை ஐங்குறுநூற்றில் மருதம் பாடிய ஓரம்போகியார் நான்கே அடிகளில் அழகுறக் காட்டியுள்ளார்.

உண்டுறை அணங்கிவள் உறைநோய் ஆயின்
தண்சேறு கள்வன் வரிக்கும் ஊரற்கு
ஒண்தொடி நெகிழச் சாஅய்
மென்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய் 

 (ஐங். மருதம், பா.28)

"அன்னையே!  உண் நீர்த்துறைத் தெய்வம் இவள் கொண்ட நோய்க்குக் காரணம் என்று எண்ணினால், ஈரமான சேற்றைத் தன் கால்களால் அழகு செய்யும் நண்டு உள்ள ஊரனுக்கு, இவள் ஒளிசிந்தும் வளையல்கள் நெகிழ, இவள் தோள்கள் நிறம் மாறிப் பசந்து மெலிவது ஏன்? என்ற வினா எழுப்பி, ஊரனால்தலைவனால் வந்த நோய் இது'' என்று உண்மையைக் கூறினாள்.  
இவளுடைய காதல் நோய்க்கு மருந்து, இவள் காதலித்த தலைவனே என்ற தீர்வும் கூறினாள் மதி நிறைந்த தோழி. இப்படிச் சொல்வார் இருந்தால் களவுக்காதல் மங்கல இல்லறத்தில் அன்றோ மடைமாற்றம் அடைந்து விளக்கமுறும்; இருட்டில் அலைந்து எரியும் அகல்விளக்கு, குடும்ப விளக்காய் அன்றோ சுடரும்?

உள்ளுறையாய் வரும் உவமச் சிறப்பு

ஈரமான சேற்றில் நண்டு தன் கால்களால் நடக்கும்போது, சேறு அழகுபெறும் ஊரன் என்பது கருப்பொருள். நண்டுகள் நடத்தலால் சேறு அழகுபடுவதைப் போல், தலைவி தன்நோய் நீங்கி அழகு பெறுவாள் என்பது உள்ளுறை. நாலடிப் பாட்டில் நண்டைத் தலைவனாகவும், நண்டு வரிவரியாய் நடத்தல் தலைவன் வருகையையும், சேறு அழகுபடுதல் தலைவி மகிழ்வதையும் குறிப்பால் உணர்த்தும் தோழியின் மதிநுட்பத்தால் "அறத்தொடு நிற்றல்' என்னும் தமிழர் மரபு கற்பின் மணிமுடியாதலை எண்ணிப் போற்றாதார் உண்டோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT