தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (03-10-2021)

3rd Oct 2021 04:42 PM

ADVERTISEMENT

 

எனது நீண்டநாள் கனவு ஒன்று நனவாக இருக்கிறது. வாசகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேற இருக்கிறது. "இந்த வாரம்' பத்தி தொகுக்கப்பட்டு ஆறு தொகுதிகளாக வெளிவர இருக்கின்றன.

ஏறத்தாழ 12 ஆண்டுகள் தொடர்ந்து இதுபோல ஒரு பகுதி எந்தவொரு இதழிலோ, தினசரியிலோ வெளிவந்ததில்லை. ஒன்று, எழுதுபவர்களுக்குச் சலித்துவிடும் அல்லது வாசகர்களுக்குச் சலித்துவிடும். எனக்கும் "இந்த வாரம்' எழுதிச் சலிக்கவில்லை. வாசகர்களும் "இந்த வாரம்' இல்லாமல் "தமிழ்மணி' படிக்க விரும்புவதில்லை.

"இந்த வாரம்' புத்தக வடிவில் தொகுக்கப்படாமல் தள்ளிப் போனதற்கு மிக முக்கியமான காரணம் நான்தான். வாரா வாரம் சலிக்காமல் அந்தப் பத்தியை எழுதிய என்னால், நேரம் ஒதுக்கி அதற்கு ஒரு முன்னுரை வழங்கவோ, மீண்டும் ஒருமுறை படித்துப் பிழை திருத்தவோ முடியவில்லை. நாள்தோறும் தலையங்கம், தினசரி நாளிதழ் பணி, இலக்கிய நிகழ்வுகள் என்று இயங்கிக் கொண்டிருந்த என்னால், "இந்த வாரம்' தொகுப்புப் பணியில் கவனத்தைக் குவிக்க முடியாமல் போய்விட்டது.

ADVERTISEMENT

தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள் ஆறு பேர் "இந்த வாரம்' பத்தியின் வாசகர்கள். அவர்கள் அதற்கு அணிந்துரை தந்து சிறப்பித்திருக்கிறார்கள். அப்படி இருந்தும்கூட அதைப் புத்தகமாக்கி வெளிக்கொணராமல் இருந்தது எனது பொறுப்பின்மை  என்பதை ஒத்துக்கொண்டு, அவர்களிடமும் வாசகர்களிடமும்  மன்னிப்புக் கோருகிறேன்.

தமிழறிஞர்கள் ச.வே.சுப்பிரமணியம், தமிழண்ணல், இளங்குமரனார், "சிலம்பொலி' செல்லப்பனார் ஆகிய நால்வரும் அணிந்துரை தந்தவர்கள் மட்டுமல்ல, என் மீது பேரன்பு கொண்டவர்கள். "இந்த வாரம்' புத்தகமாகும்போது அதைப் பார்த்து மகிழ அவர்கள் இல்லை என்பது மிகப்பெரிய துர்ப்பாக்கியம். "இந்த வாரம்' தொகுக்கப்பட வேண்டும் என்று என்னிடம் வற்புறுத்தி வந்தவர்களில்  தி.க.சி.யும் ஒருவர். அவரும் இல்லை என்கிற வருத்தம் மேலிடுகிறது.

எல்லாவற்றையும்விட மிகப்பெரிய சோகம் என் தாயாரின் இழப்பு. கடந்த பத்தாண்டுகளாக, "இந்த வாரம்' தொகுக்கப்பட வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார். "உண்மை தெரிந்தது சொல்வேன்' தலையங்கத் தொகுப்பை முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வெளியிட்டது போல, இந்தத் தொகுப்பை யாரை வைத்து வெளியிடப் போகிறாய் என்று என்னை அடிக்கடி கேட்பார் அவர்.

"இந்த வாரம்' தொகுப்புக்கான அட்டைப்படம் வடிவமைத்து ஆறு ஆண்டுகளாகிவிட்டன. அந்த அட்டை வடிவமைப்பை அம்மா ரசித்ததும், அதை அழகு பார்த்ததும் கண் முன்னால் நிற்கிறது. வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை "இந்த வாரம்' படித்ததும், "எப்போது புத்தகமாக்கப் போகிறாய்?' என்று கேள்வி எழுப்பிவந்த என் தாயார், ஒரு கட்டத்தில் கேட்பதையே விட்டுவிட்டார். ஆனால் அவரது அடிமனதில் அந்த ஆதங்கம் இருந்திருக்கிறது.

எனது எழுத்துகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வேண்டும்  என்பதற்காக, சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த வங்கி வைப்புத் தொகையில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்திருந்தது அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு. "அம்மா' இருக்கும்போதே வெளிக்கொணர்ந்திருந்தால் மகிழ்ந்திருப்பார். அவரது ஆசையை நிறைவேற்ற எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

அதனால் இப்போது, என் தாயாரின் பெயரிலேயே ஒரு பதிப்பகம் தொடங்கி, அதன் மூலம் "இந்த வாரம்' ஆறு தொகுதிகளை வெளிக்கொணர்வது என்று முடிவெடுத்திருக்கிறேன். அதன் எல்லா வேலைகளும் முடிந்து அச்சுக்குப் போகப் பக்கங்கள் தயாராக இருக்கின்றன. ஆறு தொகுதிகளையும் மொத்தமாக வெளியிடுவது என்றும், அதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை அறிவிப்பது என்றும் முடிவு செய்திருக்கிறோம்.

மேலும் விவரங்களை அடுத்த வாரம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

 

ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்பவர் எழுதிய "தி செல்ஃபிஷ் ஜீன்' என்கிற ஆங்கில புத்தகத்தை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் படித்தபோது, அதைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். ஆசைப்பட்டேனே தவிர, அத்துடன் விட்டுவிட்டேன். அதி அற்புதமான புத்தகம் அது. பல வியப்பான தகவல்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியிருப்பார் ரிச்சர்ட் டாக்கின்ஸ்  என்கிற விலங்கியல் பேராசிரியர்.

அந்தப் புத்தகம் இப்போது "எனக்கு அதிகாரி நானா, என் ஜீனா?' என்கிற தலைப்பில் பேராசிரியர் க.மணியால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. டார்வினுடைய பரிணாமக் கோட்பாட்டை வித்தியாசமான கோணத்தில் அணுகியிருப்பார் பேராசிரியர் ரிச்சர்ட். ஐன்ஸ்டீனுடையது "சார்பியல் கோட்பாடு' என்றால், டார்வினுடையது "உயிரியல் கோட்பாடு'.

மனிதன் யார், எப்படித் தோன்றினான், மனித வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன போன்ற கேள்விகளுக்கு சார்லஸ்  டார்வினின் பரிணாமக் கொள்கை விடையளிக்கிறது. பரிணாமம் செயல்படும்  இடம் "ஜீன்' என்கிறார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். ""ஒவ்வொரு மனிதனும் ஜீனின் கைதி. ஒருவரது உடம்பின் உரிமையும் பெருமையும் ஜீன் தொகுப்பைச் சார்ந்தது. தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஜீன்கள் உடம்பை உருவாக்கி, அவற்றின் மூலம் தம்மை நிலைநிறுத்திக் கொள்கின்றன. அவற்றின் தயவில் ஒரு தன்னல வெறி காணப்படுகிறது'' என்கிறார் டாக்கின்ஸ். 

ஜீன்களுக்கும் உடம்புக்கும் சம்பந்தம் எப்படி ஏற்படுகிறது, அவை இரண்டும் எப்படி தொடர்பு கொள்கின்றன, ஜீன்கள் உடம்பை எப்படி ஆட்டிப் படைக்கின்றன என்று மனித இயக்கத்தின் ரகசிய முடிச்சுக்களை ஒவ்வொன்றாய் அவிழ்க்கிறது இந்தப் புத்தகம்.

கடல்வாழ் மீன்களைத் தவிர வேறு எந்தவொரு உயிரினமும் தன் இனத்தையே கொன்று சாப்பிடாமல் வேறு இனத்தை மட்டுமே வேட்டையாடுவது ஏன் என்று நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?  

தன்னைத்தானே அழித்துக் கொள்ள எந்தவொரு ஜீனும் விரும்பாது என்பதுதான் அதற்குக் காரணம்.

இந்தப் புத்தகத்தைப் படித்தபோது, இதனுடன் தொடர்புடைய இன்னொரு தகவலையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  வர்ணாசிரம ஜாதிப் பிரிவுகள், ஆரியர்- திராவிடர் வேறுபாடுகள், வடக்கு -தெற்கு வித்தியாசங்கள் எல்லாமே பொய் என்பதை ஜீன் நிரூபித்திருக்கிறது என்பது தெரியுமா? தெற்காசியாவிலுள்ள அனைவருடைய ஜீன்களும் ஜாதி, மத, மொழி, இன வேறுபாடில்லாமல் ஒரே போன்றவை  என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன என்பதை அரசியல்வாதிகள் வெளியில் சொல்ல மாட்டார்கள்.


யார் அந்த செழியரசு? எனக்குத் தெரியாது. நன்றாக இருக்கிறது என்று அவர் எழுதிய கவிதை ஒன்றை  எப்போதோ  நான் குறித்து வைத்திருக்கிறேன். அதிலுள்ள எதார்த்தம் எனக்குப் பிடித்திருந்தது. அந்தக் கவிதை இதுதான்-
பொட்டப்புள்ள
முண்டகட்டியா நிக்காதடி
என்று
பேத்தியை அதட்டும்
பெரியாத்தா கிழவி
கக்கத்திலேந்தி நிற்கிறாள்
அம்மணப் பேரனை..!

Tags : Tamilmani Kalarasigan this week
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT