தமிழ்மணி

முன்மழை வேண்டும்!

3rd Oct 2021 04:37 PM |  -ப. சோமசுந்தர வேலாயுதம்

ADVERTISEMENT


ஓதாது உணர்ந்த வள்ளற் பெருமான் ஆறும் மூன்றும் சேர்ந்த (ஒன்பது) வயதில் தம்மை இறைவன் பாட வைத்ததாகக் கூறியுள்ளார்.  அவர் முதலாவதாகப் பாடிய பாடல் சென்னைக் கந்தக் கோட்டத்து முருகன் திருமுன்பு "திருவோங்கு புண்ணியச் செயலோங்கி' என்னும் பாடல். "அன்பு ஓங்கி, அருள் ஓங்கி, திறலோங்கி, அறிவோங்கி மற்றுமுள்ள நல்லனவெல்லாம் ஓங்கி உய்கின்ற நாள் ஏது?' என்று கந்தக் கோட்டத்து முருகப் பெருமானிடம் கேட்பார். முதல் பாடலிலேயே இந்த உலக மாந்தர்கள் நல்லன அனைத்திலும் ஓங்கி உய்வுபெற வேண்டி முருகக் கடவுளிடம் முறையிடுவார்.

உலகத்து உயிர்கள் யாவும் வருத்தமுறாது வாழ வேண்டும் என்று இறைவனிடம் முறையிட்ட அவர், அவனுடைய திருவருள் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை அற்புதமாக ஒரு பாடலில் முறையிடுகிறார்.

பசியின்றி  வாழ்வதற்கு மழை மிக இன்றியமையாதது. மழை முறையாகப் பெய்யுமாயின் நிலத்தில் இட்ட பயிர் செழிப்புற வளர்ந்து விளைவு முற்றி உலகிற்குப் பயன்படும். "பருவத்தே பயிர் செய்' என்பது பழமொழி. மழை விளைவுக்குரிய வளம் பெறும் காலம் கழிவதற்கு முன்னே பொழியும் பருவமழை மிக்க பயன் கிடைக்குமாதலால் அதனை "முன்மழை' என்று வள்ளற் பெருமான் கூறுகிறார். 

"பூரணனே, பருவப் பயிர்க்கு அதன் பருவம் கழியுமுன்னே மழை வேண்டும். அஃதன்றிப் பருவம் கடந்து வெயில் மிகக் காய்ந்து விளைவுத்தகுதி கெட்டபின் மழை பெய்வதால் என்ன பயன் உண்டாகும்? காலத்திற் பெய்யும் நன்மழை போன்ற நின் திருவருள் இனிது பெற்றுச் சிவகதியை விளைவிக்கும் செவ்வியாகிய பெரும்பேறு இப்போது இன்றி மூப்பு நெருங்கி,  செயல் புரியாத நிலைமையடைந்த வழி, பொன் மழையாகவோ கன்மழையாகவே பெய்தாலும் பயிர்க்கு ஒரு பயனும் இல்லாமல் போகுமாறு ஆகும் காண்' என இறைவனுடைய திருவருளுக்கு ஒப்பில்லாத மழையை உவமையாக்கி உவக்கின்றார்.

ADVERTISEMENT

"காலம் கடந்த பூரணனே  காலச் சூழலில் அகப்பட்டவர்க்குக் காலம் கடந்தபின் செய்யும் அருள் பயன்படாதொழியும்' என்கிற அவரது முறையீடு அருமையிலும் அருமை.

முன்மழை வேண்டும்  பருவப்
பயிர்வெயில் மூடிக்கெட்ட
பின்மழை பேய்ந்தென்ன பேறுகண்
டாய்அந்தப்  பெற்றியைப்  போல்
நின்மழை போற்கொடை இன்றன்றி
மூப்பு நெருங்கி யக்கால்
பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை
பேய்ந் தென்ன பூரணனே!  
(திருவருண் முறையீடு) 

Tags : tamilmani முன்மழை வேண்டும்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT