தமிழ்மணி

அரிசி விலை உலை அறியுமோ?

முனைவர் மு.ஜாபர் சாதிக் அலி

இஸ்லாமியத் தமிழ்  இலக்கியங்களில் பக்திப் பரவசமூட்டும் பாடல்களைக் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களில் காணலாம். தாயுமானவரைப் போலவே தத்துவம் கலந்த ஞானப் பாடல்களைப் பாடியவர் குணங்குடி மஸ்தான் என்றழைக்கப்பட்ட  சுல்தான் அப்துல் காதர்.
தொண்டிக்கு அருகே குணங்குடி என்ற ஊரில் 1792-இல் பிறந்தவர். 21-ஆவது வயதில் ஞான தீட்சை பெற்றார். இறுதிக் காலத்தில் சென்னை தண்டையார்பேட்டையில் வாழ்ந்து மறைந்தார். அவர் வாழ்ந்ததாலேயே "தொண்டியார்பேட்டை' என்று அப்பகுதி வழங்கப்பட்டு, பின்னர் மருவி "தண்டையார்பேட்டை'யாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறுவர்.

கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் சீறாப்புராணத்திற்கு அடுத்தபடியாகக் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களே வைக்கப்பட்டுவரும் அளவிற்கு அவருடைய பாடல்கள் இலக்கியச் செல்வாக்கும் தரமும்  மிக்கவை.

சமய நல்லிணக்கத்திற்குக் குணங்குடியார் பாடிய நந்தீஸ்வரக் கண்ணி, அகத்தீசன் சதகம்  ஆகியவையும், குணங்குடியார் மீது சகோதர சமுதாயத்தவர்கள் பாடிய பாடல்களும் சான்றாகத் திகழ்கின்றன. 

அவற்றுள் "குணங்குடி மஸ்தான் சாகிபு நான்மணிமாலை', மகாவித்வான் திருத்தணிகை சரவணப் பெருமாளையர் பாடியது.

குணங்குடியாரின் மாணவராகிய சிவயோகி ஐயாசாமி முதலியார் பாடிய தோத்திரப்பாவும்  கீர்த்தனமும், வேங்கடராயப் பிள்ளைக் கவிராயர் பாடிய தோத்திரப்பா, கோவளம் அருணாசல முதலியாரின் குமாரர் சபாபதி பாடிய பஞ்சரத்னம் ஆகியவையும் அவ்வகையின.

குணங்குடியாருடைய பாடல்கள் எதார்த்தமும் ஞானமும் உடையவை என்பதற்குச் சில பாடல்களைக் குறிப்பிடலாம். இறைவனின் மேன்மைகளை அறியாத பாவிகளாய் மக்கள் இருப்பதை எண்ணி கவலை கொள்ளும் மஸ்தான் சாகிபு அதனை மக்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாகப் பாடுகிறார். 

"குரைஷிக் குலக்கொழுந் தானமகு
 மூதுநபி கொள்கை அறியாத பாவி
கொறடா தனைக்கொண்டு மாட்டினும்
அறிஞர்பின் கூடிநடவாத பாவி
அரிசிவிலை உலை அறியுமோ என்ற 
கதைபோல அகலில் படைத்த பாவி
விரிதருந் தொப்பையை விருப்பொடு 
வளர்க்கமேல் மேலும் அலைகின்ற பாவி' 
(முகியித்தீன் சதகம் பா.70)

மனிதனுக்காக இறைவன் வகுத்த கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த இறைத்தூதர் முகம்மது நபி(ஸல்)களாரின் அறிவுரைகளை அறியாத பாவிகளாக மக்களில் சிலர் உள்ளனர். அறிஞர்களுடன் கூடி நடக்கச் சொல்லி அவர்களின் கழுத்தில் கொக்கிகளைக் கொண்டு மாட்டினாலும் உடன்போகாதவர்கள். அவர்களை, அரிசியின் விலையைக் கொதிக்கும் உலை அறியாததுபோல "அகலில் படைத்த பாவி' என்கிறார்.

இந்த இடத்தில் "அகல்' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருப்பதற்கானப் பொருளை குணங்குடியாரின் பாடல்களுக்கு முழுமையாகப் பொழிப்புரை (1908) எழுதியுள்ள மா.வடிவேலு முதலியார் "அகலில்' என்றே சொல்லி அவ்விடத்தைக் கடந்துவிடுகிறார். அகலில் என்பதற்கு "அகல் விளக்கின் சிறிய ஒளி இருக்கையில் படைக்கப்பட்டவன் மனிதன்' என்று நேரிடையாகப் பொருள் கொண்டுவிட்டு கடந்தாலும் அச்சொல்லுக்கு "உடலை விட்டு நீங்குதலையுடைய (அகலில்-அகலுதல்) இந்திரியத்துளியிலிருந்து படைக்கப்பட்ட பாவி' என்று பொருள் கொள்வது சிறந்ததாக இருக்கும். விலைமதிப்புமிக்க அரிசியின் மதிப்பை உலை அறியாததுபோல, உயிரின் மதிப்பை இந்திரியம் அறியாது என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அளித்துள்ள குறிப்புரையில் "அகல்' என்னும் சொல்லை உருதுச் சொல்லாகக் கொண்டு "புத்தியில்-அறிவில் படைக்கப்பட்ட பாவி' என்று பொருள்கொள்ளச் சொல்கிறார். 

இதுபோல, எளிமையான சொற்களைப் பயன்படுத்தினாலும் நுட்பமான பொருளை வைத்து குணங்குடியார் பாடியிருப்பது அவரின் ஞானத்திற்குச் சான்று. பல இடங்களில் பேச்சு வழக்குச் சொற்களைக் கொண்டு பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் பாடல்களைப் பாடியுள்ளார் குணங்குடியார். அவர் துறவு நிலையில் வாழ்க்கைத் தத்துவங்களின் அனைத்துப் பக்கங்களையும் அறிந்த புலவர் ஞானி என்று தெளிந்த முடிபாகக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

SCROLL FOR NEXT