தமிழ்மணி

முதிர்ந்த கதிரும் குனிந்த தலையும்!

28th Nov 2021 04:59 PM | பனசை மு. சுவாமிநாதன்

ADVERTISEMENT

 

சைவ சமய அடியார் அறுபத்து மூவரின் அருள் வரலாற்றைக் காப்பியமாக "திருத்தொண்டர் புராணம்' எனும் பெயரில் தமிழ்கூறு நல்லுலகிற்குத் தந்தவர் சேக்கிழார் பெருமான். அவர்தம் தமிழ்க் கொடையில் பக்தி, வரலாறு, புவியமைப்பு, வருணனைகள், கற்பனைகள் எனப் பலவும் விரிந்து பரந்திருக்கும். அதிலுள்ள பல நூறு நயங்களுள் ஒன்றைக் காண்போம்.

சோழ நாடு வளம்மிக்க நாடு; பொன்னி நதி பாயும் பூமணம்விரி நாடு. அந்நாட்டில் நன்செய் வளம் கொழிக்கும். நீர்வளமும் நிலவளமும், மண்வளமும் ஒருமித்துச் செழித்த நாடாக அது விளங்குகிறது. மருதநில வயல் வழியே செல்லும் தெய்வக் கவிஞரின் சிந்தை ஓரிடத்தில் நிலைகொள்கிறது.

மாறாத மண் வளத்தால், பருவம் மாறாப் பொன்னி நீர்ப் பாய்ச்சலால், நெல்விதைக்கப்பட்டு, வளர்ந்து, செழித்துக் கதிர்விட்டு, அது முதிர்ந்து, அதன் சுமையால் மெல்லிய கதிர்கள் தாழ்ந்து காட்சியளிக்கின்றன. உடனே அவர்தம் சிந்தை, ஒப்பீட்டுச் சிந்தனையால் வேறொன்றைக் கண்குளிரக் காண்கிறது. கண்ட காட்சியை - மனம் நிரம்பிய அத்தகு காட்சியைப் பாட்டில் பதிவு செய்கிறார். இந்த  உலகியல் காட்சி அருளியல் காட்சிக்கு வித்திடுகிறது.

ADVERTISEMENT

"கதிர்கள் முற்றி, பாரம் தாங்காமல் தலைகுனிந்து தாழ்ந்துள்ளதே! இது, பத்திவயப்பட்டு, சிவனின் அருளுக்கு ஆட்பட்ட மெய்யடியார்கள்  தம்முள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, தலையைத் தாழ்த்தி வணங்குவதைப் போல உள்ளது' என்கிறார் சேக்கிழார். காண்பது முதிர்ந்த - முற்றிய கதிரை. அது விளைவிப்பது வேறொரு காட்சியான - தலைகுனிந்து வணங்கும் மெய்யடியார்களை. 

பத்தியின் பாலராகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்
தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்குமாபோல்
மொய்த்து நீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மைபோல விளைந்தன சாலியெல்லாம்! 
(பெ.பு.)

Tags : tamilmani
ADVERTISEMENT
ADVERTISEMENT